wபீஸ்ட்: ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படுமா?

entertainment

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் எல்லோரும் தங்களது முதல் படத்தில் கையாண்ட கதை சொல்லும் யுக்தி, ஒருவரி கதை இவற்றில் இருந்து பெரும்பாலும் தங்களை மாற்றிக்கொள்வது இல்லை. அதுபோன்ற இயக்குநர்கள் வரிசையில் நெல்சனும் இடம்பெறுகிறார்.

இவர் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் போதை பொருள் கடத்தல் அதை கண்டுபிடிக்க துரத்தும் காவல் துறை, துரோகம் செய்த கூட்டாளியை துரத்தும் மாபியா தலைவன் என திரைக்கதை இருந்தது. இரண்டாவதாக இவர் இயக்கிய டாக்டர் படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இருந்தபோதிலும் தனது முந்தைய படம் போன்றே கடத்தல், அதனை கண்டுபிடிக்க துரத்தல் என திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. முந்தைய படத்தில் போதை பொருள் கடத்தல் தொழில் டாக்டர் படத்தில் குழந்தைகள் கடத்தல் தொழிலாக மாற்றப்பட்டிருந்தது.

மூன்றாவதாக இயக்கும் படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், பொழுதுபோக்கு படங்களின் வெற்றிகரமான நாயகன் விஜய் கதாநாயகனாக நடித்தும்கூட தனது கடத்தல் திரைக்கதை பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. முந்தைய இரண்டு படங்களிலும் பயணம் முக்கியமாக இடம் பெற்றது. பீஸ்ட் படம் முழுக்க முழுக்க ஒரு வணிக வளாகத்திற்குள் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் குவைத்தில் பீஸ்ட் படத்திற்கு தணிக்கை மறுக்கப்பட்டு, அங்கு வெளியிடவும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் தமிழ் சினிமாவில் தீவிரவாதி, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்கள் என்கிற வழக்கமான பாணியே கையாளப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பணயக்கைதிகள் அடிப்படையிலான திரில்லர் படம் என்பது ட்ரெயிலர் உணர்த்துகிறது. உலகில் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக, அல்லது அவர்களை தவறானவர்களாக படத்தில் சித்தரிக்கப்பட்டகாட்சிகளை நீக்கிவிட்டால் அனுமதிக்கப்படும். முடியாது  என்றால் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டார்கள். அது போன்ற ஒரு நிலைதான் பீஸ்ட் படத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது .

குவைத்தின் நலன்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்சிகளை “பீஸ்ட்” காட்டுவதால் படத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்குமுன்பாக இஸ்லாமியராக இருந்தபோதும் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் குருப் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. தமிழில் தயாரான விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் படத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

பொதுவாக அரபு நாடுகளை தீவிரவாதிகளின் தாயகமாக காட்டும் படங்களுக்கு குவைத்தில் க்ளீன் சிட் கிடைக்காது. அரபு நாட்டு அரசுகளின் இதுபோன்ற முடிவுகள் பிற இஸ்லாமிய நாடுகளிலும் பீஸ்ட் படத்தை திரையிடுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அரபு நாடுகளில் பீஸ்ட் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வேளை குவைத் அரசாங்கம் பிற இஸ்லாமிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து தங்கள் நாட்டை போன்று பீஸ்ட் படத்தை தடை செய்ய கோரினால் வெளிநாட்டு விநியோக உரிமை விலை குறையக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு இருந்தபோதிலும் பீஸ்ட் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக்கொண்டால் படம் எவ்வித தடையும் இன்றி வெளியாகலாம் என்பதே தற்போதைய நிலைமை.

 **-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *