Tவெளியானது ’கே.ஜி.எப் 2’ டிரைலர்!

entertainment

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் ‛கே.ஜி.எப்’.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஒரே நாளில் வெளியான இந்தப்படம் வசூல் ரீதியாக அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது. கன்னட மொழியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அகில இந்தியக் கவனத்தையும், வெற்றியையும் பெற்ற முதல் படம் ஆகும்.

இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாக உள்ளது. புதிதாக சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால் இப்படம் பல முறை வெளியீடு தள்ளிப்போய் ஏப்ரல்14 அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் கேஜிஎப்-2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூர் பிவிஆர் திரையரங்கில் நேற்று(27.03.2021) மாலை நடைபெற்றது.

இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா உள்ளிட்ட படக்குழுவினர் உடன் மலையாள நடிகர் பிருத்விராஜ், இந்தி இயக்குநர் கரண் ஜோகர், கேசிஎப் தமிழ்நாடு வினியோகஸ்தர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர். டிரைலரை கன்னட நடிகர் சிவராஜ் குமார் வெளியிட்டார்.

ரவி பஸ்ரூர் இசையமைத்த படத்தின் முதல் பாடலான “டூஃபான்” சமீபத்தில் வெளியானது.

“அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சு. நீங்க உயிரோட இருக்கணும்னா அவன் குறுக்க போயிடாதீங்க” என்கிற அழுத்தமான வசனத்துடன் அந்த பாடல் துவங்குகிறது. டூஃபான் என்பதற்குப் புயல் என்று பொருள். இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கேஜிஎப் படத்தின் முதல் பாகம் வில்லன் கருடன் இறந்ததும், அந்த இடத்திற்கு யாஷ் செல்வது போன்று முடிந்தது. இரண்டாம் பாகம் கருடன் இறந்த பிறகு என்ன நடந்தது என்பதை விவரிக்கும் விதமாகப் படம் தொடங்கும் என்பதை டிரைலர் சொல்கிறது.

“ரத்தத்தில் தொடங்கிய கதை இது, மையால் எழுத முடியாது, தொடரனுமுன்னா மீண்டும் ரத்தத்தைத் தான் கேட்கும்” என பிரகாஷ் ராஜ் முன்னுரை கொடுக்கிறார். அதன்பிறகு கேஜிஎப்பை கைப்பற்ற அரசு ஒரு பக்கம், சஞ்சய் தத் ஒரு பக்கம் என யாஷ் உடன் மோதுவதை டிரைலர் உணர்த்துகிறது.

கருடன் இறந்தபிறகு ஆதிராவின் பிரவேசம் தான் கதையை நகர்த்தப் போவது போல டிரைலரில் கூறப்பட்டுள்ளது. ஆதிராவாக தோன்றும் சஞ்சய் தத் பார்வையிலேயே வில்லத்தனத்தைக் கடத்துகிறார். அங்க விழும் பிணங்களுக்கு இருக்கும் மரியாதையை அங்கிருக்கும் கழுகுகளிடம் கேட்டுப்பார் என்று அறிமுகமாகி என் கேஜிஎப்க்காக நான் வந்துட்டு இருக்கேன்னு அவங்ககிட்ட சொல்லிடு என்று சொல்லி பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைக்கிறது சஞ்சய் தத்தின் ஆதிரா கதாபாத்திரம்.

அம்மா செண்டிமெண்டை இந்த டிரெய்லரிலும் வைத்திருக்கிறார்கள். இந்த உலகத்துல இருக்க எல்லா தங்கத்தையும் உனக்கே தரேம்மா என்று குட்டி ராக்கி சொல்லும் வசனமும் கவனம் பெறுகிறது.

பெண் அரசியல்வாதி கேம் சேஞ்சராக உருவெடுக்கும் விதத்தில் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைவரது வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. ராக்கியின் “I don’t like violence. I avoid it. But Violence likes me. SO I can’t avoid” என்ற ஆங்கில வசனம் கவனம் பெறுகிறது.

ராக்கியின் வசனத்தில் இம்முறை முகநக நட்பது நட்பன்று என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.

முதற்பாகத்தில் கதை சொல்லியாக வந்த பத்திரிகையாளராக இம்முறை பிரகாஷ் ராஜ் வருவார் போல. சில வினாடிகள் திரையில் வந்து நினைவில் நின்று விடுகிறார். இந்த டிரைலரில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் சஞ்சய் தத்தின் ஆதிரா கேரக்டர் மிரட்டலாக உள்ளது. அவர் வரும் போது இடம்பெறும் வசனங்களில் வசனத்தில் அனல் பறக்கிறது.

**-அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *