மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 மே 2022

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66ஆவது பொதுக்குழு கூட்டம் சாந்தோம் பள்ளியில் நேற்று (மே 8) நடைபெற்றது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கடந்த கால வரவு - செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு பல புதிய திட்டங்களுக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் நடிகர் சங்க கட்டடப் பணிகளைத் தொடங்குவதற்கான திட்டங்களையும் நடிகர் சங்க கட்டடம் ஆரம்பத்தில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்றதையும் அதில் தற்போது 70 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளது என்றும் அதற்கு 19 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாகவும் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி பொதுக்குழுவில் கூறினார்.

அத்துடன் தற்போது கட்டுமான பொருட்கள் விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மீதமிருக்கும் 30 சதவிகிதப் பணிகளை முடிக்க, மேலும் 30 கோடி ரூபாய் தேவைப்படும். வங்கிக்கடன் பெற பலரும் ஆலோசனை கூறினார்கள். அதுவே தற்போது இருக்கும் வழி. எனவே பொதுக்குழுவின் அனுமதியை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று கூறினார். செயலாளர் விஷால் பேசுகையில், அப்போதே ஆறு மாத காலம் கிடைத்திருந்தால் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும், செலவுகள் குறைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தேர்தல் முடிந்து தேவையில்லாமல் வழக்கு தொடரப்பட்டன. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை இருந்திருந்தால் கட்டடம் கட்டியிருக்கலாம், உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கலாம். ஆனால், உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்தினர். இருந்தபோதிலும் பாண்டவர் அணி கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும். விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று பேசினார்

நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகிக்கு சிறப்பு விருது கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ’தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றுள்ள ரஜினிகாந்துக்கும் பாராட்டு தெரிவித்தனர். பொதுக்குழு கூட்டத்துக்கு அவர் வரவில்லை. வீடியோ வாயிலாக நடிகர் சங்கத்துக்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். நாசர் தலைமையிலான அணியினர் திட்டமிட்டுள்ள அனைத்து பணிகளையும் முடிக்க வாழ்த்துகள் என்றும் அவர் வீடியோ வாயிலாகத் தெரிவித்திருந்தார். பொதுக்குழு கூட்டம் முடிவடைந்து நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66ஆவது பொதுக்குழு கூட்டம் இன்றைக்கு மிக, மிக சிறப்பாக நடைபெற்றது. சவுகார் ஜானகி அம்மாவுக்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக்குழு எங்களுக்கு முழு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து, நாளை முதல் முழு மூச்சாக செயலில் இறங்குவோம்” என்றார்.

சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால் பேசும்போது, “நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடிப்பதற்கான செலவுக்காக நட்சத்திர இரவு விழாவை நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை நாங்கள் பொதுக்குழுவில் இருந்து வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம்.இதுவரையிலும் 70 சதவிகிதம் கட்டடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது. இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படித் திரட்டலாம் என்று ஆலோசனை செய்து வருகிறோம்.

இது ஒருபுறமிருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் நிதி திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டடம் என்பதால் நடிகர், நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை.

அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து கட்டடத்தை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம். மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும்.

ரஜினிகாந்த் அவர்கள் தாதா சாகேப் பால்கே விருது வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல், பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பாரதி விஷ்ணுவர்த்தன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டார்கள்.

எங்களது பணியினை நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன்பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டடமாக இருக்காது. சென்னையின் ஓர் அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒரு முறையாவது நடிகர் சங்க கட்டடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வர வேண்டும். அதை மனதில் வைத்துதான் இந்தக் கட்டடத்தைக் கட்டுகிறோம்” என்றார்.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

திங்கள் 9 மே 2022