மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

பூசாண்டி வரான் : சிறப்பு பார்வை!

பூசாண்டி வரான் : சிறப்பு பார்வை!

வணிக நோக்கத்தை பிரதானமாக கொண்ட தமிழ் சினிமாவில் பண்பாடு, கலாச்சாரம், மொழி, தமிழர்களின் பெருமைகள் பற்றிய திரைப்பட பதிவுகள் இங்கு மிக மிக குறைவு.

பிழைப்பிற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறிய நாடுகளில் அந்த நாடுகளின் பண்பாடு, கலாச்சாரத்தை சுவீகரித்துக்கொண்டாலும் தமிழர்களின் புராதான பெருமைகளை கை கழுவிவிடவில்லை. தாங்கள் வாழும் நாட்டில், தங்கள் வசதிக்கேற்ப திரைப்படங்களாக ஆவணப்படங்களாக அவற்றை வணிக நோக்கம் இன்றி பதிவு செய்ய தவறுவது இல்லை. அப்படி ஒரு படம் தான் பூ சாண்டி வரான்

பூச்சாண்டி என்பது தமிழர்கள் வாழ்வில் பிரபலமான சொல். குழந்தைகளை பயமுறுத்தி சாப்பிட எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தையின் உண்மையான பின்னணி என்ன என்பது பெரும்பாலோருக்கு தெரியாது. அதனை பூசாண்டி படத்தின் திரைக்கதையின் மையப்பொருளாகவும் ஆக்கியிருக்கிறார்கள். மலேசிய தமிழர்களால் "பூச்சாண்டி" என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு அங்கு வெளியான இப்படத்தின் பெயரை தாய் தமிழகத்தில் அதே பெயரில் வெளியிட இங்கு இருக்கும் திரைப்பட துறை சார்ந்த சங்கங்களின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.

யோகிபாபு நடித்து வரும் திரைப்படத்திற்கு அந்தப் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டதால் பூசாண்டி வரான் என பெயர் மாற்றத்துடன் ஏப்ரல் 1 அன்று தமிழகத்தில் வெளியானது. படம் எப்படி? பழையபொருட்களை வாங்கி விற்கும் நபர், அவருக்கு உதவியாக இருவர். இவர்கள் பெரிய பங்களாவில் தங்கி இருக்கின்றனர். இவர்களிடம், ஒருவர் பழங்கால நாணயத்தை விற்கிறார்.

அது வந்தபிறகு, அந்த வீட்டில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. மூவரில் ஒருவர் கொல்லப்படுகிறார்.

இதையடுத்து மீதமுள்ள இருவரும், பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒருவரும் சேர்ந்து நாணயத்தின் நதி மூலம், ரிசிமூலம் தேடிப் புறப்படுகிறார்கள். தொடர்ந்து பல திகில் சம்பவங்களை சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான விடையை தேடிக் கண்டறிந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.

திரைக்கதையில் முந்தைய தமிழர்களின் வரலாற்று காலத்தை இணைத்திருக்கிறார் இயக்குநர். ஜே.கே.விக்கி மன்னர் காலத்தில் சைவ வைணவ போட்டிகள் ஏராளம். அந்த சூழலில் ஆட்சிக்கு வந்த வைணவத்தை வழிபடும் மன்னன், சைவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறான். முக்கியமாக, சிவனடியார்கள் நெற்றியில் திருநீறு அணியக்கூடாது என்று கட்டளை இடுகிறான். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சிவனடியார்கள் நெற்றியை விட்டுவிட்டு உடல்முழுதும் திருநீறு பூசிக்கொள்கிறார்கள்.

அப்படிப் பூசிக்கொண்ட ஆண்டிகள்தாம் மக்களால் பூச்சாண்டிகள் என்றழைக்கப்பட்டனர்.

அரசனும் அவனது ஆட்சியும், அவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்தியிருக்கிறது.

இதன் மூலம், சைவம், வைணவம் இரண்டும் வேறு வேறு மதங்கள் என்கிற வரலாற்றையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

இந்து மதத்தின் இரு பிரிவுகள் சைவம், வைணவம் என நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது

ஆனால் இவை இரண்டு மட்டுமல்ல.. சாக்தம், கௌமாரம், சௌரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என பல பிரிவுகள் உண்டு. இவை தனித்தனி மதங்களாக இருந்தவை. வெள்ளையர் ஆட்சியில் இவற்றை இணைத்து இந்து மதம் என பெயர் சூட்டினர் என்பது வரலாறுதொல்பொருள் ஆராய்ச்சி மாணவியாக முக்கிய வேடமேற்றிருக்கும் ஹம்சினி பெருமாள் படத்துக்குத் திருப்புமுனையாக இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் முகமது அலி இதுவரை பார்த்திராத மலேசியப்பகுதிகளை கண்முன் நிறுத்துகிறார். ஷாவின் இசையும் ஜேசனின் ஒலி வடிவமைப்பும் திகிலை மேலும் கூட்டுகின்றன.

ஆவிகள் பற்றி எழுதும் பத்திரிகையாளராக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறு காட்சியாக வந்தாலும், மலேசியாவுக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரே ஒரு நடிகரைத் தவிர மற்ற அனைவருமே மலேசிய நடிகர்கள், நடிகைகள் தான். நமக்கு யாரென்றே தெரியாத அவர்கள் நடித்த படம் ஒன்றை சுவாரசியமாக ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் படத்தின் இயக்குனர் ஜேகே விக்கி. ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

இரண்டு மணி நேரப் படத்தை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் பரபரப்பாக நகர்த்தியிருக்கிறார் விக்கி. தமிழில் ஏற்கெனவே நிறைய பேய்க் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இதில் சில வரலாற்று விஷயங்களைச் சொல்லி, அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு ஆர்வத்தையும் திரைக்கதையில் ஏற்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் அனைவருக்குமே சரியான முக்கியத்துவம் இருக்கிறது. பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக மிர்ச்சி ரமணா, ஆவிகளுடன் பேசுபவராக தினேஷ் சாரதி கிருஷ்ணன், அவரது மாற்றுத்திறனாளி நண்பராக லோகன் நாதன், ஆவியால் கொல்லப்படும் நண்பராக கணேஷன் மனோகரன். இவர்கள் மூவரது நடிப்பும் நிஜமான நண்பர்களைப் போல திரையில் வெளிப்படுகிறது. ஒருவர் மீது மற்றொருவர் கோபப்படுவது, கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வது, சிக்கல் வரும் போது மற்றவரைக் காப்பாற்ற நினைப்பது என நண்பர்களாகவே மாறியிருக்கிறார்கள்.

ஆவியாக வந்து மிரட்டுவது மல்லிகா என்று தெரியவர அந்த இறந்து போன மல்லிகா யார் என்று தேடிப் போகிறார்கள். ஆனால், அங்கு மல்லிகா உயிருடன் இருப்பது ஆச்சரியமான திருப்புமுனை. அதற்குப் பிறகு மல்லிகா தரும் தகவல்கள், அவரது அனுபவங்கள் படத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. மல்லிகாவாக ஹம்சினி பெருமாள் இயல்பாய் நடித்திருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் பரபரப்பாக நகர்த்தியிருக்கிறார் விக்கி. படத்தில் பாடல்கள் கிடையாது. டஸ்டின் ரிதுவான் ஷா பின்னணி இசையில் பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறார். இரவு நேரக் காட்சிகள்தான் படத்தில் அதிகம். மிரட்டலான லைட்டிங்குடன் திரையிலும் பரபரப்பை சேர்த்திருப்பதில் ஒளிப்பதிவாளர் அசலிஷம் முகம்மது அலிக்கும் முக்கிய பங்குண்டு.

தயாரிப்பு - திரியும் ஸ்டுடியோ

இயக்கம் - ஜேகே விக்கி

இசை - டஸ்டின் ரிதுவான் ஷா

நடிப்பு - மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், ஹம்சினி பெருமாள்

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

ஞாயிறு 3 ஏப் 2022