மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஏப் 2022

பைனான்ஸ் பிரச்சினை: ஒத்திவைக்கப்பட்ட ’மாமனிதன்’!

பைனான்ஸ் பிரச்சினை: ஒத்திவைக்கப்பட்ட ’மாமனிதன்’!

நடிகர் விஜய்சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்திருக்கும் நான்காவது திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரித்தார். அத்துடன் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து முதன் முறையாக இசையமைத்தார்.

மாமனிதன்' திரைப்படம் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்ற படங்களில் நடிக்க வேண்டியதால் 'மாமனிதன்' படப்பிடிப்பை 2018 டிசம்பர் மாதம் தொடங்கி 60 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தார் சீனு ராமசாமி. இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து 2019 ஆம் ஆண்டு மாமனிதன் வெளியீட்டுக்கு தயாரானது.

ஆனால் தயாரிப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு நிதி நெருக்கடி சிக்கல் இருந்தது.

அதனால் நிதி சிக்கலை சரி செய்தால்தான் மாமனிதன் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டது. நிதி பிரச்சினை இருந்தாலும், படத்தை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெளியீட்டு தேதிகள் பல முறை அறிவிக்கப்பட்டது கடைசியில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் வெளியாகாமல் போகும்.

இதுபோன்று கடந்த மூன்றாண்டுகளாக முயற்சித்தும் படத்தை ரீலீஸ் செய்ய முடியாத நிலையில் தயாரிப்பாளரும், நடிகரும் விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் தன்னுடைய ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலமாக மாமனிதன் படத்தை வெளியிட முன்வந்தார். இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது. அத்துடன் மே 20ஆம் தேதி படத்தை வெளியிடவும் திட்டமிட்டு வேலையைத் தொடங்கினர்.

மாமனிதன்' திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் விஜய் சேதுபதியின் மற்றொரு படமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படம் 20 நாட்களை கடந்து ஓடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மே 20ஆம் தேதி 'மாமனிதன்' வெளியானால் இரண்டு விஜய் சேதுபதி திரைப்படங்கள் திரையரங்கில் இருக்கும். அது ஒரு படத்துக்கு சிக்கல் ஏற்படும். அந்த சூழல் இரண்டு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை கொடுக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

காத்துவாக்குல இரண்டு காதல் வெளியானாலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வாரங்களில் முக்கிய திரைப்படங்கள் வெளியாகின்றன. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' மே 13ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அதிக அளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும்.

ஏற்கனவே கே.ஜி.எஃப்-2, பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிட்ட அளவிலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும். மே 20ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெளியாகிறது. அந்தப் படத்திற்கு சுமார் 400 திரையரங்குகள் வரை ஒப்பந்தம் செய்ய ரெட் ஜெயண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மாமனிதன் திரைப்படத்திற்கு தேவையான தியேட்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்காது. மாமனிதன் படத்திற்கு 400 திரையரங்குகளாவது வேண்டும் என எதிர்பார்க்கின்றார் தமிழ்நாடு விநியோகஸ்தர் ஆர்.கே.சுரேஷ். திரையரங்குகள் கிடைக்கும் பிரச்னைகள் இருந்தபோதிலும் மாமனிதன் படம் சம்பந்தமான பைனான்ஸ் பிரச்சினைகளை முடித்து யுவன்சங்கர்ராஜா தடையில்லா சான்று இதுவரை வாங்கவில்லை என்பதுடன் அதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

யுவன் சங்கர் ராஜா வழங்கவேண்டிய கடன் தொகையை வழங்கினால்தான் இந்த படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் பைனான்சியர்களால் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதில் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

யுவன் சங்கர்ராஜா இனிமேல் படம் எடுப்பார் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பதால் கடன் முழுவதையும் மாமனிதன் பட வெளியீட்டுக்கு முழுமையாக வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதி காட்டுகின்றனர் கடன் கொடுத்தவர்கள். இதனால்தான் மாமனிதன் திரைப்படத்தை மே 20ஆம் தேதியில் இருந்து ஜூன் 24ஆம் தேதிக்கு வெளியீட்டை மாற்றியுள்ளனர் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் மாமனிதன் பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வெள்ளி 22 ஏப் 2022