மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜன 2022

பொங்கல் ரேஸில் இருந்து விலகும் வலிமை!

பொங்கல் ரேஸில் இருந்து விலகும் வலிமை!

அஜீத்குமார் கதாநாயகனாக நடித்துள்ள வலிமை திரைப்படம் 2019 டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

நேர்கொண்ட பார்வை இயக்குநர் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கும் படம் வலிமை. கொரோனா இரண்டு அலைகளையும் கடந்து 2021 தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. வலிமை போன்றே கொரோனா பொது முடக்கத்தில் முடங்கி இருந்த ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே படத்தை தீபாவளி வெளியீடு என்று அறிவித்ததால் நேரடி போட்டியை தவிர்க்க வலிமை 2022 பொங்கல் வெளியீடு என அறிவித்தனர்.

கொரோனா வைரசின் மூன்றாவது அலையாக தற்போது ‘ஒமிக்ரான்’ என்ற வைரஸின் தாக்குதல் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலும் வைரஸ் தாக்குதலில் சிக்கியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி சினிமா தியேட்டர்களில் 50சதவிகிதம் பார்வையாளர்களுக்குத்தான் அனுமதி என்று 2021 டிசம்பர் 31 அன்று அறிவித்தது. 2022 ஜனவரி 6 இரவு முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல், மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவித்தது.

100% இருக்கை 50% ஆக குறைக்கப்பட்ட நிலையில் ஜனவரி 7 அன்று வர விருந்த ஆர்.ஆர்.ஆர், ஜனவரி 13 அன்று வெளியாக இருந்த இரண்டு படங்களும் வெளியீட்டை ரத்து செய்தன. வலிமை படத்தயாரிப்பு தரப்பு என்ன ஆனாலும் வந்தே தீருவோம் என கூறி வந்தனர். படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து தரும் போனி கபூர் கடந்த ஒரு வார காலமாக வலிமை திட்டமிட்டபடி ஜனவரி 13 அன்று உறுதியாக வெளியாகும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

படத்தை வாங்கிய ஏரியா விநியோகஸ்தர்கள் அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை கடைபிடித்து வலிமை படத்தை திரையிட்டால் படம் தமிழகத்தில் 100 நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலும் படத்தில் நடிக்க அஜீத்குமார் வாங்கியுள்ள 50 கோடி ரூபாய் வருவாய் பெறவே மூச்சு திணறிடும் என கூறினார்கள்.

விருப்பமில்லாதவர்கள், ரிஸ்க் எடுக்க தயாராக இல்லாத விநியோகஸ்தர்கள் வலிமை வியாபார ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்குத்தான் அனுமதி என்பதாலேயே பெரிய பட்ஜெட் படங்களுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கினால் சினிமா தியேட்டர்களில் இரவுக் காட்சி ரத்து செய்யப்படுவதால் குடும்பங்கள் வருவது பாதிக்கப்பட்டு அதிலும் ஒரு அடி விழுந்தது. மேலும் அனைத்து காட்சிகளும் நிச்சயமாக ஹவுஸ்புல்லாகும் வாய்ப்புள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் வசூல் மொத்தமாகப் பாதிக்கப்படும்.

இதனால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய மிகப் பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடு நிறுத்தப்பட்டன. 400 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டு 800 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களே ரீலீசை ரத்து செய்திருக்கிறது. 150 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள வலிமை படத்திற்கான 60% வருவாயை தமிழக திரையரங்குகள் மூலம் தான் எடுத்தாக வேண்டும். அஜீத்குமார் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமே வருவாய் அதிகமாக இருக்கும், விஐய் படம் போன்று சர்வதேச அளவில் பெரிய அளவிலான வியாபாரம் இல்லை. இவற்றை கணக்கில் கொண்ட வலிமை படத்தின் முதன்மை முதலீட்டாளரான ஜீ தமிழ் நிறுவனம் படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் வலிமை படம் ஜனவரி 13 அன்று வெளியீடு இல்லை என்று போனிகபூர் நேற்று மாலை அறிவித்துள்ளார். இதனால் இந்தாண்டு பொங்கல் தினத்தன்று சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வெள்ளி 7 ஜன 2022