மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 மே 2022

இந்தி நடிகர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர்: சிரஞ்சீவி

இந்தி நடிகர்களே  முன்னிலைப்படுத்தப்பட்டனர்: சிரஞ்சீவி

தேசிய விருது வாங்கும் நிகழ்ச்சியில் இந்தி சினிமாவுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும். இதனால் தான் அவமானப்பட்டதாகவும் நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமா என்றால் சர்வதேச அளவில் இந்தி மொழியில் தயாரிக்கப்படும் படங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படும். இந்திய திரைப்பட தயாரிப்பு தொழிலில் அதிக முதலீடும், அதிகமான திரைப்படங்களை தயாரிக்கும் தென்னிந்திய மொழிப்படங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதில்லை. தனியார் தொலைக்காட்சி வருகை, வெளிநாட்டு வியாபாரம் என சினிமா வியாபார எல்லைகள் விரிவடைந்த பின்னரே தமிழ், மலையாளப் படங்களுக்கான கௌரவம் கிடைக்க தொடங்கியது.

தெலுங்கு, கன்னட படங்கள் கணக்கில் இல்லாமல் போனது. ஆனால் தெலுங்கு, கன்னட படங்கள் இந்திய சினிமாவில் முதல் இடத்திற்கு தங்கள் திரைப்படங்கள், அந்த படங்களின் வசூல் மூலம் வந்திருக்கிறது. 1000ம் கோடி வசூலை குறுகிய நாட்களில் எட்டிப் பிடித்த முதல் இரண்டு படங்கள் என்கிற பெருமை தெலுங்கில் தயாரிக்கப்பட்ட பாகுபலி கன்னடத்தில் தயாரான கேஜிஎஃப் படங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை அதிகார வர்க்கத்தின் துணையுடன் ஆதிக்கம் செலுத்திய இந்தி சினிமா தன்னை நிருபிக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியுள்ள இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன் இந்தி எங்கள் தாய் மொழி இல்லை என கன்னட நடிகர் கிச்சா சுதீப் விவாதத்தை ஏற்படுத்தினார்.

தற்போது தெலுங்கு தேசத்தில் இருந்து மூத்த நடிகர் சிரஞ்சீவி 24 வருடங்களுக்கு முன்பு தனக்கும், தென்னிந்திய மொழி கலைஞர்களுக்கும் ஏற்பட்ட அவமானம் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். தற்போது இது விவாதப்பொருளாக மாறிவருகிறது.

சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி பேசுகிறபோது தான் மேற்கண்ட குற்றசாட்டை முன்வைத்தார்.

“இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா மட்டுமே என்று எண்ணும் அளவுக்கு அந்த மொழி திரைப்படங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. பிற மொழி திரைப்படங்கள் நன்றாக எடுக்கப்பட்ட போதிலும், தேசிய அளவில் அது என்றைக்கும் பேசப்பட்டதில்லை.

இதுகுறித்து பேசும்போது, நான் தேசிய விருது வாங்கிய நிகழ்வு நினைவுக்கு வருகிறது. 1988-ம் ஆண்டு வெளிவந்த 'ருத்ரவீணா' திரைப்படத்துக்கு எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. விருதை வாங்குவதற்காக நானும், படக்குழுவினரும் டெல்லிக்கு சென்றோம். அப்போது விழாவுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சியில், இந்தி சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களை மட்டுமே வைத்து அரங்கம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, அந்த நிகழ்ச்சியில் இந்திய திரைப்படங்களுக்காக காண்பிக்கப்பட்ட பிரத்யேக காட்சியில் இந்தி திரைப்படங்களின் சீன்களே காட்டப்பட்டன. தென்னிந்திய திரைப்படங்கள் சார்பில் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. தென்னிந்தியாவில் எத்தனையோ திறமைவாய்ந்த நடிகர்கள் உள்ளனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், ராஜ்குமார் போன்ற ஏராளமான நடிப்பு சக்கரவர்த்திகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள்.

ஆனால், அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தி நடிகர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியில் முன்னிலைப் படுத்தப்பட்டார்கள். உண்மையிலேயே அந்த நிகழ்ச்சியில் நான் அவமானப்பட்டேன். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாகுபலி, புஷ்பா,ஆர்ஆர்ஆர் போன்ற 'பான் இந்தியா' திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைக் கொள்ள செய்திருக்கின்றன. மிக நீண்டகாலத்துக்கு பிறகு நான் பெருமிதமாக உணர்கிறேன். நான் தெலுங்கு திரையுலகில் இருக்கிறேன் என இப்போது என்னால் மார்தட்டி சொல்ல முடியும். இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டிருந்த தடைகளை அடித்து நொறுக்கி தெலுங்கு சினிமா இன்று இந்திய திரையுலகின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. நமது வெற்றியை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்" என்று சிரஞ்சீவி கூறினார்.

-இராமானுஜம்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

செவ்வாய் 3 மே 2022