கேஜிஎப் குழுவினரை பாராட்டிய அல்லு அர்ஜுன்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான 'கேஜிஎஃப் 2' படத்தின் வசூல் தினசரி அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் அதிக முதலீடு செய்து படங்கள் தயாரிக்கும் இந்தி, தமிழ், தெலுங்கு படங்களின் கடந்தகால சாதனைகளை முறியடித்து 1000 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்திய திரையுலகில் எல்லா மொழி கலைஞர்களிடமும் கேஜிஎஃப் படம் பற்றிய பேச்சுகள் அதிகமாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். கேஜிஎஃப் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கேஜிஎஃப் படத்தில் நடித்தது குறித்து சஞ்சய் தத், மனம் திறந்து நெகிழ்ச்சியான பதிவினை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எப்போதும் சில படங்கள் மற்றவைகளை விட சிறப்பாக இருக்கும். அந்த வகையில் எனக்கு கிடைத்த படம்தான் 'கேஜிஎஃப் 2'. இந்தப் படம் என்னுடைய நடிப்புத் திறமையை எனக்கே மீண்டும் நினைவூட்டியது. இதை நான் இதயத்திலிருந்து உணர்ந்துள்ளேன். இந்தப் படம் முடியும்போது சினிமா என்றால் என்ன என்று எனக்கு புரிய வைத்தது.இயக்குனர் பிரசாந்த் நீல், எனக்கும் ஆதிராவை காட்டினார். என்னுடைய கதாபாத்திரம் மிரட்டலாக வந்ததற்கு இயக்குனர் பிரசாந்த் நீல் தான் காரணம். ஒரு கேப்டன் போன்று எங்களையெல்லாம் வழிநடத்தினார். குடும்பத்தினரும் ரசிகர்களும் தான் என்னுடைய பலம்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கேஜிஎஃப் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், “கேஜிஎஃப் -2 குழுவினருக்கு வாழ்த்துக்கள். யஷ் வெறித்தனமான நடிப்பு மற்றும் உழைப்பு மூலம் ரசிகர்களை காந்தம் போல ஈர்க்கிறார். சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ரவி பாஸ்ரூரின் சிறந்த இசை மற்றும் புவன் கவிதாவின் அற்புதமான காட்சியமைப்பு. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மரியாதை. பிரசாந்த் நீல் அவர்களுக்கு எனது மரியாதை. ஒரு சிறப்பான சினிமா அனுபவத்திற்காகவும், இந்திய சினிமாக் கொடியை உயரப் பறக்க வைத்ததற்கும் அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.
-இராமானுஜம்