உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடம் பிடித்த ஆர்ஆர்ஆர்!

இந்தியத் திரைப்படம், உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தை இதுவரை ஒரு நாள் கூட எட்டிப் பிடித்தது இல்லை. அப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது, தெலுங்கு மொழியில் தயாராகி பன்மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 25 அன்று வெளியான ஆர்ஆர்ஆர்.
ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. உலக அளவில் 21 நாடுகளில் மட்டுமே வெளியான ஆர்ஆர்ஆர் படம் 6,32,09,000 யுஎஸ் டாலர்கள் வசூலித்து, கடந்த வாரம் இறுதியில் உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 77 பிரதேசங்களில் வெளியான ஹாலிவுட் படமான தி பேட்மேன் படம் 4,55,00,000 யுஎஸ் டாலர்கள் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்தை விட குறைவான பிரதேசங்களில் வெளியாகி அதிக வசூலைப் பெற்று சாதனை புரிந்துள்ளது ஆர்ஆர்ஆர். தென்னிந்தியாவில் தயாராகும் படங்களால் இந்திய சினிமாவிற்கு கௌரவம் அதிகரித்து வருகிறது.
இராமானுஜம்