மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

மன்மத லீலை தலைப்பு சிக்கல் முடிவுக்கு வருமா?

மன்மத லீலை தலைப்பு சிக்கல் முடிவுக்கு வருமா?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள புதிய படமான ‘மன்மத லீலை’ படத்தின் டைட்டில் விவகாரம் தற்போது தமிழ்த் திரையுலகத்தில் சூடு பிடித்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு கலாகேந்திரா நிறுவனத்திடம் இந்தத் தலைப்பை வைக்க முறைப்படி அனுமதி பெறவில்லை. அதனால் இந்த தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று கே.பாலச்சந்தர் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், 1976ம் ஆண்டு, கலாகேந்திரா நிறுவனத்தின் பி.ஆர்.கோவிந்தராஜன், ஜே.துரைசாமி இருவரின் தயாரிப்பில், இயக்குநர் கே.பாலசந்தரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவானது ‘மன்மத லீலை’ திரைப்படம்.

இந்த வருடத்தோடு வெளியாகி 46 வருடங்கள் ஆகப் போகிறது. 'மன்மத லீலை’ என்கிற பெயரை, கலாகேந்திரா தயாரிப்பாளர்களின் அனுமதி இல்லாமல், இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு அனுமதி கொடுத்தது யார்? சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், தான் இயக்கும் திரைப்படத்திற்கு ‘மன்மத லீலை’ பெயரை சூட்டி இருப்பது தவறான செயலாகும்.

கலாகேந்திரா நிறுவனத்தார்களிடம் பேசி, அனுமதி பெறாமல், இதே பெயரில் திரையிட்டால், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கமும், தமிழ் ரசிகர்களும் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். கலாகேந்திரா நிறுவனத்தார்கள், சட்ட ரீதியாக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ‘மன்மத லீலை’ படத்தை முதல் பிரதி அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ‘லிங்கா’ சிங்கார வடிவேலனுக்காக இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. ‘மன்மத லீலை’ படத் தலைப்பு அறிவிக்கப்பட்ட பின்பு அதற்கு எதிராக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததற்கு பதில் அளிக்கும் வகையில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

அது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது, “இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். போற்றுகிறோம். அதற்காக 40 வருடங்களுக்கு முன்பு அவர் பயன்படுத்திய தலைப்பை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்கு அனுமதி பெற வேண்டும் என கூறுவது நியாயமல்ல.

இங்கு தயாரிப்பாளர்களுக்கு பல சங்கங்கள் உள்ளன. ஒரு படத்தைத் தயாரித்து முடித்து அதைத் தணிக்கைக்கு அனுப்பும்போது சங்கங்களிடம் ஒப்புதல் கடிதம் முன்பு தேவைப்பட்டது. இப்போது அது தேவையில்லை. யார் வேண்டுமானாலும் தணிக்கை துறையின் விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம் என்கிற நடைமுறை தற்போது உள்ளது. இது தெரியாமலேயே பலரும் இங்கு பேசுகின்றனர்.

இப்போது இருக்கின்ற தயாரிப்பாளர் சங்கங்களில் படங்களின் தலைப்பை பதிவு செய்து வைக்க ஒரு வசதி இருக்கிறது. இதன்படி புதிய தலைப்புகள் மட்டுமின்றி ஏற்கெனவே வெளியான திரைப்படங்களின் தலைப்புகளையும் பதிவு செய்து அதனை முறைப்படி வருடாவருடம் புதுப்பித்தும் வரலாம். இப்படி புதுப்பித்து வரக் கூடிய தலைப்புகளுக்கு அனைத்துத் தயாரிப்பாளர்கள் சங்கங்களும் பாதுகாப்பு அளிக்கின்றன.

ஆனால் கலாகேந்திரா நிறுவனத்தினர் எந்தவொரு தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. அவர்கள் தாங்கள் தயாரித்த படங்களின் தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கங்களில் பதிவு செய்யவும் இல்லை. புதுப்பிக்கவும் இல்லை. இந்தக் காரணத்தினால்தான் 3 தயாரிப்பாளர்கள் சங்கங்களும் இந்த ‘மன்மத லீலை’ படத்திற்கு ஆட்சேபனையில்லாத கடிதத்தை எனக்கு வழங்கியிருக்கின்றன.

இந்த வசதிகள்கூட தமிழ்த் திரைப்பட உலகத்தின் வளர்ச்சிக்காகவும், படமெடுத்த தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் மட்டுமே செய்யப்படுகிறது.

ஆனால் இது சட்டப்பூர்வமானதல்ல. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி காப்பிரைட் சட்டப்படி இது செல்லாது. மேலும் இந்த ‘மன்மத லீலை’ என்கிற தலைப்பு மத்திய அரசின் உரிய துறையில் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னரே தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பித்து பெறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பும்போதே ஒரு மரியாதைக்காக கலாகேந்திரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்துடன், இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் ராக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான முருகானந்தம் தலைப்பைப் பயன்படுத்துவது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் இந்த ‘மன்மத லீலை’ தலைப்புக்காக 50 லட்சம் ரூபாய் கேட்டார்கள்.தலைப்புக்காக சட்டப்படி அனுமதி பெற தேவையில்லாத நிலையிலும் ஒரு மரியாதைக்காக கேட்டபோதே இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் சொன்னார்கள். சாதாரண சின்ன பட்ஜெட் படத்தில் தலைப்புக்கு மட்டும் 50 லட்சம் ரூபாயை எப்படிக் கொடுப்பது” என்றார்.

இதற்கு பதில் கூறும் வகையில் கே.பாலசந்தர் ரசிகர் மன்றத்தின் செயலாளரான ‘கவிதாலயா’ பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ‘மன்மத லீலை’ திரைப்பட பெயர் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் அவர்கள் பேசிய ஆடியோ பதிவை கேட்டோம். இதில் சிங்காரவேலன் அவர்கள் சொல்லியிருக்கும் தகவல் பொய்யானது.

இயக்குநர் சிகரம் அவர்கள், இயக்கிய திரைப்படங்களின் பெயர்கள், கதை, திரைக்கதை, வசனம் என்கிற விசயங்களை, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் மரியாதை நிமித்தமாக முறைப்படி அனுமதி கேட்டு, உரிமை பெற்றுதான் இதுவரை மற்றவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

மேலும், இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு இது குறித்து ஏன் இதுவரையிலும் பேசவில்லை?

கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பாளர் அவர்களிடம் ‘மன்மத லீலை’ டைட்டில் உரிமையை முறைப்படி, இப்போது தயாரித்துள்ள தயாரிப்பாளரும், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் பேசி, படத்தின் பெயர் உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். வெற்றி பெற்ற, பழைய திரைப்படங்களின் பெயர்களை, உரிமையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் கேட்க தேவையில்லை என்று சிங்காரவேலன் அவர்கள் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்.

தில்லு முல்லு என்கிற திரைப்படத்தின் பெயரையும், கதையையும் உரிமை பெறாமல் மற்றொரு தயாரிப்பாளர் தயாரித்தபோது மறைந்த முன்னாள் இயக்குநர், அமரர்விசு சார் அவர்கள் மீடியா மூலமாக பேசி வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எல்லாம் சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியாதா? உதாரணத்திற்கு, சமீபத்தில் பிரபுதேவா அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ‘பொய்க்கால் குதிரை’ என்கிற திரைப்படத்தின் பெயரை, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் முறைப்படி பேசி உரிமை பெற்றுதான் அவர்கள் அந்த பெயரை பதிவு செய்து கொண்டனர்.மேலும், ‘நெற்றிக்கண்’, ‘எதிர் நீச்சல்’, ‘தில்லுமுல்லு’ என்கிற பெயர்களையும், கதைகளையும் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் முறைப்படி பேசித்தான் உரிமையை பெற்றுக் கொண்டனர் என்பதை சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

யார் வேண்டுமானாலும் பழைய வெற்றி விழா கண்ட பிரபலமான திரைப்படங்களின் பெயர்களையோ, கதைகளையோ வைத்துக் கொள்வதற்கு எந்தவிதத்திலும் உரிமையில்லை. உண்மையான தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. அதுதான் மனிதாபிமானம். சிந்தித்து நாம் நாமாக நல்லுணர்வோடு, மனசாட்சியோடு மரியாதை நிமித்தமாக சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேசி சமாதானமாக உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமே தவிர, தயாரிப்பாளர் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல என்பதை சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

-இராமானுஜம்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வெள்ளி 21 ஜன 2022