இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: வெற்றியைத் தொடருமா இந்தியா?

entertainment

தென்னாப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது. செஞ்சூரியனில் வெற்றியை ருசித்த முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 3) தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 3) இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இதுவும் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடிய ஆடுகளம் தான். இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 30 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று விளையாடி வரும் இந்தியாவுக்கு ராசியான மைதானம் ஜோகன்னஸ்பர்க். இங்கு இந்திய அணி ஒருபோதும் தோற்றது கிடையாது. இந்த மைதானத்தில் தோல்வியே காணாத ஒரே அணி இந்தியாதான். இங்கு இதுவரை ஐந்து டெஸ்டுகளில் ஆடியுள்ள இந்தியா அதில் இரண்டில் வெற்றியும், மூன்றில் டிராவும் கண்டுள்ளது.

முதலாவது வெற்றி 2006ஆம் ஆண்டு கிடைத்தது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதுதான் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் முதல் வெற்றியாகவும் அமைந்தது.

இரண்டாவது வெற்றி 2018ஆம் ஆண்டு விராட் கோலியின் தலைமையில் கிடைத்தது. இந்த டெஸ்டில் இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா 177 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், புஜாரா, விராட் கோலி ஆகியோர் இங்கு சதம் அடித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி இந்த மைதானத்தில் 42 டெஸ்டுகளில் விளையாடி 18இல் வெற்றியும், 13இல் தோல்வியும், 11இல் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசியாக நடந்த 20 டெஸ்டுகளில் 19இல் முடிவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்டில் இந்தியா வாகை சூடினால் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் தொடரை வென்று வரலாறு படைக்கும். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் (ஒன்பதாவது வெற்றி) என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார்.

மேலும், விராட் கோலிக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானது. இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு சதம், இரண்டு அரை சதம் அடித்துள்ளார். இந்த மைதானத்தில் விராட் கோலி 310 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து வீரர் ஜான் ரெய்டு 316 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி இன்னும் 7 ரன்கள் அடித்தால், ஜோகன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெறுவார். ரிக்கி பாண்டிங் 263 ரன்களும், ராகுல் டிராவிட் 262 ரன்களும், டேமின்மார்ட்டின் 255 ரன்களும் அடித்துள்ளார்.

இந்த நிலையில், போட்டியில் களம் இறங்க மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதாக கோலி கூறியுள்ளார். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் இன்று தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *