மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஏப் 2022

தமிழ்ப் படங்களை தாழ்த்தாதீர்கள்: பேரரசு

தமிழ்ப் படங்களை தாழ்த்தாதீர்கள்: பேரரசு

சமீபத்திய சில தமிழ்ப் படங்களின் தோல்விக்காக தமிழ்ப் படங்களைத் தாழ்த்திப் பேச வேண்டாம் என்று இயக்குநர்கள் சங்கப் பொருளாளர் பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு தமிழ்ப் படம் வெளியாகி அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் அந்தப் படத்தை பற்றி மட்டும் விமர்சனத்தை வைக்கலாம் தவறில்லை. ஆனால், அதேசமயம் ஒரு கன்னடப் படம் வெளியாகி வெற்றி அடைந்தால் பாராட்டுங்கள். ஒன்றுக்கு பல முறை அந்தப் படத்தை பாருங்கள். தவறில்லை. ஆனால், அந்தப் படத்தைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, தமிழ்ப் படத்தை இழிவுபடுத்துவதும், கன்னட படத்தோடு, தமிழ்ப் படத்தை ஒப்பிட்டு தமிழ்ப் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல..!

கர்நாடகாவில் அங்கே உள்ள ஒரு உச்ச நட்சத்திரம் நடித்த திரைப்படம் வெளியாகி, அதே நேரத்தில் நம் தமிழ் நடிகர் நடித்த தமிழ்ப் படம் வெளியாகி, கன்னடப் படம் தோல்வியடைந்து, நம் தமிழ்ப் படம் வெற்றியடைந்தால் அங்கே உள்ள கன்னடர்கள் கன்னடப் படத்தை இழிவுபடுத்தி நம் தமிழ்ப் படத்தையும், நம் தமிழ் நடிகரையும் கொண்டாடுவார்களா?..

மேலும் இடையில் தமிழ்ப் படங்கள் அங்கே வெளியிடக் கூடாது என்று கன்னடர்கள் போராட்டங்கள் செய்தனர். கலவரம் விளைவித்தனர். அதுமட்டுமல்ல, தமிழ்ப் படங்களை கன்னடத்தில் டப் செய்து வெளியிடக் கூடாது என்ற நிலையும் தற்போது அங்கே உள்ளது. இங்கே நான் மொழி வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதுதான் திரைப்படம்.

இந்தியத் திரையுலகிலேயே அதிகமாக மொழி மாற்றம் செய்யப்பட்டது தமிழ்ப் படங்கள்தான். இன்றும் இந்தியாவிலேயே தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது. அனைத்து மொழிப் படங்களுக்கும் முன்னோடியாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஓரிரு தமிழ்ப் படங்கள் சரிவர வெற்றி அடையாததால், தமிழ்ச் சினிமாவை யாரும் தரக்குறைவாகப் பேசிவிடக் கூடாது, நினைத்துவிடவும் கூடாது. சமீபத்தில் ஓரிரு தெலுங்கு படங்களும், ஓரிரு கன்னடப் படங்களும் வெற்றி அடைந்ததால் தமிழ்த் திரையுலகம் பின்தங்கி விட்டதாகவும், தமிழ் இயக்குநர்கள் திறமையற்றவர்களாக இருப்பதாகவும் விமர்சனம் செய்வது தமிழனை, தமிழனே அசிங்கப்படுத்துவதாகும்.

இது நம் தமிழ் மொழியின் கௌரவப் பிரச்சினை. தமிழா! நீ போற்றுவதற்கு ஒரு கன்னடப் படம்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் போற்றுவதற்கு இங்கு ஆயிரம் தமிழ் படங்கள் இருக்கின்றன என்பதை மறவாதே..!

கன்னட படம் நன்றாக இருந்தால் பார்ப்போம்.. போற்றுவோம்..!

ஆனால், அதோடு ஒப்பிட்டு தமிழ்ப் படத்தை தூற்றுவதை தவிர்ப்போம்.

ஒரு கன்னட நடிகரை பாராட்டுவோம்.

அதேசமயம் ஒரு தமிழ் நடிகரை, தமிழனை தரம் தாழ்த்தாதிருப்போம்..!

இது கலையையும் தாண்டி தமிழை இழிவுபடுத்துவதாகும்.

தமிழ்நாட்டில் பல நடிகர்களுக்கு பல ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், நாம் எல்லோரும் தமிழர்கள். தமிழுக்கு ரசிகர்கள். தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 18 ஏப் 2022