மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 பிப் 2022

கண் கலங்க வைக்கும் கடைசி விவசாயி!

கண் கலங்க வைக்கும் கடைசி விவசாயி!

வணிக சினிமா வளமாக ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவில், அவ்வப்போது மக்கள் வாழ்வியல் சம்பந்தமான திரைப்படங்கள் வருவது உண்டு.

சில நேரங்களில் இதுபோன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெறுவதும் உண்டு, அல்லது விருதுக்கு தகுதியான படம் என்கிற விமர்சனங்களுடன் முடங்கி விடும். அப்படி ஒரு படம்தான் மணிகண்டன் முதன் முதலாக இயக்கிய காக்கா முட்டை திரைப்படம் வணிகரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து, குற்றமே தண்டனை,ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர்தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் திரைக்கதை. இப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. வணிகரீதியாக வியாபாரம் ஆகாத போதும், சினிமா வட்டாரம் கடந்து வெகுஜன தளத்தில் கடைசி விவசாயி படம் விவாத பொருளாக மாறத்தொடங்கியுள்ளது.

படம் வெளியாகும் முன்பு திரை பிரபலங்களுக்கு படத்தை திரையிட்டு, அவர்களது விமர்சனங்களை புரமோஷனுக்கு பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கடைசி விவசாயி படத்தின் சிறப்புக் காட்சி நேற்று மூத்த பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் நெகிழ்ந்துபோய் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.

மூத்த பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பக்கத்தில், “’கடைசிவிவசாயி’ பார்த்தேன். ‘காக்காமுட்டை’ இயக்குநர் எம்.மணிகண்டனின் படம். விஜய்சேதுபதி, யோகிபாபு தவிர நிறைய புதுமுகங்கள், நிறைய அறிமுகங்கள். கதையின் நாயகன், எண்பது வயதைத் தாண்டிய மாயாண்டி (நல்லாண்டி) தான். நடித்தாரா வாழ்ந்தாரா என்றே பிரித்துப் பார்க்க முடியாது. படம் முடியும் போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வரிகளைப் படித்தபோது வலித்தது.

கதிர் எப்படி முளைக்கிறது, அதைப் பாதுகாப்பது எப்படி என்பதில் தொடங்கி விவசாயிகளை ஏமாற்றி நிலங்களை பெரு முதலாளிகளுக்கு கைமாற்றும் உள்ளூர் இடைத்தரகர்கள் வரை, பல முக்கிய விசயங்களை ஆழமாகவும், அழுத்தமாகவும், பதிவு செய்துள்ளார் இயக்குநர்.

பொய் வழக்கில் மாயாண்டியை சிக்கவைக்கும் போலீசார், வெள்ளந்தியான மாயாண்டியின் பதிலால் கோர்ட்டில் தலை குனிவதும் இயல்பான,ஆனால் அழுத்தமான காட்சிகள். மாஜிஸ்திரேட் பாத்திரம் வெகு இயல்பு. நகைச்சுவையை எல்லா பிரேமிலும் கொண்டு வரும் கிராமத்து மக்கள், இப்போதும் கண்முன்னே நிற்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சுகுணா திவாகர், “‘கடைசி விவசாயி’ பார்த்தேன். பொதுவாக ‘அவர் நடிக்கவில்லை. பாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார்’ என்போம். உண்மையில் எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் அப்படி நிகழ்ந்த தருணங்கள் மிகச்சில அதில் ஒன்று கடைசி விவசாயி.

அப்படி மாயாண்டி என்ற மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் நல்லாண்டி என்னும் முதியவர்.

தொழில்முறை நடிகர்களாய் அல்லாத மனிதர்களை நடிக்க வைப்பது எளிதான காரியமில்லை. இதில் நல்லாண்டி ஏதோ அவர் வீட்டிலும், வயலிலும் இருக்கிறாரே தவிர திரையில் நடிப்பதாகத் தோன்றவே இல்லை. படம் வெளியாகும்போது அவர் உயிருடன் இல்லை என்பது துயரமானது” என்று கூறினார்.

அம்பலவாணன்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

திங்கள் 7 பிப் 2022