இணையத்தை கலக்கும் கேஜிஎஃப் பாடல்!

2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “கேஜிஎஃப்”.
கோலார் தங்க வயல் தொடர்பான கதை களத்துடன் ‘யாஷ்’ நடிப்பில் வெளியானது. முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில் யாஷுக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது.
தற்போது இப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் இப்படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று(மார்ச் 21) கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் டூஃபான் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 11 பாடகர்கள் இணைந்து பாடியுள்ள இந்த பாடலில் சில வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
டூஃபான் என்பதற்கு புயல் என்று பொருள்.
“நீங்க சொன்ன மாதிரி எங்களுக்கு தைரியம் இருந்ததில்லை, சக்தியும் இருந்ததில்லை.
சாவு எங்க தலைமேல்
குதியாட்டம் போட்டுச்சு.
அதுக்கு குறுக்க நின்னுட்டு இருந்தவன் தலைய
ஒருத்தன் சீவுனான்.
அன்னைக்குதான்
நாங்க சாவுமேல
குதியாட்டம் போட்டோம்”
என்று பின்னணியில் அந்த குரல் ஒலிக்கிறது.
“அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சு. நீங்க உயிரோட இருக்கணும்னா அவன் குறுக்க போயிடாதீங்க” என்கிற அழுத்தமான வசனத்துடன் பாடல் துவங்குகிறது.
கேஜிஎஃப்க்கே உண்டான துள்ளலான இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரலாகத் துவங்கியது. இரண்டு மொழிகளில்1 மில்லியன் பார்வைகளுக்கு மேல்பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.
மேலும், படத்தின் ட்ரெய்லர் மார்ச் 27 அன்று மாலை 6.40க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-இராமானுஜம்