iஜெயில் ஓடிடி உரிமை: நீதிமன்றம் உத்தரவு!

entertainment

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘ஜெயில்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை குறித்து எந்த முடிவும் எடுக்கக் கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மனுவில், படத்தைத் தயாரித்துள்ள கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ‘ஜெயில்’ திரைப்படத்தின் காப்புரிமை, ஓடிடி உரிமை, சேட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி, கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது

படத்தின் விநியோக உரிமையைத் தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரெனத் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜெயில்’ படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ‘ஜெயில்’ திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விநியோக உரிமையைத் தங்களுக்கு வழங்குவதாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சட்டவிரோதமாகப் படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நேற்று (டிசம்பர் 3) முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், படத்தின் விநியோக உரிமையை வழங்கிவிட்டு தற்போது வேறொரு நபர் மூலம் படத்தை வெளியிட முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்குக் காப்புரிமை வழங்கவில்லை எனவும், படத்தை வெளியிடத் தகுதியான வினியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ‘ஜெயில்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை குறித்து வரும் 6-ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸுக்கு உத்தரவிட்ட நீதிபதி, திரையரங்க விநியோக உரிமை குறித்து வரும் திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையைத் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *