மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

அன்பறிவு எப்படி இருக்கிறது?

அன்பறிவு எப்படி இருக்கிறது?

மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி, அதனை தொடர்ந்து நட்பே துணை, நீ சிரித்தால் என இவர் நடித்த மூன்று படங்களும் வணிக ரீதியாக முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது.

அதன் காரணமாக சிவகுமாரின் சபதம் , அன்பறிவு ஆகிய இரண்டு படங்களையும் சொந்தமாக தயாரித்தார் ஆதி. ஆதி நடித்து வெளியான முதல் மூன்று படங்களும் வெற்றிபெற்றது. கடந்தகாலத்தில் நாம் எப்படி படம் எடுத்தாலும், என்ன கதை சொன்னாலும் படம் ஓடிவிடும் என்கிற மனநிலை முன்னணி நடிகர்களிடம் இருந்தது.

கதையின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தங்கள் மேல் நம்பிக்கை வைத்து மோசமான தோல்வியை சந்தித்தவர்களில் ஒருவர் கரகாட்டகாரன் ராமராஜன். அதுபோன்று ஆதி தயாரித்திருக்கும் படம்தான் அன்பறிவு.

தமிழ் சினிமாவில் பேசும் படம் எடுக்க தொடங்கிய காலம் முதல் கடைசியாக சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான வேல் , விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் போன்ற இரட்டையர்கள் கதையை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் ஆதி.

நேரடியாக ஜனவரி 7 அன்று ஓடிடியில் அன்பறிவு வெளியானது. மதுரை பக்கத்தில் இருக்கும் அரசகுளம் என்ற கிராமத்தில் பிற்போக்குதனமும், பழமையான வழக்கங்களை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருபவர் முனியாண்டி (நெப்போலியன்). அவரது ஒரே மகள் லட்சுமி (ஆஷா சரத்). தன் கல்லூரி வகுப்பு தோழன் பிரகாசத்தை (சாய் குமார்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். முதலில் எதிர்க்கும் நெப்போலியன் பின்னர் வீட்டோடு மாப்பிள்ளையாக அவரை ஏற்றுக்கொள்கிறார். நெப்போலியனின் கையாளாக மைனா கதாநாயகன் பசுபதி (விதார்த்) உள்ளார். நெப்போலியனுக்கும் அவரது மருமகனான சாய் குமாருக்கும் இடையே சந்தேக தீயை மூட்டி எண்ணெய் ஊற்றி பிரிக்கிறார். தனது இரட்டைப் பிள்ளைகளில் ஒரு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் சாய் குமார். போகும்போது வீட்டில் இருக்கும் நகை, பணத்தை அவர் எடுத்துச் சென்றுவிட்டதாக நெப்போலியனிடம் பொய் சொல்லி நிரந்தரமாக பிளவை ஏற்படுத்துகிறார் விதார்த்.

தாத்தா நெப்போலியனிடமும், தாய் ஆஷா சரத்திடமும் வளரும் ஒரு குழந்தை அன்பு (ஆதி) ஊரில் கட்டப் பஞ்சாயத்து, அடிதடி செய்பவராக நெப்போலியனால் வளர்க்கப்படுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய சாய் குமார் கனடாவில் இப்போது ஒரு பெரிய தொழிலதிபர். அவரிடம் வளரும் அறிவு (இன்னொருஆதி) நகரத்து இளைஞராக உலக ஞானம் உள்ளவராக வளர்க்கப்படுகிறார். எதிர்பாராத தருணத்தில் இந்தியாவில் இருக்கும் தனது தாயையும், அண்ணனை பற்றித் தெரிந்துகொள்ளும் அறிவு அவர்களைத் தேடி கிராமத்துக்கு வருகிறார். இரு குடும்பமும் மீண்டும் இணைந்ததா? நிரந்தர பகை முடிவுக்கு வந்ததாஎன்பதே அன்பறிவு திரைக்கதை.

எங்க வீட்டுப் பிள்ளை, வேல் படங்களில் பார்த்த இடம் மாறும் இரட்டையர் பாணி கதைதான். எனினும் அந்தப் படங்களில் திரைக்கதையில் இருந்த ஜீவனோசுவாரஸ்யமோ, கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டும் யுக்தியோ அன்பறிவில் இல்லை. வணிக நோக்குடன் தயாரிக்கப்படும் குடும்பப் பொழுதுபோக்கு சினிமா என்றாலே ஒரு கிராமம், கூட்டுக்குடும்பம், எதைப்பற்றியும் கவலைப்படாத நாயகன், நாயகி, பன்னாட்டு நிறுவனம் அதற்கு துணைபோகும் அரசியல்வாதி வில்லன் என்பது தமிழ் சினிமா திரைக்கதையில் எழுதப்படாத விதியாக மாறிவருகிறது. இந்த விதிகளை இம்மி பிசகாமல் கடைப்பிடித்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் ராம்.

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஆதியின் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. மதுரை வட்டார மொழியில் இழுத்து இழுத்துப் பேசினால் அன்பு, வார்த்தைகளுக்கு இடையே சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலம் கலந்து பேசினால் அறிவு. வழக்கமான பொழுதுபோக்கு குடும்ப சினிமாக்களில் என்ன வேலையோ அதே வேலைதான் இதிலும் நாயகிகளுக்கு. இவர்கள் தவிர நெப்போலியன், ஆஷா சரத், சாய் குமார், தீனா, ரேணுகா என அனைவரும் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவே. வில்லனாக நடித்துள்ள விதார்த் தன்னால் இயன்ற அளவு அந்த கதாபாத்திரத்திற்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்.

படத்தின் மையக் கரு இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் சாதிப் பிரச்சினை. ஆனால், படத்தில் எந்த இடத்திலும் ‘சாதி’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படவில்லை. மாறாக சில இடங்களில் கொள்கை சில இடங்களில் ஊர் பிரச்சினை அல்லது குடும்பப் பிரச்சினையாக சொல்லப்படுகிறது. சரி இதைத் தாண்டி ஒரு சினிமாவாக ‘அன்பறிவு’ நியாயம் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. படம் முழுக்க திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகள். படத்தின் வில்லன் விதார்த் ஒரு அமைச்சர். ஆனால் அவருக்கு நெப்போலியன் குடும்பப் பிரச்சினைகளை டீல் செய்வது, ஊரில் நிகழும் அடிதடி பஞ்சாயத்துக்களை தீர்த்து வைப்பது தான் வேலையா?

படத்தின் மிகப்பெரிய பலம் நெப்போலியன், விதார்த் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மதுரையைக் காட்டும்போதும் சரி, கனடா தொடர்பான காட்சிகளில் உறுத்தல் இல்லாத வகையில் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆதியின் பின்னணி இசையில் குறை சொல்ல எதுவுமில்லை. யுவன் குரலில் ‘அரக்கியே’ பாடல் மட்டும் ஓகே ரகம். மற்றவை ஈர்க்கவில்லை. குடும்பப் பொழுதுபோக்கு சினிமா என்கிற பெயரில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் திரைக்கதையை திருடி திரைப்படம் எடுப்பார்களோ தெரியவில்லை.

இராமானுஜம்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

சனி 8 ஜன 2022