மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 ஜுன் 2022

விக்ரம் வாகை சூடுமா?

விக்ரம் வாகை சூடுமா?

இன்று அதிகாலை உலகம் முழுவதும் நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் விக்ரம் படம் தமிழகத்தில் 600 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா நடித்துள்ள விக்ரம் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்துக்கு மூன்று நாள்களுக்கு தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கமல் நிறுவனம் மற்றும் கமல் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தப் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் கூடுதல் ஆணையர் எஸ்.கே.பிரபாகர் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அனுமதியின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சுமார் 30,000 காட்சிகள் இன்று திரையிடப்படுகிறது.

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் விக்ரம் படத்தின் மூலமாக கோடம்பாக்க சினிமா நட்சத்திரங்களின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளார் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜீத் குமார் இவர்களது படங்கள் வெளியான பின்னர் படத்தின் வெற்றி உறுதியானால் தயாரிப்பாளருக்கு லாபம் என்பது உறுதியாகும். படத்தயாரிப்பு செலவில் 10% முதல் 25% வரை லாபத் தொகை கிடைக்கும்.

இது எல்லா படங்களிலும் சாத்தியமாகாது. ஆனால், பட வெளியீட்டுக்கு முன்பே படத்தின் பட்ஜெட் அடிப்படையில் 50% லாபத்தை பெற்று தந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019இல் வெளியாகி வெற்றிபெற்ற கைதி. இதையடுத்து அவர் இயக்கத்தில் 2021இல் வெளியான மாஸ்டர் படத்தில் இது சாத்தியமாகவில்லை. இன்று வெளியாகியுள்ள விக்ரம் படத்தில் சாத்தியமாகியுள்ளது.

சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விக்ரம் சுமார் 230 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக கமல்ஹாசன் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அவர் படங்களுக்கான வணிக மதிப்பு அல்லது அவரது சம்பளம் எவ்வளவு என்பதை தீர்மானிக்க முடியாத நிலைமையில் படத்தின் பட்ஜெட்டுக்கு (100 கோடி ரூபாய்) இணையாக வியாபாரத்தின் மூலம் 130 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் வணிகரீதியாக வெளியீட்டுக்கு முன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் முதன்முறையாக சாதனை புரிந்துள்ளது. கமல்ஹாசனின் 60 ஆண்டுக் கால திரையுலக வாழ்க்கைக்கும், சினிமா துறையில் அவரது அர்ப்பணிப்புக்குமான கௌரவமாக இது அமைந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரஜினிகாந்த், விஜய், அஜீத் குமார் ஆகியோரது படங்களுக்கான எதிர்பார்ப்பு, திரையரங்க எண்ணிக்கை, முன்பதிவு இவற்றுக்கு இணையாக எப்போதும் வெளியானது இல்லை. அதையும் விக்ரம் படம் சமன் செய்துள்ளது. 600க்கும் மேற்பட்ட திரையரங்குகள், அதிகாலை சிறப்புக்காட்சி, முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் நகர்புறங்களில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்திற்கு பின் இந்திய சினிமாவில் பிற மொழி படங்கள் வியாபாரம், வெளியீட்டுக்கு பிந்தைய நாட்களில் புஷ்பா, காஷ்மீர் பைல்ஸ், RRR, கேஜிஎஃப் போன்ற படங்கள் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழில் இருந்து கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பன்மொழி கலைஞர்கள் நடித்துள்ள விக்ரம் இடம்பெறுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 3 ஜுன் 2022