மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 பிப் 2022

அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப் பெரியவன்!

அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப் பெரியவன்!

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் போன்ற வெற்றி படங்களையும் ஜெயம் ரவி நாயகனாக நடித்த ஆதி பகவன் படத்தையும் இயக்கிய அமீர், யோகி படத்தில் நாயகனாகவும், வட சென்னை படத்தில் தாதா கேரக்டரில் நடித்திருந்தார் . ஆர்யா நடிப்பில் சந்தனத் தேவன் என்ற படத்தை இயக்குவதற்கு பூஜை போடப்பட்டு படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.

இந்த நிலையில் பிப்ரவரி 4 அன்று வெற்றி மாறனின் திரைக்கதையில் தனது புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் இயக்குநர் அமீர். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், ஒரு திரைப்படத்தில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது அந்தப் படம் மேலும் அழகாகும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், வெற்றிமாறன் - தங்கம் ஆகிய இருவரது கதை உருவாக்கத்தில் எனது திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றை தொடங்க உள்ளேன் எனக் கூறியிருந்தார். அமீர் இயக்கத்தில் 2013இல் ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஜோடி நடிப்பில் வெளியான ஆதி பகவன் படத்துக்குப் பின் அவரது இயக்கத்தில் புதிய படங்கள் வெளியாகவில்லை.

திரைத் துறை சங்கங்களின் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமீர் சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து வந்தார். அதனால் எப்போதும் சர்ச்சைக்குரிய நபராகவே பார்க்கப்பட்டார். சந்தனத்தேவன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பைனான்ஸ் பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. அப்போது இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது மத்திய மாநில அரசு இரண்டையும் கடுமையாக எதிர்த்துப் பேசுவதால் பைனான்சியர்கள் எனக்கு நிதியுதவி செய்வதில்லை என்று குற்றம்சாட்டினார் அமீர்.

ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெளியாகி வெற்றி படமானதால் மீண்டும் சந்தனத்தேவன் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த காலம் போன்றே பைனான்ஸ் சிக்கல் தடைக்கல்லாக இருக்கிறது எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் அமீர் இயக்கும் அடுத்த படத்துக்கான தலைப்பாக இறைவன் மிகப் பெரியவன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போன்று அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி இருவரும் இந்தப் படத்தில் அமீருடன் இணைந்து இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் படைப்பு ரீதியாகவும், வணிக அடிப்படையிலும் வெற்றிகரமாக பயணித்து வரும் வெற்றிமாறன், இறைவன் மிகப் பெரியவன் படத்தில் இணைந்திருப்பதால் வணிக ரீதியாகப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-இராமானுஜம்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

திங்கள் 14 பிப் 2022