மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 மே 2022

விக்ரம் டிக்கெட் விலை: கமல் கண்டிப்பாரா?

விக்ரம் டிக்கெட் விலை: கமல் கண்டிப்பாரா?

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் நாள் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவது சர்வசாதாரண நடைமுறையாகிவிட்டது.

ஊழலையும், லஞ்சத்தையும் கடுமையாக எதிர்த்து சினிமாவில் கதாநாயகன் பஞ்ச் வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார் கதாநாயகன். அந்தப் படத்தை பார்க்க அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிகமான பணம் கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் தலைவர் என்னம்மா பஞ்ச் டயலாக் பேசுகிறார் என கை தட்டி ரசித்துக்கொண்டிருப்பான்.

சிஸ்டம் சரியில்லை என கூறிய ரஜினிகாந்த் நடித்த படத்திற்கான டிக்கெட் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதை எப்போதும் பொதுவெளியில் விமர்சித்தது இல்லை. தனது ரசிகர்களை அதிக விலை கொடுத்து வாங்காதீர்கள் என அறிக்கை கொடுத்ததும் இல்லை. அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் அதிகரிக்கும் வசூலைச் சாதனையாகக் கொண்டாடும் பழக்கத்திற்கு தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் விதிவிலக்கல்ல.

அதிகாலை காட்சிக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் நடிகர்களைப் பொறுத்து, தட்டுப்பாட்டைப் பொறுத்து டிக்கெட் விலை 500 ரூபாய் முதல் 2000ம் வரைவிற்கப்படுவதும், அதன் மூலம் முதல் நாள் அதிகபட்ச வசூலைக் குவிக்கும் போக்கு கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடந்துவருகிறது.

இதனை கண்டும் காணாமலும் அரசு அதிகாரிகள் கடந்துபோவது வழக்கம். தற்போது ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள விக்ரம் படத்திற்குச் சென்னை முதல் கடைகோடி கிராமம் வரை என்ன விலைக்கு டிக்கெட் விற்கப்பட வேண்டும் என்பதை படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனமே திரையரங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம். தமிழகத்தில் புரையோடிப்போன லஞ்சம், ஊழலை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை அமைக்க எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என தேர்தல் களத்தில் அறை கூவல் விடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். அவர் நடித்துள்ள படத்திற்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவது விவாதப்பொருளாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள 'விக்ரம்' படம் ஜுன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்காக அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி, 7 மணி காட்சி, 8 மணி காட்சிகள் நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணி காட்சிகளுக்கான டிக்கெட் கட்டணம் 500 ரூபாய், 7 மணி, 8 மணி காட்சிகளுக்கான டிக்கெட் கட்டணம் 300 ரூபாய். அண்ணாத்தே 'பீஸ்ட், வலிமை' படங்களுக்கான டிக்கெட் கட்டணங்களாக 500, 1000 என வசூலித்தார்கள். அரசு தரப்பிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்று பல சந்தர்ப்பங்களில் தன்னை நியாயவானாகக் காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன் இந்த அநியாய கட்டணக் கொள்ளைக்குக் கண்டனம் தெரிவிப்பாரா என கேள்வி எழுப்புகிறார்கள். திமுகவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்த கமல்ஹாசன் வியாபாரம் என்று வந்த போது, இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தபோது கமல்ஹாசன் மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் அநியாய கட்டணங்களைப் பற்றி அவர் எப்படி பேசுவார் என்கிற விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளது

சினிமா ஹீரோக்கள் சினிமாவில்தான் அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுவார்கள். அவர்களின் படங்கள் வெளியாகி 500, 1000, 2000 என டிக்கெட் விற்கும் போது காணாமல் போய்விடுவார்கள் என்பது கமல்ஹாசன் விஷயத்திலும் நடக்கத்தான் போகிறது என்கின்றனர்.

இது சம்பந்தமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் விசாரித்தபோது, முன்பெல்லாம் முதல் நாள் டிக்கெட் மட்டும் அதிக விலைக்கு விற்போம். இப்போது அப்படியில்லை சிறப்பு காட்சி மட்டுமில்லை, எல்லா காட்சிகளின் டிக்கெட்டுகளும் அதிக விலைக்கு விற்கப்பட வேண்டும் என கூறித்தான் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் ஆன்லைன் முன்பதிவில் கூட அதிகரிக்கப்பட்ட விலையை குறிப்பிடுங்கள். பிரச்சினை வராது என கூறுகின்றனர்.

தமிழில் வெளியாகும் பெரிய படங்கள் எல்லாமே ரெட் ஜெயண்ட் மூலமாகவே வெளியிடப்படுகிறது.. தொடர்ந்து புதிய படங்களை தியேட்டரில் திரையிட ரெட் ஜெயண்ட் நிறுவனம் கூறுவதைக் கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முடியாது என்றால் தொழில் நடத்த முடியாது என்கின்றனர். அரசியல், பொது விஷயங்களில் நேர்மை, நியாயம் வேண்டும் என பேசி வரும் கமல்ஹாசன் தன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-இராமானுஜம்

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செவ்வாய் 31 மே 2022