மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

ஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!

ஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன், ஆறாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்களில் ஹசராங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து நிதிஷ் ராணா 10 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஒருகட்டத்தில் கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய ஹசராங்கா கொல்கத்தா வீரர் ஷெல்டன் ஜாக்சனை அவரது முதல் பந்திலே வெளியேற்றினார்.

விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் அதிரடி காட்டினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவர் 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் உமேஷ் - வருண் சக்ரவர்த்தி ஜோடி சற்று நிலைத்து நின்று ரன்கள் குவித்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசராங்கா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

129 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அனுஜ் ராவத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பாப் டு பிளெஸ்சிஸ் 5 ரன்களில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி உமேஷ் யாதவ் பந்து வீச்சில் 12 ரன்களில் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் பிறகு டேவிட் வில்லி - ரூதர்போர்டு ஜோடி சற்று நிலைத்து நின்று விளையாடினர். வில்லி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ரூதர்போர்டு 28 ரன்கள் குவித்து சௌதீ பந்துவீச்சில் ஜாக்சன்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷாபாஸ் நதீம் சிறிது நேரம் அதிரடி காட்டினார். 3 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 20 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பெங்களூரு அணிக்கு கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஹர்ஷல் பட்டேல் - தினேஷ் கார்த்திக் ஜோடி 19ஆவது ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் தினேஷ் கார்த்திக். பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று (மார்ச் 31) இரவு நடைபெறும் ஏழாவது லீக் ஆட்டத்தில் சென்னை - லக்னோ அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுமே ஏற்கனவே ஒருமுறை தோல்வியைச் சந்தித்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ராஜ்-

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வியாழன் 31 மா 2022