இன்று இந்தியா-இலங்கை மோதும் பகல்-இரவு டெஸ்ட்: 100% ரசிகர்களுக்கு அனுமதி!


இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று பகல் 2 மணிக்கு பகல்-இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது. இந்த டெஸ்டில் 100 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (மார்ச் 12) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த பகல் - இரவு ஆட்டத்தில் (பிங்க் பால் டெஸ்ட்) ஸ்டேடியத்தில் 50 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரு நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிக்க கர்நாடக மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இந்த டெஸ்டில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பகல்-இரவு ஆட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இந்திய அணி இதுவரை மூன்று பகல்-இரவு டெஸ்டில் விளையாடி இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நவம்பரில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்து 2020ஆம் ஆண்டு இறுதியில் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் இரண்டு நாளில் அந்த அணியை அடக்கி இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளை அள்ளினார்.
இன்று இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணியும் மூன்று பகல்-இரவு டெஸ்டில் விளையாடி இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.
இந்திய தரப்பில் பகல்-இரவு டெஸ்டில் சதம் அடித்த ஒரே வீரர் விராட் கோலி தான். 2019ஆம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்திருந்தார். இதுதான் அவர் கடைசியாக அடித்த சதமும் ஆகும்.
-ராஜ்