மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 மே 2022

கமலை மிரட்டினேனா: உதயநிதி

கமலை மிரட்டினேனா: உதயநிதி

இந்திய சினிமாவில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் தமிழ் சினிமா விக்ரம்.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பின் வெளியான முன்னணி கதாநாயகர்கள் படங்கள் குறைந்த நாட்களில் வசூலைக் குவித்தன. படைப்பு ரீதியாகச் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் கடைசியாக வந்துள்ள சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் வரை இல்லை. அந்தக் குறையை விக்ரம் போக்கும் என்கிற எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது.

மாநகரம், கைதி வரிசையில் விக்ரம் இருக்குமா என்பதே விமர்சகர்கள் கேள்வியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விக்ரம் படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. 'பத்தல பத்தல' என தொடங்கும் பாடலை கமலே பாடி, எழுதியும் இருந்தார். அரசியல் பகடியுடன் கூடிய இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்த நிலையில் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (15.5.2022) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அப்படி ஓர் ஆச்சரியம் நடக்கவில்லை. கமல்ஹாசனுடன் படம் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 'விக்ரம்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என் படத்தின் விழா நடைபெறுகிறது. இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல; நீங்களும்தான். இன்னும் பல வேலைகள் உள்ளன. சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்ததே. நான் முழு நேர நடிகன் கிடையாது. சில நேரம் நடிக்காமல் இருந்ததால் பல இன்னல்களைச் சந்தித்துள்ளேன். விழுந்தாலும் எழுந்துவிடுவார் என்று கூறுவார்கள். எழுப்பிவிட்டது நீங்கள்தான். இந்த அரசியல் களத்தில் மாற்றத்தை நாம் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவின் அழகே பன்முகத் தன்மைதான். எல்லோரும் கைகோர்த்தால்தான் இந்தியா. என் வேலை இன்னொரு மொழி ஒழிக என்பதல்ல. தமிழ் வாழ்க என்பதே. அதற்கு யார் எதிராக நின்றாலும், எதிர்க்க வேண்டியது என் கடமை. இந்தி, குஜராத்தி கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தாய்மொழியை விட்டுக் கொடுக்காதீர்கள்" என்று பேசினார்.

விக்ரம் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், “கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஓடுற ரயிலில் நானும் இறுதியில் ஏறிக்கொண்டேன். எல்லோரும் கேட்டார்கள். படத்தைத் தர வேண்டும் என்று கமல்ஹாசனை மிரட்டினீர்களாமே என கேட்டார்கள். அப்படிலாம் மிரட்டவில்லை. அவர் மிரட்டலுக்கு பயப்படும் ஆளும் கிடையாது. நீங்கள் அரசியல் கட்சி தொடங்கிட்டீங்க. அதில் சிறப்பாகவும் செய்துகொண்டு இருக்கின்றீர்கள். இருந்தாலும் வருடத்துக்கு ஒரு படமாவது நடியுங்கள்” என்று வேண்டுகோள் வைத்து பேசினார்.

விக்ரம் படத்தில் நடித்துள்ள பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “கமல் உடன் நடிப்பேன் என கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தது. அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். நீங்க சொல்லிக் கொடுத்து நான் நடிக்க வேண்டும். இது எனது ஆசை. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது போல் சகஜமாக மற்றவர்களிடம் பேசுவார். தான் ஒரு பெரிய ஆள் என்று அவர் ஒருபோதும் காட்டியதில்லை. இதுதான் நான் அவரிடம் கற்ற முதல் பாடம். மனிதனாகவும், நடிகனாகவும் நிறைய நன்றிக்கடன்பட்டுள்ளேன். நான் நன்றாக நடிக்கணும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை. கமல் சார் உடன் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த லோகேஷுக்கு நன்றி. நீ இன்னும் பெரிய இடத்திற்கு வருவாய். பகத்திடம் அப்படி ஒரு எனர்ஜி இருந்தது. மனுஷன் பிரமாதமாக நடிக்கிறார்” என்றார்.

கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், "கமல் போன்ற சிறந்த கலைஞர் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மிகச் சிறந்ததாக பார்க்கிறேன். அனிருத் பிரமிப்பான மனிதர். மக்கள்கிட்ட நெருங்குற இசையை அவரால் தொடர்ந்து கொடுக்க முடிகிறது. தமிழ் சினிமா கன்டென்ட் இல்லாம இருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. ஒரு காலத்துல தமிழ் சினிமாதான் முன்னுதாரணமாக இருந்தது. தற்போது அதை விக்ரம் படம் பூர்த்தி செய்யும் என நம்புறேன். எனக்கு விருமாண்டி படம் பிடிக்கும். மதுரையைப் பின்னணியாக வைத்து கமல்ஹாசனுடன் ஒரு சம்பவம் செய்யணும்னு விரும்புறேன்” என்றார்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகிறபோது, “கமல் சாரை பார்த்தாலே பேச்சு வர மாட்டேன் என்கிறது. 125 நாட்கள் மொத்தம் படப்பிடிப்பு நடந்தது. அதில் 75 நாட்கள் சண்டைக்காட்சி மட்டும் இருந்தது. யாருக்கும் எந்த அடியும் படாமல் அருமையாக சண்டைக்காட்சியைப் படமாக்கிய அன்பறிவுக்கு நன்றி. நான் இன்றைக்கு சினிமாவில் இந்த தூரம் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு கமல் சாரும் ஒரு காரணம். அவரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தப் படத்தில் சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு நன்றி. நான் ஏன் அவருக்கு நன்றி சொல்கிறேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மற்ற படங்களுக்கு இணையாக இது இருக்குமா எனக் கேட்கிறார்கள். செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்க வேண்டும், நான் அப்படி தான் இந்தப் படத்தில் வேலை பார்த்துள்ளேன். படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்" என்றார்.

-இராமானுஜம்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

திங்கள் 16 மே 2022