தமிழ் சினிமா: திரையரங்குகளும் ஓடிடியும்!

entertainment

தமிழ் சினிமாவில் பொது முடக்கத்திற்கு பின்பு வியாபாரம், தயாரிப்பு, திரையிடல் என அனைத்து பிரிவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

சுதேசி தன்மை மாற்றம் கண்டு, அந்நிய தன்மையும், கார்ப்பரேட் நடவடிக்கைகளும் தூக்கலாக இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் நுகர்வோர் கலாச்சாரத்தில் சினிமா என்பது தவிர்க்க முடியாதது. கோடிகளில் பணம் புழங்ககூடியது இந்த மார்க்கெட்டை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் நீண்டகாலமாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கௌரவத்திற்காகவும், பெருமைக்காகவும் சினிமா தியேட்டர் நடத்திக் கொண்டிருந்தவர்களை வணிகமயமாக யோசிக்க வைத்தது கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் திரையரங்குகள். அதன் விளைவாக கோடிக்கணக்கான ரூபாய்கள் தமிழகம் முழுவதும் முதலீடு செய்து நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது. அந்த திரையரங்குகளுக்கு தொடர்ச்சியாக புதிய படங்கள் தேவை.

வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்களை வைத்து படங்கள் தயாரிக்கின்ற வசதி படைத்த தயாரிப்பாளர்கள் தமிழில் இல்லை அதனால் நடிகர்களிடம் கால்ஷீட் வாங்க கூடிய தயாரிப்பாளர்கள் முதலீட்டாளர்களின் கங்காணிகளாக, புரோக்கர்களாக மாறி வருகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனம் என காலரை தூக்கிவிட்டு கொள்ளும் நிறுவனங்கள் உள்ளூர் பைனான்சியர்களிடம் கடன் வாங்குவதும் நடக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சினையை கூறி மக்களை பயமுறுத்தி வருகின்றனர். அரசாங்கங்கள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

இவற்றில் பொழுதுபோக்கு துறையில் சினிமாவை திரையரங்குகளில் திரையிடுவது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. புதிய படங்களை தயாரிப்பவர்கள் திரையரங்குகளை மட்டுமே நம்பி இருந்த வியாபார நடைமுறை மாறிவிட்டது. 2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் தயாரான விஸ்வரூபம் படத்தை திரையரங்கிலும், டிடிஹெச்-லும் ஒரே நேரத்தில் வெளியிட போவதாக தயாரிப்பாளர் கமலஹாசன் அறிவித்தபோது பெரும் பிரளயமே வெடித்தது, திரையரங்குகள் போர்க்கொடி தூக்கின.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் அமைப்புகள் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க சொல்லி நெருக்கடி கொடுத்தனர். இவை அனைத்தையும் தங்களுக்கு சாதகமாக அப்போதைய ஆளும் அதிமுக அரசு கமல்ஹாசனை பணியவைக்க பயன்படுத்திக்கொண்டது.

தமிழகம் தவிர்த்து உலகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியாகி வெற்றி உறுதியான பின்பு தமிழகத்தில் தாமதமாக வெளியாகி வெற்றிபெற்றது. அன்றைக்கு கமல்ஹாசன் எடுத்த முயற்சி ஏழு வருடங்கள் கழித்து இந்திய சினிமாவில் ஓடிடியாக அரங்கேறியிருக்கிறது.

அன்றைக்கு கமல்ஹாசனுக்கு ஆதரவாக டிடிஹெச்சை ஆதரித்த திருப்பூர் சுப்பிரமணியம் ஓடிடியில் படங்களை வெளியிடுவதை தொடக்கத்தில் எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்சினிமா வியாபாரத்தில் தொலைக்காட்சி உரிமை போன்று ஓடிடி ஒரு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த ‘ஓவர் த டாப்’ (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள்.

கொரோனா பெருந்தொற்றால் உலகில் மாறிப்போன பல விஷயங்களில் சினிமா வர்த்தகமும் ஒன்றாகும். கமல்ஹாசன் அடிக்கடி கூறுவதுபோல தொழில்நுட்பம் என்பது எப்போதும் மாறிக் கொண்டே இருப்பது, அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பார்.

ஒருகாலத்தில் டிடிஹெச்-ல் படம் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பிய தமிழ் சினிமாவில்தான் ஓடிடியில் படங்களை வெளியிட இன்று போட்டி உண்டாகியுள்ளது. ஜனவரியில் ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம், வலிமை போன்ற படங்கள் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கொரோனா தொற்றை தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியீட்டில் இருந்து வெளியேறியது.

எனவே தியேட்டரில் படங்கள் வெளியாவதில் நிச்சயமற்ற நிலை, தேதியை உறுதிப்படுத்த முடியாத நிலை நிகழும்போது ஓடிடி தளங்கள் தமிழ் சினிமாவின் எதிர்காலமாக மாறிவிடுமோ என்கிற கேள்வியும் எழுகிறது.

பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்கு வடிகாலாக இருந்தது. ஓடிடி தளங்களில் வெளியான பன்மொழி படங்களாகும். வர்த்தக ரீதியில் பார்க்க போனால் ஓடிடி உரிமம் என்பது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு புதிய வருமானத்திற்கான வழியாகும். தற்போது ஒரு சில படங்களின் சாட்டிலைட் உரிமத்தை காட்டிலும் டிஜிட்டல் உரிமம் அதிகமான தொகைக்கு விற்கப்படுகிறது. அதேபோல கொடுக்கப்படும் தொகையும் அதிகரித்துள்ளது.

ஓடிடி தளங்கள் நிறைய படங்களை வாங்குகிறார்கள். அது அத்தனையும் நேயர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று கூறமுடியாது . ஆனால் ஒரு தயாரிப்பாளர் பார்வையிலிருந்து பார்த்தால் அவருக்கு தனது பொருளை விற்பதற்கான புதிய சந்தை ஒன்று உருவாகியுள்ளது.

அதே சமயத்தில், குறிப்பிட்ட சில படங்கள் தியேட்டரில் ரீலீஸ் செய்தால் முதல் காட்சியிலேயே மூடுவிழா காண நேரும். ஆனால் அவை ஓடிடியில் பெரும் வெற்றியை பெறுகிறது.

ஆனால் சினிமா துறை என்பது வெறும் தயாரிப்பாளர்களை மட்டுமே உள்ளடக்கியது இல்லை. விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்கும் இதில் லாபம் வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

சில சமயங்களில் ஓடிடியில் வெளியான படங்கள் மக்கள் வரவேற்பை பெறாதபோது, அவை தியேட்டருக்கு வராமல் தாங்கள் நஷ்டத்திலிருந்து தப்பி விட்டதாக எண்ணுகிறார்கள் விநியோகஸ்தர்கள். ஓடிடி வர்த்தகத்திற்கு மொத்த துறையும் தற்போது பழகி கொண்டது,

தமிழ், இந்தி உட்பட ஜெய் பீம் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஓடிடி என்பது சிறிய படங்களுக்கு நிச்சயம் வரமாகத்தான் உள்ளது. ஆனால் அது சிறிய படங்களுக்கானது மட்டுமே என்பது இல்லை.

முன்பெல்லாம் தியேட்டர் கிடைக்காமல் போனால் படங்களே ஓடிடியில் வருகிறது என்ற கண்ணோட்டம் இருந்தது. ஆனால் முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்குமான இடைவெளியில் ஒரு படம் ஓடிடியில் வாங்கப்படவில்லை என்றால் தியேட்டருக்கு வருகிறது என்ற நிலைமை மாறியுள்ளது.

பெரிய படங்கள் சிறிய படங்கள் என்ற வித்தியாசத்தை கடந்து ஒரு படம் எந்த அளவிற்கு லாபம் ஈட்டுகிறது என்பதே முக்கியம். எனவே இந்த ஓடிடி என்பது அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ஜெய்பீம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியானது. ஐஎம்பிடி வரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. வருடத்தின் இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே ப்ரீமியர் செய்யப்பட்டபோது அது வரை இல்லாத அளவில் அதிக அளவிலான மக்களால் பார்க்கப்பட்டதாக டிஸ்னி தெரிவித்தது. இதில் பல சமயங்களில் ஓடிடியின் பார்வையாளர்களை கொண்டு படம் எத்தனை பேரை சென்று சேர்கிறது என்பதை துல்லியமாக அறிய முடிகிறது.

தியேட்டரோ அல்லது ஓடிடியோ எதுவாக இருந்தாலும் கதை நன்றாக இருக்க வேண்டும். எனவே ஒரு படம் வெற்றி பெற கதை மற்றும் சந்தைப்படுத்துதல் முக்கியமானது.

தமிழில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான அண்ணாத்தே 700 தியேட்டர்களில் வெளியானது. மாநாடு 418 தியேட்டர்களில் வெளியானது. குறைவான நாட்களில் அண்ணாத்தே வசூலை மாநாடு எட்டிப் பிடித்தது. காரணம் கதைகளம். எனவே சிறிய படங்கள், பெரிய படங்கள் என்பதைத் தாண்டி வர்த்தகம், அதற்கு அடிப்படை தேவையான கதைகளத்தை பொறுத்தே ஒரு படத்தின் ஓடிடி உரிமை உடனடியாக வியாபாரமாக காரணமாகிறது.

ஓடிடியை இங்கு கடுமையாக எதிர்த்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள். இது பற்றி அதன் அறிமுக நிலையில் டீரீம் வாரியர் எஸ்.ஆர். பிரபு கூறுகையில் , “தொழில்நுட்ப மாற்றங்கள், அதனால் உருவாகும் புதிய வியாபார சந்தைகளை நமது தனித்தன்மை மாறாமல் கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓடிடி என்பது புதிய வியாபார வரவு அப்படித்தான் பார்க்க வேண்டும்” என்றார். எஸ்.ஆர்.பிரபு கூறியது தற்போது

சாத்தியமாகியுள்ளது.

“ஓடிடி தரும் வசதிக்கு மக்கள் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டனர். தமிழகத்தில் வணிக ரீதியாக படங்களை திரையிடும் தியேட்டர்கள் 1000க்கும் குறைவாகவே உள்ளன. ஓடிடி வருகைக்கு பின் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகளில் ஹோம் தியேட்டர் உருவாக்கப்பட்டு படங்களை பார்க்கத் தொடங்கியுள்ளனர் மக்கள். இருந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை மக்கள் இழக்கவோ விட்டுக் கொடுக்கவோ தயாராக இல்லை” என்கிறார் ஹோம் தியேட்டருக்கான மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் பொறியாளர் கார்த்திக்.

தொலைக்காட்சி வந்த போது அது சினிமாவுக்கு எதிரானது என கருதப்பட்டது. தொலைக்காட்சி வசதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தெரிந்த தயாரிப்பாளர்கள் லாபகரமான வியாபாரிகளானார்கள். அதேபோன்றுதான் ஓடிடி. என்கிற புதிய வடிவம். ஒரு வகையில் தங்கள் படங்களை வியாபாரம் செய்வதற்கு தொலைக்காட்சி, ஓடிடி, தியேட்டர் என மூன்று தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. திரைப்படங்களுக்கு போட்டியாக தொலைக்காட்சி தொடர்கள் இவைகளுடன் போட்டிபோடக்கூடிய வகையில் குறும்படங்கள் உருவெடுத்தன.

மூன்றுக்கும் இப்போது விருதுகளும், விழாக்களும் நடத்தப்படுகின்றன. அதனால் சினிமா என்கிற வலிமையான ஊடகம் வலுவிழந்து போகவில்லை. அதேபோன்றுதான் திரையரங்குகளுக்கு போட்டியாக ஓடிடியில் புதிய படங்களை திரையிடும் பழக்கம் தற்போது உருவாகி வருகிறது. இவர்களுடன் போட்டி போடும் வகையில் தொலைக்காட்சிகளில் புதிய படங்களை நேரடியாக வெளியிடும் சூழல் எதிர்காலத்தில் உருவாகும்.

இதனால் தொலைக்காட்சி, ஓடிடி, திரையரங்குகள் என ஒவ்வொன்றுக்கும் அதன் தன்மைக்கு ஏற்ப, பட்ஜெட் திட்டமிடப்பட்டு படங்களை தயாரிக்க கூடிய சூழல் உருவாகும். தற்போது ஓடிடி தளங்களுக்கு வெப் சீரிஸ் தயாரிப்பது போன்று திரைப்படங்களும் தயாரிக்க தொடங்கியுள்ளனர். ஓடிடி வருகையினால் தமிழ் சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்திருக்கிறது. புதிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகளுக்கான தேவைகள் அதிகரித்திருக்கிறது.

திரைப்படங்களை ஓடிடி தளங்கள் வாங்குவது என்பது லாபகரமான ஒன்றாக இருந்தாலும் ஓடிடி தளங்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு படைப்பை உருவாக்குவதில் பல சிரமங்களும் உள்ளன. ஓடிடி தளத்தில் புது யோசனைகள் வரவேற்கப்பட்டாலும் ஓடிடி தளங்களால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் சில சமயங்களில் அதீதமாக உள்ளன. இவை அனுபவரீதியாக காலப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் .

பெருந்தொற்று காலத்தில் தயாரிப்பாளர்களுக்கும், வீட்டுக்குள் முடங்கிகிடந்த மக்களுக்கு வடிகாலாக இருந்த ஓடிடி தளங்கள், தற்போது சினிமாவில் மையப்புள்ளியாக மாறி இருக்கிறது. ஓடிடி மாற்றம் என்பது கட்டாயம் நிகழ்ந்துதான் ஆகவேண்டும். இருப்பினும் தமிழ் ஓடிடி பார்வையாளர்களின் தேவைக்கு ஏற்ப பண்பாடு, கலாச்சாரங்களை பலி கொடுக்காத படைப்புக்கள் ஓடிடி தளங்களில் வெளிவரவேண்டும் என்பது புதிய படைப்பாளிகள் கூற்றாக இருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தொலைக்காட்சி, ஓடிடி, திரையரங்கு என மூன்று தளங்களுக்கும் ஏற்ப அல்லது தனித்தனியாக படங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *