மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

ஐபிஎல்: சென்னை அணியை எளிதில் வீழ்த்திய மும்பை!

ஐபிஎல்: சென்னை அணியை எளிதில் வீழ்த்திய மும்பை!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (மே 12) இரவு நடைபெற்ற 59ஆவது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் சென்னை அணியை எளிதில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும், ராபின் உத்தப்பா ஒரு ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .

சென்னை அணியில் கேப்டன் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் களமிறங்கிய சென்னை வீரர்கள், மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பினர்.

ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்சருக்கு அனுப்பி தோனி தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 15 ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயற்சி செய்து தோனி ஓடினார். ஆனால், அதில் ஏதிர்முனையில் இருந்த முகேஷ் சௌத்ரி ரன் அவுட்டானார்.

இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டோனி 36 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் களமிறங்கினர்.

இஷான் கிஷான் 6 ரன்களிலும், ரோஹித் சர்மா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னிலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னர் வந்த திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி 34 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி 14.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனால் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி எளிதில் வெற்றி பெற்றது.

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் நான்கில் வெற்றி, எட்டில் தோல்வி என பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இது சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (மே 13) நடைபெறும் 60ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

-ராஜ்-

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வெள்ளி 13 மே 2022