மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 டிச 2021

அரசியல் கதைக்களத்தில் ஜி.வி.பிரகாஷ்

அரசியல் கதைக்களத்தில் ஜி.வி.பிரகாஷ்

ஞானவேல் ராஜா மற்றும் திருக்குமரன் சார்பில் சி.வி.குமார் இணைந்து வழங்க, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”.

பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்துகொள்ள இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னை பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் ரஞ்சித் பேசுகையில், “ஞானவேல் ராஜா, சி.வி.குமார் இருவரும் இணைந்து புதுசா ஒரு படம் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தக் கூட்டணி எனக்கு ரொம்பப் பிடிச்ச கூட்டணி.

ஜிவி சார் நடிக்கிறார். அவருக்கு என் படங்கள் பிடிக்கும், என் படங்கள் பார்த்துப் பேசுவார். அவருடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில், விரைவில் ஒரு படம் பேசிட்டு இருக்கோம். இந்தப் படம் பற்றி சொன்னார்கள். இந்தப் படம் முக்கியமான ஊரின் வரலாற்றைப் பேசுவதாக சொன்னார்கள். மூணாறு ஊரின் அரசியல் எனக்குத் தெரியும். அந்த அரசியலை இந்தப் படம் பேசுவது மகிழ்ச்சி. சிறப்பான படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி, “பழைய கூட்டணி மீண்டும் இங்கு இணைந்திருக்கிறது. எல்லோரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று பேச்சிலர் பார்த்தேன். நன்றாக இருந்தது. அடுத்து ஜெயில் படமும் நன்றாக வந்திருக்கிறது. கூழாங்கல் பல விருதுகளை வென்றிருக்கிறது. தமிழ் சினிமா நல்ல பாதையில் பயணிக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்கள் வரவுள்ளன. இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் நன்றி” எனத் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசுகையில், “தமிழ் சினிமாவில் இது ஒரு வெற்றிக்கூட்டணி. ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியைச் செய்தார்கள். அவர்கள் கூட்டணியில் இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும். ஜிவி தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகராக இருக்கிறார். இயக்குநர் ரஞ்சித், ஆர்யாவைப் பெரிய ஹீரோவாக்கி விட்டார். அதேபோல் ஜிவியையும் அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும். இந்தப் படத்தில் மிகச்சிறந்த கூட்டணி அமைந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் ஆரி, “ ‘ரிபெல்’ என்கிற தலைப்பு எல்லோருக்கும் பொருந்தாது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஜிவி சாருக்கு பொருந்தக்கூடிய தலைப்பு இது. மக்களுக்கான அரசியலைப் பேசவுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படம் சமூகத்துக்கான அரசியலைப் பேசும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி” எனக் கூறினார்.

இயக்குநர் நிகேஷ் பேசுகையில், “இது ஓர் அரசியல் படம், ரஞ்சித் சார் திரைப்படங்கள்தாம் எனக்கு சினிமாவைக் கற்று தந்தது. அவர் இங்கு வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி. சமூகத்துக்குத் தேவையான படமாக இந்தப் படம் இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.

இயக்குநர் கௌரவ், “ரிபெல் தலைப்பே சூப்பரா இருந்தது. சி.வி.குமார் திரைக்கதையில் மிகவும் ஞானம் கொண்டவர். அவருக்குத் துணையாக ஞானவேல் ராஜா இருக்கிறார். ஆரம்பமே மிகப்பெரும் விழாவோடு ஆரம்பிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் சிறந்த படமாக வர அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார், “நான் 24 படம் பண்ணிட்டேன். இவ்வளவு பெரிய பூஜை இந்தப் படத்துக்குத்தான். இந்தப் படத்தை ஒப்புக்கொள்ளவே, ஒரு தைரியம் வேணும். அது ஞானவேல் ராஜா சாரிடம் இருக்கிறது. இது ஓர் அரசியல் கதை. இது எப்படி அமையப்போகிறது என பயம் இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் நல்ல கூட்டணி அமைந்திருக்கிறது. கதையும் நன்றாக உள்ளது. ஒரு சிறந்த அரசியல் படமாக இந்தப் படம் இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “பேச்சிலர் படம் பார்த்தேன், மிகவும் பிடித்தது. படம் ரொம்ப பிரமாதமாக இருந்தது. ஜிவிக்கு வாழ்த்துகள். ரிபெல் கதையை நிகேஷ் சொல்லும்போதே ரொம்ப பிடித்திருந்தது. ஒரு காலேஜ் கதை. அரசியல், தமிழுணர்வு எல்லாம் கலந்திருந்தது. ஜிவி சரியாக இருப்பார் என அவரிடம் சொன்னேன் அவர் கதை கேட்டு, நான் ரசித்த இடங்களை அப்படியே அவரும் ரசித்ததாகச் சொன்னார். இப்போது ரிபெல் படத்தை ஆரம்பித்திருக்கிறோம். இரண்டு படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை. ரஞ்சித் பிரதருடன் ஆரம்பத்தில் படம் செய்துள்ளேன். இன்று அவர் பெரிய உயரத்தில் இருக்கிறார். நலன் சாருடன் அடுத்த அறிவிப்பு விரைவில் வரும். இருவரும் இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. இந்தப் படம் ஒரு சிறப்பான அரசியல் கதையைச் சொல்லும்” எனக் கூறினார்.

நடிகர் ஜிவி பிரகாஷ், “இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஞானவேல் ராஜா சார் தான் என்னை ஒரு நடிகனாக என்னை அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்தார். ஒரு நடிகனாக எனக்கு ஒரு பிசினஸை ஏற்படுத்தி நிலைநிறுத்தியவர் அவர்தான். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்வது மகிழ்ச்சி. நாங்கள் இணைந்து செய்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நிகேஷ் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. சமூகத்துக்குச் சொல்ல வேண்டிய ஒரு கதை இதில் இருக்கிறது. அதை நாங்கள் சரியாகச் சொல்வோம் என்று நம்புகிறேன்” என்றார்

தயாரிப்பாளர் தனஞ்செயன், “ஞானவேல் ராஜா சாரே ஒரு ரிபெல்தான். அவருடன் ஜிவி எனும் இன்னொரு ரிபெல் இணைந்து இந்த ரிபெல் படத்தை எடுக்கிறார்கள். இயக்குநர் நிகேஷ் அருமையான திரைக்கதையை எழுதியுள்ளார். இந்தப் படம் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். உங்கள் அரசியலை இங்கு வந்திருக்கும் ரஞ்சித் சாரிடம் கற்றுக்கொள்ளுங்கள். அரசியல் கருத்துகளைத் தெளிவாகப் பேசக்கூடியவர் அவர். பேச்சிலர் படம் பார்த்தேன் ஜிவியின் நடிப்பு அசத்தலாக இருந்தது. ஜெயில் படத்தில் இன்னும் வேறொரு கோணத்தில் நடித்திருக்கிறார். ஒரு படத்துக்குப் பெரும் அர்ப்பணிப்பான உழைப்பை தந்து, தயாரிப்பாளருக்குப் பிடித்த நடிகராக வளர்ந்து வருகிறார். இந்தப் படம் ஓர் அற்புதமான கூட்டணியுடன் உருவாகிறது” என்று கூறினார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 3 டிச 2021