மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது எப்படி? பாவனா

பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது எப்படி? பாவனா

நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் விவகாரம் குறித்தும் அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டது குறித்தும் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

தமிழில் 'சித்திரம் பேசுதடி' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பாவனா. 'தீபாவளி', 'அசல்', 'ஜெயம் கொண்டான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்து வருகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் நடிகை பாவனா. இது குறித்தான வழக்கு நடந்து வரும் வேளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதனது சமூக வலைதள பக்கத்தில் முதல் முறையாக மவுனம் கலைத்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். 'Victim To Survivor' என்று இத்தனை ஆண்டுகளாக இதனால் தான் சந்தித்த அவமானங்கள், அதிலிருந்து மீண்டு வந்தது, இந்த கடினமான சமயத்தில் தனக்கு ஆதரவு அளித்தவர்கள் என நெகிழ்ச்சியான பதிவாக அது இருந்தது.

இந்நிலையில் பாவனா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'கடந்த 2017, பிப்ரவரி 17ஆம் தேதி தான் அந்த சம்பவம் நடந்தது. அதற்கு பிறகு என்னுடைய வாழ்வே தலைகீழாக மாறியது. அந்த சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்க காரணம் இவர் தான் என இந்த பழியை வேறு யார் மீதாவது போட்டு விட்டு அதில் இருந்து தப்பிக்கவே என் மனம் விரும்பியது.

ஏனென்றால், அது என்னுடைய மனதில் மறக்க முடியாத ஒரு வடுவாகத் தங்கி விட்டது. இது ஏன் நடக்க வேண்டும்? குறிப்பாக எனக்கு ஏன்? என இப்படி பல கேள்விகள். என்னுடைய தந்தை கடந்த 2015ல் இறந்தார். ஒரு வேளை அவர் இருந்திருந்தால் இது எனக்கு நேராமல் இருந்திருக்கலாம்.

அந்த சம்பவம் ஒரு கெட்ட கனவு போல் இருந்து அடுத்த நாள் நான் எழும் போது மீண்டும் எல்லாம் பழையபடி இருக்காதா என நினைத்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் நான் தான், என் மீது தான் தவறு என என் மீதே பழி போட்டிருக்கிறேன்.

அதன் பிறகு 2020-ல் இந்த வழக்கு நடந்தது. 15 முறை விசாரணைக்குச் சென்று வந்திருக்கிறேன். 15வது முறை நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது இனிமேலும் நான் பாதிக்கப்பட்டவள் இல்லை, இனி நான் Survivor என்பதை உணர்ந்தேன். இனிமேல் இனி நான் பேசப்போவது எனக்காக மட்டுமல்ல எனை போலப் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் என முடிவெடுத்தேன்.

இந்த பயணத்தில் பலரும் என்னையே குற்றம் சொன்னார்கள். ஏன் இரவு 7 மணிக்கு தனியாகச் செல்ல வேண்டும் இப்படி பல. இது மிகவும் கடினமானது. அந்த சம்பவத்திற்கு பிறகு நான் பல மில்லியன் துண்டுகளாக சுக்கு நூறாக உடைந்திருந்தேன். அந்த துண்டுகளை இணைத்து நான் மீண்டும் எழ முயன்ற போது, இது போன்ற தேவையில்லாத விமர்சனங்கள் என்னை மீண்டும் சோர்வடைய செய்தது. இந்த தேவையில்லாத விமர்சனங்கள் வைப்பவர்கள் எந்த விதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல் மிக வசதியாக பேசிய போது எனக்கு அவர்கள் முன் கத்த வேண்டும் போல இருந்தது. ஏனென்றால் என் பெற்றோர்கள் அப்படி தவறான வழியில் என்னை வளர்க்கவில்லை. இவர்கள் இப்படி பேசுவது என் பெற்றோரையும் சேர்த்து இழிவு படுத்துவது போன்றது. இது என்னை மிகவும் மோசமாக பாதித்தது.

நல்ல வேளையாக நான் அந்த சமயத்தில் சோஷியல் மீடியாவில் இல்லை. இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். 2019ல் நான் இன்ஸ்டா வந்த போது கூட, 'எப்படி உன்னால் இன்னும் உயிரோடு இருக்க முடிகிறது? நீ சாகலாம்' என்ற ரீதியிலான மெசேஜ்கள் வந்தது. அதனால் தான் கடந்த ஜனவரி மாதம் என் வாழ்க்கையில் என்ன நடந்தது, அதனால் நான் எப்படி பாதிக்கப்பட்டேன், எப்படி அதிலிருந்து மீண்டு வந்தேன் என்பதை பதிவு செய்தேன். அதை புரிந்து கொண்டு என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி' என பேசியுள்ளார் பாவனா.

ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

செவ்வாய் 8 மா 2022