சிவகார்த்திகேயனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயனின் 20ஆவது படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் துவங்க இருக்கிறது.
'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து 'டான்' படம் வெளியாக காத்திருக்கிறது. இதுதவிர 'அயலான்' படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை கூட்டி இருக்கிறது.
இந்நிலையில் தனது 20ஆவது படம் குறித்தான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் அறிவித்தார். அதன்படி, அந்தபடத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இவர் தெலுங்கில் 'ஜதிரத்னலு' என்ற வெற்றி படத்தை இயக்கி இருக்கிறார்.
தமிழ் தெலுங்கு என பைலிங்குவல் படமாக இது உருவாக இருக்கிறது. தெலுங்கில் நேரடியாக சிவகார்த்திகேயன் அறிமுகமாகும் படம் இதுவாக இருக்கும். இந்த படத்தில் 'மாநாடு' படத்தின் எடிட்டர் பிரவீனும் இணைந்துள்ளார். மேலும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன்தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
தற்போது 'டான்', 'அயலான்' படப்பிடிப்புகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் 20ஆவது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இது குறித்தான அப்டேட்டுகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் 'வருண் டாக்டர்' என டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழ் போலவே தெலுங்கிலும் படம் வெற்றியடைந்து வசூலை குவித்தது. இதன் காரணமாகவே தெலுங்கிலும் தனக்கான மார்க்கெட்டை நிலை நிறுத்தி கொள்ள நேரடியாக தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். 'டான்', 'அயலான்', 'SK20' மட்டுமல்லாது அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிரா