மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

இன்று களமிறங்கும் நான்கு படங்கள்!

இன்று களமிறங்கும் நான்கு படங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகத்தைக் காட்டிலும் அது சம்பந்தமான எதிர்மறையான கருத்துகள் மனித மனங்களை பலவீனப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

பொங்கலுக்கு பிரமாண்ட படங்களின் வருகையினால் திரையரங்கமும், அதன் கல்லாவும் பொங்கி வழிவதை கொண்டாட திரையரங்குகளும், தமிழ்த் திரைப்படத் துறையினரும் ஆவலுடன் காத்திருந்தனர், மக்களுக்கு நல்லதொரு சேதியுடன் புத்தாண்டு வாழ்த்தை அரசாங்கம் கூற வேண்டிய நேரத்தில் மக்கள் நலன் சார்ந்து அறிவித்த நடவடிக்கையால் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு என அறிவித்ததால் ஜாம்பவான்கள் சத்தமில்லாமல் பட வெளியீட்டை ஒத்திவைத்தனர்.

அதற்கு வேறு பல காரணங்களும் உண்டு என்கிற தகவல் தற்போது வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமா எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பதற்கும், தொழிலாளர்களுக்கு வருடம் முழுமையும் வேலை கிடைக்க காரணமாக இருப்பதற்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களே திரையரங்குகளை சோர்வடையவிடாமல் இருக்க இன்றும் நாளையும் வெளியாக உள்ளன.

50% இருக்கை அனுமதியுடன் இந்தத் திரைப்படங்கள் வெற்றி பெறுமா என்கிற கேள்விகள் கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களில் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால், அடிப்படையான உண்மை... தமிழகத்தில் ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் போன்ற முரட்டு வசூல் நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் முதல் நாள் மட்டுமல்ல, படம் வெற்றி என்ற செய்தி வந்த பின்னரும்கூட 100% இருக்கைகான டிக்கெட்டுகள் விற்பனை ஆனதில்லை என்கிற சிதம்பர ரகசியத்தை இன்றுவரை தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அடைகாத்து வருகின்றனர்.

நகரங்களில் புதிய படங்களுக்கு அரங்கு நிறைவதைப் பெருமையாக அறிவிக்கும் தயாரிப்பாளர்கள் நகரம் கடந்து உள்ள திரையரங்குகளில் 50% டிக்கெட்டுகள் படம் வெளியான முதல் ஏழு நாட்களும் நான்கு காட்சிகளுக்கும் விற்பனையாவதில்லை என்பதை கூறுவதில்லை.

கொரோனாவுக்கு முன் அதன் பின் என்று திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை ஆய்வு செய்யும் வர்த்தக ஆய்வாளர்கள் தகவல்படி ஒரு திரையரங்குக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் வருடம் முழுவதும் நகர்ப்புறங்களில் 23% புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 18% அளவில் தான் டிக்கெட் விற்பனை இருக்கிறது என்பதே உண்மை.

தமிழகத்தில் தற்போதுள்ள 950 திரைகளில் ஒரு காட்சியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் படம் பார்க்ககூடிய இருக்கை வசதி உள்ளது. நான்கு காட்சியும் அரங்கை நிறைக்கும் டிக்கெட் விற்பனை நடக்குமேயானால் முதல் நாள் 72 லட்சம் பேர் படம் பார்க்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கை படம் ஓடி முடியும் வரையிலும் 1.50 கோடியை இதுவரை தாண்டியதில்லை. தமிழகத்தில் அந்த சாதனையை நிகழ்த்தியவை பேய் படமான காஞ்சனாவும், மொழிமாற்று படமான பாகுபலியும். ரூபாய் 100 கோடி சம்பளம் என பெருமை பேசும் நடிகர்கள் நடித்த படங்கள் கூட இந்தப் படங்களின் சாதனையை சமன் செய்ய முடியவில்லை.

நாய் சேகர்

இந்த நிலையில்தான் இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த பிரபல நடிகர் சதீஷ் முதன்முறையாக நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. சதீஷ் ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடித்துள்ளார். 'மெர்சல்' உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் என்பவர்கள் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் லேப்ரடார் வகை நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி வகையில் தயாராகியுள்ள 'நாய் சேகர்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறது

என்ன சொல்ல போகிறாய்

இளம் வயதினருக்கான படமாக, என்ன சொல்ல போகிறாய், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம். இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். டிசம்பர் இறுதி வாரமே திரைக்கு வரவிருந்த இந்தப் படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகன் அஸ்வின் பேசிய தேவையில்லாத பேச்சுகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

தற்போது சர்ச்சைகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று வெளியாக உள்ளது. வலிமை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அஜித் குமார் (AK) ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அஸ்வின் குமார் ரசிகர்களோ அந்த அஜித்துக்கு பதிலாக இந்த AK வருகிறார் என்று வலைதளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'என்ன சொல்ல போகிறாய்' ரசிகர்களை என்ன சொல்ல வைக்க போகிறது இன்று மாலை தெரிந்துவிடும்.

கார்பன்

விதார்த்தின் 25ஆவது படம் இது. இதுவரை இரண்டாவது நாயகியாக நடித்துவந்த தன்யா பாலகிருஷ்ணன் தமிழில் முதல்முறையாக நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தை இயக்கிய ஸ்ரீனுவாசன் இயக்கியுள்ளார்.

நாயகன் காண்கின்ற கனவு நிஜத்திலும் நடக்க, அப்படி நாயகன் தனது தந்தையை பற்றி காணும் கனவு நிஜமாகிறது. இதன்பின் என்ன நடக்க போகிறது என்பதை கதைக்களமாக கொண்ட 'கார்பன்' ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும் என்கிறது படக்குழு.

கொம்பு வச்ச சிங்கம்டா

பொங்கல் பண்டிகை அன்று குடும்பங்களுடன், உறவினர்களுடன் திரைப்படம் பார்க்க விரும்புபவர்களுக்கான படம் கொம்பு வச்ச சிங்கம்டா. நடிகர் சசிகுமாரின் திரைப் பயணத்தில் ஒரு நடிகனாக பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று 'சுந்தரபாண்டியன்'. தமிழகத்தின் கிராம மக்களிடம் குடும்பங்களில் ஓர் உறுப்பினராக சசிகுமாரை ஏற்றுக்கொள்ள வைத்த இந்த படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர்கள் கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படமே 'கொம்பு வச்ச சிங்கம்டா'. சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடித்துள்ளார். அதேபோல் சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தர் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாராகியது. ஓடிடி வெளியீடு அல்லாமல் திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருந்து பல முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக இன்று திரைக்கு வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கிராமத்து மக்களின் ரசனைக்கு 'கொம்பு வச்ச சிங்கம்டா' தீனி போடும் என எதிர்பார்க்கலாம்.

வெவ்வேறு திரைக்கதை களத்துடன் நான்கு படங்கள் வெளியாகின்றன. நாளை பிரபுதேவா நடித்துள்ள தேள் மற்றும் சில படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டதால் நாளை வெளியாகவுள்ள படங்கள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

-அம்பலவாணன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 13 ஜன 2022