ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

entertainment

வேகமெடுத்துள்ள ஐபிஎல் 15ஆவது சீசனில் நேற்று (மே 11) மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 58ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யாஸஷ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த அஸ்வின் சிறப்பாக விளையாடினார். அவருடன் இணைந்து ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆடினார். அவர் 19 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு அவர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை இழந்தாலும் படிக்கல் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். படிக்கல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 161 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர். ஸ்ரீகர் பரத் களமிறங்கினர். தொடக்கத்தில் பரத் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னருடன் இணைந்து அற்புதமாக விளையாடினார். ஒருபுறம் வார்னர் பொறுமையுடன் ஆட, மறுபுறம் மார்ஷ் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து விளையாடிய மார்ஷ் 38 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
அரை சதம் அடித்த பிறகு வேகமாக ரன்கள் குவிக்க தொடங்கினார். இதன்பிறகு சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இதனால் டெல்லி அணி 18.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் அரைசதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்று (மே 12) 59ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது, பத்தாவது இடங்களில் இருக்கும் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.

**-ராஜ்-**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *