மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

சிறப்புப் பார்வை: தமிழ் சினிமா 2021!

சிறப்புப் பார்வை:  தமிழ் சினிமா 2021!

திரைத்துறையே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்திருந்தது. இருப்பினும் நிறைய இழப்புகள், சில வெற்றிகள், மரணங்கள் என பல நிகழ்வுகள் நடந்தன.

தமிழ் சினிமா 2021 எப்படி இருந்தது என்பதை சற்று திரும்பி பார்ப்போம்....

2021ம் ஆண்டின் முதல் நாளிலேயே வழக்கம்போல இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன.

புத்தாண்டின் ஆரம்பத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தொடங்கியது.

ஜனவரி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'மாஸ்டர்' திரைப்படம் 50% இருக்கை அனுமதியுடன் ஜனவரி 13ம் தேதி வெளியானது. ஆனால் மால், மல்டிபிளக்ஸ் போன்ற திரையரங்குகளில் மட்டுமே இந்த விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்பட்டது. பிற திரையரங்குகளில் வழக்கம்போலவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாஸ்டர் குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடப்பதற்கு காரணமாக அமைந்தது.

பேட்ட படத்தை தொடர்ந்து ‘மாஸ்டர்' படத்தில் முதல் முறையாக ஹீரோ விஜய்க்கு மற்றொரு கதாநாயக நடிகர் விஜய்சேதுபதி நேரடி வில்லனாக நடித்தார். நடிப்பு ஆளுமை இருந்தால் சூப்பர் ஸ்டார்கள் படத்தில் கூட வில்லன் கதாநாயகனாக முடியும் என்பதை மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி நிரூபித்தார்.

உடம்பை குறைத்து படப்பிடிப்புக்கு வந்த சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்’ படம் மாஸ்டர் படத்துக்கு போட்டியாக ஜனவரி 14 அன்று களமிறங்கி தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களை நஷ்டப்படுத்தியது.

மாதவன் நடித்த 'மாறா', ஜெயம் ரவி நடித்த 'பூமி' ஆகிய படங்கள் ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியானது.

பிப்ரவரி

கொரோனா முதல் அலை தாக்கத்திற்குப் பிறகு தியேட்டர்கள் 100 சதவீத அனுமதியுடன் பிப்ரவரி 1ம் தேதி முதல் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

யோகிபாபு கதைநாயகனாக நடித்த 'மண்டேலா' படம் பிப்ரவரி 4ம் தேதி, நேரடியாக தொலைக்காட்சியிலும் பின்பு அன்று இரவே ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

விஜய் சேதுபதி, கவுதம் மேனன், அமலா பால் மற்றும் பலர் நடிக்க கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இயக்கிய அந்தாலஜி படமான 'குட்டி ஸ்டோரி' படம் பிப்ரவரி 12 தியேட்டர்களில் வெளியானது.

சந்தானம் நாயகனாக நடித்த 'பாரிஸ் ஜெயராஜ்' பிப்ரவரி 12ல் வெளியாகி வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

விஷால் நாயகனாக நடித்த 'சக்ரா' படம் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த 'ஏலே' படம் நேரடியாக தொலைக்காட்சியில் பிப்ரவரி 28ம் தேதி வெளியானது. இதன் மூலம் தியேட்டர், ஓடிடி, என்பதை கடந்து நேரடியாக தொலைக்காட்சியில் படத்தை வெளியிடலாம் என்கிற புதிய நடைமுறை தமிழ் சினிமாவில் அறிமுகமானது.

மார்ச்

செல்வராகவன் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா நாயகனாக நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் நீண்ட வருட போராட்டத்திற்கு பின் மார்ச் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

மார்ச் 12ம் தேதி ஆர்யா நடித்த 'டெடி' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சகர்கள், பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றது.

பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'காடன்' படம் மார்ச் 26ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வணிகரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தியது..

ஏப்ரல்

ஏப்ரல் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியான கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் வணிகரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.

ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடித்து தியேட்டர்களில் வெளியான 'கர்ணன்' படத்தில் வருடம் பற்றிய தகவல் ஒன்றை தவறாகச் சொன்னதால் அரசியல் ரீதியாக சமூக வலைதளங்களில் கடுமையான விவாதம் சர்ச்சை எழுந்து பின்னர் அது மாற்றப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தியேட்டர்களில் இருக்கைகளுக்கான அனுமதி ஏப்ரல் 10ம் தேதி முதல் 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'பரமபத விளையாட்டு' படம் ஏப்ரல் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த 'வணக்கம்டா மாப்ளே' படம் ஏப்ரல் 16ம் தேதி நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது

2021ம் ஆண்டின் ஆரம்பம் 50 சதவீத இருக்கையுடன் ஆரம்பித்து, பிப்ரவரி 1ல் 100 சதவீத இருக்கை அனுமதியாக மாறி, கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் திரையரங்குகளை மீண்டும் மூட அரசு உத்தரவிட்டது

தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்பட்டதால், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படம் நாயகன் தனுஷ் விருப்பத்தையும் மீறி ஓடிடி தளத்தில் வெளியானது. தனுஷ் நடித்து வெளியான படங்களில் மிகவும் மோசமான விமர்சனத்தை எதிர்கொண்ட படமானது.

ஜூலை

ஜூலை 22ம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அதிகமான மீம்ஸ்கள் வெளியிட கச்சாப்பொருளாக மாறி வடிவேலு படங்களுக்கு தற்காலிக விடுமுறை வழங்கியது.

ஆகஸ்ட்

மணிரத்னம் தயாரிப்பில், ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த 'நவரசா' படம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியானது.

ஆகஸ்ட் 13ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி தோல்வியை தழுவியது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்த காரணத்தால் ஏப்ரல் 26ம் தேதி முழுமையாக மூட உத்தரவிடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதித்தது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா 6 படங்களும், அக்டோபர் மாதத்தில் 7 படங்களும், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகின..

செப்டம்பர்

மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து தயாரித்த 'லாபம்' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. செப்டம்பர் 9 அன்று வெளிவந்து ஏமாற்றத்தைத் தந்தது.

செப்டம்பர் 10ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படமான 'தலைவி' வெளிவந்தது. இந்தப் படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது அரசியல் அரங்கில் மகிழ்ச்சியையும், திரையுலகில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

செப்டம்பர் 10ல் சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' படம் ஓடிடியில் வெளியானது. அப்படத்தில் இடம் பெற்ற ரீமிக்ஸ் பாடலான 'பேரு வச்சாலும்…' பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது.

விஜய்சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' படம் செப்டம்பர் 10ம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடப்பட்டது.

தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 17 அன்று ஓடிடி தளத்தில் வெளியான விஜய் சேதுபதி நடித்த 'அனபெல் சேதுபதி' படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமான 'ப்ரண்ட்ஷிப்' படம் செப்டம்பர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வந்த சுவடே தெரியாமல் தியேட்டரை விட்டு வெளியேறியது.

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளிவந்த படங்களில் விஜய் ஆண்டனி நடித்து செப்டம்பர் 17ல் வந்த 'கோடியில் ஒருவன்' படம்தான் முதல் வெற்றிப் படம் என அப்படக்குழுவினர் அறிவித்தனர்.

அக்டோபர்

மோகன்ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் நடித்து அக்டோபர் 1ல் வெளிவந்த 'ருத்ர தாண்டவம்' படம் வெளியாவதற்கு முன்பாகவே பாஜக, இந்துமத தீவிர அனுதாபிகள் படத்தை ஒவ்வொரு இந்துவும் பார்க்க வேண்டும் என்று ஊடகங்களில் பேசியது அந்தப்படத்தின் வெற்றிக்கு எதிரானதாக அமைந்தது. இருந்தபோதிலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள், சேலம் மாவட்டத்தில் அபரிமிதமான வசூலை படம் அறுவடை செய்தது.

சிவகார்த்திகேயன் நடித்து அக்டோபர் 9ல் வெளிவந்த 'டாக்டர்' படம் அவரது திரையுலக வாழ்க்கையில் ரஜினிமுருகன் வெற்றிக்குப் பின் விஸ்வரூப வெற்றிப்படமாக வசூலில், பார்வையாளர் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.

சுந்தர் சி இயக்கத்தில் நிறைய எதிர்பார்ப்புகள், பில்டப்புகளுடன் செப்டம்பர் 14ல் வெளியான 'அரண்மனை 3' படம் எதிர்பார்த்த அடிப்படையில் கல்லாவை நிரப்பவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லாத வெற்றியை பெற்றது.

சமுத்திரக்கனி இயக்கி, நாயகனாக நடித்த 'விநோதய சித்தம்' படம் அக்டோபர் 13ல் ஓடிடி தளத்தில் வெளியானது படங்களில் அதிகமான வசனங்களை கருத்து கந்தசாமியாக பேசும் சமுத்திரகனி இந்தப்படத்தில் குறைவான வார்த்தைகளில் பேசியதே படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாக அமைந்தது

அக்டோபர் 14ல் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி நடித்த 'உடன்பிறப்பே' ஓடிடி தளத்தில் வெளியானது படைப்புரீதியாக மோசமான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியானது .

நவம்பர்

நவம்பர் 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சூர்யா நடித்து நவம்பர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' படம் வணிகரீதியாக, விமர்சனரீதியாக பெற்ற வெற்றிக்கு இணையாக எதிர்கருத்துக்களை,வன்னிய சமுதாயத்தலைவர்களிடம் இருந்து எதிர்கொண்டது.

நவம்பர் 1 முதல் தமிழ்நாடு அரசு வழங்கிய 100% இருக்கை அனுமதி நவம்பர் 4ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', விஷால் நடித்த 'எனிமி' ஆகிய படங்களின் வசூலுக்கு பயன்பட்டது .

சந்தானம் நாயகனாக நடித்த 'சபாபதி' படம் நவம்பர் 19ம் தேதி வெளியாகி தோல்வியை தழுவியது.

தொடர் போராட்டங்களுக்குப் பின் தயாராகி, வெளியீட்டிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஒரு காட்சி தாமதமாக வெளியான சிலம்பரசன் நாயகனாக நடித்த 'மாநாடு' படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றியை பெற்றது.

டிசம்பர்

ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்த 'பேச்சுலர், ஜெயில்' டிசம்பர் 3, டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் வெளியானது. 'பேச்சுலர்' படம் தயாரிப்பாளருக்கு லாபத்தையும் ஜெயில் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.

வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 31ம் தேதி 12 படங்கள் வெளிவந்தன. வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1லும் படங்கள் வெளிவந்தன, கடைசி நாளான டிசம்பர் 31லும் படங்கள் வெளிவந்தன.

விருது பெற்ற ரஜினி

நடிகர் ரஜினிகாந்திற்கு திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கியது.

எம்எல்ஏவான உதயநிதி

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

தல என அழைக்காதீர்கள்

தன்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்மன்றத்தை ஏற்கனவே கலைத்துவிட்ட அஜித்குமார் அறிக்கை வெளியிட்டார்.

பிரபலங்களின் மரணம்

நகைச்சுவை நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும்அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இயக்குனர்கள் ஜிஎன் ரங்கராஜன், எஸ்பி ஜனநாதன், கே.சொர்ணம், சி.வி.சசிகுமார், கோவி.மணிசேகரன், ஆச்சார்யா ரவி, பாடலாசிரியர்கள் புலமைப்பித்தன், பிறைசூடன், ஆகியோர் மரணம் குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, எஸ்.தயாளன், தயாரிப்பாளர்கள் கே.வி.பாலு, சேலம் சந்திரசேகர், பாபுராஜா, நடிகர்கள் நிதிஷ் வீரா, கில்லி மாறன், சுபாவெங்கட் ஆகியோர் மரணம் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கட்டுப்பாடு

வருடத்தின் இறுதி நாள் (31.12.2021) தமிழ்நாடு அரசு திரையரங்குகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 100% இருக்கை அனுமதியை 50% ஆக குறைத்து இயக்க உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

- இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

சனி 1 ஜன 2022