மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

பிப்ரவரி 2 வரை திலீப்பை கைது செய்ய தடை!

பிப்ரவரி 2 வரை திலீப்பை கைது செய்ய தடை!

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனுவை ஐந்தாவது முறையாக நேற்று ஒத்திவைத்தது. அதேவேளை வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வரை திலீப் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

2017ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர், நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி ஒருவரை கொலை செய்ய நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாக அவரது நண்பரும், இயக்குநருமான பாலசந்திர குமார் சமீபத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலமாகப் பதிவு செய்தார்.

இதையடுத்து நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், முன்ஜாமீன் கோரி, நடிகர் திலீப் உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்கெனவே நான்கு முறை ஒத்திவைத்த கேரள உயர் நீதிமன்றம் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது ஐந்தாவது முறையாக ஒத்திவைத்தது.

நேற்றைய விசாரணையின்போது, திலீப்பை கைது செய்யக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை புதன்கிழமை வரை நீட்டிக்க திலீப் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவிக்காததால், இந்த உத்தரவை வரும் புதன்கிழமை வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, வரும் புதன்கிழமை பிப்ரவரி 2ஆம் தேதி வரை, முன்ஜாமீன் மீதான விசாரணையைத் தள்ளிவைத்து, கைது நடவடிக்கைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னதாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, முன்ஜாமீன் மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அப்போது திலீப் உட்பட ஆறு பேரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை காவல் துறையினரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் 27ஆம் தேதி வரை திலீப்பை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூன்று நாட்களும் தலா 11 மணிநேரம் விசாரிக்கப்பட்டனர். இதில் , நடிகர் திலீப்பிடம் மட்டும் 33 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக காவல் துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

-அம்பலவாணன்

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார் ...

2 நிமிட வாசிப்பு

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார்

தனுஷின் தி கிரேமேன் ட்ரெய்லர்!

2 நிமிட வாசிப்பு

தனுஷின் தி கிரேமேன்  ட்ரெய்லர்!

முருகதாஸின் புதியபட அப்டேட்!

4 நிமிட வாசிப்பு

முருகதாஸின் புதியபட  அப்டேட்!

வெள்ளி 28 ஜன 2022