மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 மா 2022

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: சாதனைகள் படைத்த இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: சாதனைகள் படைத்த இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன் சாதனைகள் பல படைத்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் 4ஆம் தேதி தொடங்கியது. 100ஆவது போட்டியில் விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 4 ரன்களில் சதம் தவற விட்டார். அவர் 96 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து இருந்தது.

இரண்டாவது நாள் (மார்ச் 5) ஆட்டத்தில் அஷ்வின் 61 ரன்களில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களான கருணாரத்னே (28), திரிமன்னே (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நிசான்கா (26) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேத்யூஸ் (22), டிசில்வா (1) ரன்களில் வெளியேறினர். அசலன்கா (1) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி ஆட்ட நேர முடிவில், 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணி இந்தியாவை விட 466 ரன்கள் பின்தங்கிய இந்த நிலையில் மூன்றாம் நாள் (மார்ச் 6) ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. அந்த அணியில் நிசாங்கா அரை சதம் (61) எடுத்தார். அவரை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களிலும், சிலர் 30 ரன்களுக்குள்ளும் சுருண்டனர். இதனால், இலங்கை அணி 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் லஹிரு திரிமன்னே ரன் ஏதும் எடுக்காமல் அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்னே 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிசாங்கா 7 ரன்னிலும், மேத்யூஸ் 28 ரன்னிலும், டி சில்வா 30 ரன்னிலும் வெளியேறினர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார்.

முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்தினார். அரைசதம் அடித்த டிக்வெல்லா கடைசி வரை போராடினாலும், அதற்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போனது. இலங்கை அணி 60 ஓவரில் 178 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் அஷ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அத்துடன்... இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பல சாதனைகள் படைத்துள்ளனர்.

* விராட் கோலிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி. இதில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 45 ரன்களில் வெளியேறினாலும் தனது 100ஆவது கேட்ச்சைப் பிடித்துள்ளார்.

* ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆகாமல் இருந்த நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 435 விக்கெட்டுகள் கைப்பற்றி அஷ்வின், கபில்தேவின் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “உண்மையில் கூற வேண்டுமானால் இந்தப் போட்டி மூன்று நாட்களில் முடியும் என நான் நினைத்து பார்க்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

விராட் கோலிக்கு இது 100ஆவது போட்டி. அதனால் நிச்சயமாக இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என நினைத்தோம். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஜடேஜா சிறப்பாகச் செயல்பட்டார். அவர் 175 ரன்களில் இருந்தபோது டிக்ளேர் செய்யும் முடிவை அணியுடன் சேர்த்து அவரும் அறிவிக்க விரும்பினார். இது அவர் சுயநலமற்றவர் என்பதை காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி 86 சதவிகித வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது. 75 சதவிகித வெற்றியுடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், 66 சதவிகித வெற்றியுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

60 சதவிகித வெற்றியுடன் தென்னாப்பிரிக்க அணி நான்காவது இடத்தில் உள்ளது. நேற்று வெற்றி பெற்றதன் மூலம் 54 சதவிகித வெற்றியுடன் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 38 சதவிகித வெற்றியுடன் நியூசிலாந்து அணி ஆறாவது இடத்திலும் உள்ளது.

-ராஜ்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 7 மா 2022