மணிரத்னம் பிறந்தநாள்: 'பொன்னியின் செல்வன்' அப்டேட் கேட்கும் ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அப்டேட் வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 'பகல் நிலவு' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னம். மதுரையில் சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமா ஆர்வம் காரணமாக சினிமா துறையில் இயக்குநராக நுழைந்தார். 'மௌனராகம்', 'நாயகன்', 'இருவர்', 'தளபதி', 'ரோஜா' எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.
'பகல் நிலவு' படத்தில் ஆரம்பித்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரை கிட்டத்தட்ட முப்பதுக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். மணிரத்னத்துக்கு மட்டுமல்ல... தமிழ் சினிமாவுக்குமே கனவு படம் என்றால் அது எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்குவது என்பதை கூறலாம். இந்தக் கதையைத் திரைப்படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என விருப்பப்பட்டு எம்ஜிஆர் உள்ளிட்ட பல நடிகர்கள் முன்னெடுத்த முயற்சி பல காரணங்களால் நடைபெறாமல் போனது.
ஆனால், இயக்குநர் மணிரத்னம் அதை சாத்தியப்படுத்தி இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துள்ளார். வந்தியத் தேவனாக நடிகர் கார்த்தியும், நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் கதாபாத்திர அறிமுகம் குறித்தான போஸ்டர்கள் வெளியானது. இந்த நிலையில் இன்று இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு படத்திலிருந்து டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.