மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 டிச 2021

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

ஸ்ரீராம் சர்மா

‘ஆன்டி இண்டியன்’ திரைப்படத்தை நேற்று முன்தினம் ஃபோர் ஃப்ரேமில் போட்டுக் காட்டினார்கள்!

உலக சினிமாவின் ஈடு இணையற்ற திரைப்பட இயக்குநரும் எனது ஆதர்ஸ படைப்பாளருமான ஈரான் தேசத்தின் மஜீத் மஜிதி அவர்கள் எடுத்துக்காட்டுவதைப் போல, ஒரு நல்ல திரைப்படம் என்பது தனது தகுதிகளாக இரண்டு கூறுகளை அடிப்படையாகக் கொள்கிறது எனலாம்.

ஒன்று, அதன் நோக்கம்! அடுத்து, தொழில்நுட்பம் சார்ந்த அதன் தரம்!

தமிழ் சினிமாவில், தரத்தை நிர்ணயம் செய்ய அதன் பட்ஜெட் - மார்க்கெட் - ஸ்டார் காஸ்ட் போன்ற காரணிகள் குறுக்கிட்டுவிடக் கூடும். ஆனால், படத்தின் நோக்கத்தை நிலைநிறுத்திவிட இருவரால் முடியும்.

முதலாமவர் படத்தின் இயக்குநர். அடுத்து, அதன் தயாரிப்பாளர்.

அந்த வகையில் ஆன்டி இண்டியன் திரைப்படம் அதன் நோக்கத்தில் உயர்ந்து நிற்பதைக் காண முடிந்தது!

இப்ராஹிம் - பாஷா - சரோஜா என்னும் லூர்து மேரி ஆகிய மூன்று கடலோர எளிய அப்பாவிகளையும், வாழும்போது உறுத்தி ஒதுக்காத அவர்களின் மதங்கள்…

பாஷாவின் பாடியை ஏற்றி வரும் ஆம்புலன்ஸின் பின்னால் பரபரப்பாக ஓடி வந்த அவலக் கூத்துக்கள் அனைத்தையும்… கவலையோடும் - கனத்த நையாண்டியோடும் படம் நெடுகச் சொல்லிப் போகிறார் புதுமுக இயக்குநர் இளமாறன்.

திரைப்படத்தில் மூன்று மதங்களின் பிடிவாதங்களும் தீர அலசப்படுகிறது என்றாலும், எங்குமே சார்பு நிலை எடுக்காமல், யாரையும் முகம் சுளிக்க வைக்காமல் சமன்படுத்திப் போன விதத்தில் சமூக அக்கறையும் முதிர்ச்சியும் கொண்டு மிளிர்கிறது ஆன்டி இண்டியன்.

சுருங்க சொன்னால், காலர் பட்டன் போட்ட கண்ணியத்தோடு காட்சி அளிக்கிறது ப்ளூ சட்டை!

ஏழுமலையாக ஜெயராஜ், சரோஜா என்னும் லூர்து மேரியாக - விஜயா மாமி, பள்ளி வாசல் பெரியவராக - நம்பி, பொட்டு வைத்த லோக்கல் அரசியல்வாதியாக கர்ணராஜா, கிறிஸ்துவ ஃபாதராக ஸ்னேபா போன்றவர்கள் இயல்பான நடிப்பால் தியேட்டர் ஆர்ட்டிஸ்டுகளாக ஆழம் காட்டுகிறார்கள்.

இடைவேளையிலும் - படத்தின் இறுதியிலும் வெளிப்படும் அனுபவமிக்க பசி சத்யாவின் ஓலமிழைந்த முகமும், குரலும் சமூக அமைதியை நோக்கி ஓங்கி எழுந்து எச்சரித்து அடங்குவதை உணர முடிகிறது.

பிண வேஷம் போட்டபடி அறிமுகமானாலும், பிணவறை வாசலில் திரியும் தேமல் பிடித்த நாயின் கொடூரத் தோற்றம், பிணத்துக்கு கலீமா ஓதியபின் சவரம் செய்ய உபயோகித்த கத்தியை பள்ளிவாசலின் துணை இமாம்கள் அலம்பிச் செல்லும் விதம், பாஷா வீட்டு சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் அவரது தொழில் குறித்த பிரின்ட் செய்யப்பட்ட அட்டை என ஆங்காங்கே உயிர்த்தெழுகிறார் இயக்குநர் இளமாறன்.

அலட்டாத கேமரா, உறுத்தாத எடிட்டிங், பாசாங்கில்லாத லொக்கேஷன்கள், சென்னைக்கே உண்டான சாவு டான்ஸ், மரண கானா என இன்றைய இளைஞர்களை என்கேஜ் செய்யும் வகையில் தன்னியல்பில் அழகாக நகர்கிறது ஆன்டி இண்டியன்.

சரி, இந்தப் படத்தில் குறைகளுண்டா என்றால் நிச்சயம் உண்டு.

அதற்காகவே பூதக் கண்ணாடியோடு படையெடுக்கப் போகிறவர்கள் அந்த வேலையை ஷிஃப்ட் போட்டுக் கொண்டு பார்க்கத்தான் போகிறார்கள். சிங்கிள் கேமராவில் எல்லோரையும் கலாய்த்த ப்ளூ சட்டையை நாங்களும் கலாய்ப்போம் என ஆசை தீர கிழித்து தொங்கவிடத்தான் போகிறார்கள்.

அழகான கான்செப்ட்டில் அரசியல் கலப்படம் செய்து, அஞ்சலி போஸ்டரில் ‘ஓவியர்’ இ.பாஷா என்று போடாமல் ஆர்டிஸ்ட் என்று ஆங்கிலத்தில் போட்ட தமிழ் விரோதிதான் இந்த ப்ளூ சட்டைக்காரன் என்னுமளவுக்கு இறங்கி அடித்தாலும் அடிப்பார்கள்.

மயிலை சபாவில் அன்று நடந்த சம்பவம் ஒன்று நினைவிலாடுகிறது…

அன்றைய கர்னாடகக் கச்சேரிகளின் மேல் அனல் கக்கிக் கொண்டிருந்தவர் மறைந்த இசை விமர்சக மேதை சுப்புடு. அது, பாலமுரளி கிருஷ்ணாவோ, பத்மா சுப்ரமணியமோ யாராக இருந்தாலும் விடமாட்டாராம். உழைக்க மனமில்லாத உங்களுக்கு மேடை எதற்கு என உட்லண்ட்ஸ் ரூமில் உக்கார்ந்து நாலு பத்திக்கு நாராய் கிழித்து பத்திரிகைக்கு அனுப்பி விடுவாராம்.

சுப்புடு அவர்கள் நன்றாக ஆர்மோனியம் வாசிப்பார் என்பதால் ஒருமுறை அவரது ஆர்மோனிய டெமான்ஸ்ட்ரேஷன் கச்சேரியை ஏற்பாடு செய்து அழைத்திருந்தார்கள். எல்லாரையும் கலாய்க்கும் சுப்புடு அப்படி என்னதான் வாசிக்கிறார்னு பார்த்துடுவோம் என அரங்கம் நிரம்ப, சரிபாதி அவரால் பாதிக்கப்பட்ட கூட்டம் இருந்தது.

கல்யாணி ராகத்தை முதலில் எடுத்த சுப்புடு, அதிலிருந்து மோகன கல்யாணி, அதிலிருந்து அமீர் கல்யாணி என மெல்ல மெல்ல விஸ்தாரப்படுத்திக் கொண்டிருக்க, போதிய ‘டச்’ இல்லாததால் ஆங்காங்கே அவரது விரல்கள் சிக்கிக்கொண்டே இருக்க, முன் வரிசையில் இருந்த சிலர் வேண்டுமென்றே வாயை மூடி நமுட்டு சிரிப்பு சிரித்துக் காட்ட, சட்டென்று கச்சேரியை நிறுத்திய சுப்புடு….

“என்ன ஓய் சிரிப்பு ? அப்பேர்ப்பட்ட பாலமுரளியையே கிழிக்கிற இவனுக்கு சிக்காம வாசிக்கத் தெரியலைன்னுதானே? சரி, எனக்கு ஃப்ளோ சரியா வரலைன்னு ஒப்புக்குறேன். ஆனா, பாலமுரளிக்கு குடுக்குற அதே சம்பளத்தை எனக்கும் குடுத்துட்டு, அப்புறம் சிரிங்கோ…” என்றாராம்.

சுப்புடுவுக்கு அன்று ஃப்ளோ தவறினாலும் அவர் ராகம் தவறவில்லை. போலவே, ஆன்டி இண்டியன் சினிமாவைப் பொறுத்தவரை அதன் யோக்கியமான உரையாடலும் - மானுடப் பார்வையும்தான் என்னை பெரிதும் கவர்ந்தது. அது, இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

இன்றைய தமிழ் சினிமா, வியாபாரத்தின் கோரப் பற்களில் சிக்கி உள்ளடக்கமற்று தவிப்பதைக் குறித்து, மற்ற மாநில சினிமா உலகங்கள் தங்களுக்குள் கெக்கலித்துக் கொண்டிருக்கின்றன. அதை உணர்ந்து இனியேனும் தன் தரத்தை நிரூபித்தாக வேண்டும் தமிழ் சினிமா.

இது ஆந்தாலஜியாக்கும், இது லூப்பாலஜியாக்கும் எனச் சுருக்குப்பைக்குள் ஸ்கூட்டர் ஓட்டி பிபி ஏத்தாமல், மண்ணுக்கு அந்நியமான வெளிநாட்டுப் படங்களை காப்பியடித்து வாந்தியெடுக்காமல்,

முதல் படத்தில் எப்படியாவது தப்பித்தால் போதும் என்னும் வியாபார வெறியோடு ‘கெக்கெபிக்கே’ காமெடி, இரட்டை அர்த்த ஆபாசக் கதை, சிரிப்புப் பேய் - கறுப்புக் காமெடி என்று எதன் பின்னாலும் ஓடி தப்பித்துக்கொள்ள நினைக்காமல்…

நின்று நிதானித்து மானுடம் ததும்பும் கதைக் களம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த ப்ளூ சட்டை மாறனை பாராட்டியே ஆக வேண்டும்.

பொதுவாக, முதல் பட இயக்குநருக்கு எத்தனையோ சிக்கல்கள் வரும். அத்தனையையும் கடந்து, நீர்த்துப் போய்விடாமல் கொண்ட நோக்கத்தை திரையில் கடத்துவது என்பது சவாலான விஷயம்.

படம் பார்க்க அழைத்தபோது, “சரியாக 6.30க்கு ஆரம்பித்து விடுவேன் சார்…” என்றார் மாறன். “அப்படி சரியாக ஆரம்பித்து விட்டால் நீங்கள் ஆன்ட்டி இண்டியன் சார்…” என தமாஷாக சொல்லி வைத்தேன்.

போலவே, ஏதேதோ தொழில்நுட்பக் கோளாறால் நேரம் கடந்துபோக அப்படி இப்படி அல்லாடி ஒருவழியாக 9.30 மணி போலத்தான் சென்ஸார் சர்டிஃபிகேட்டை காண்பித்து அந்த இருட்டிலும் உண்மை இண்டியனாய் ஒளிர்ந்தார் இளமாறன்.

குறித்துக்கொள்ளுங்கள். கடந்த லாக்டவுன் காலத்தில், ஓடிடியில் உலக இந்தியர்களால் அதிகம் காணப்பட்ட படங்கள் மலையாளப் படங்கள்தாம். காரணம், அதன் எளிமையும் நேர்மையும்தான்.

போலவே, தமிழ் சினிமாவும் நல்லதொரு தடத்தில் ஏறியாக வேண்டிய காலகட்டம் இது. மானுடம் சுமந்த ஆன்டி இண்டியன் அந்த இடத்தைக் கொண்டு விட்டது. தொட்டுத் தொடரட்டும்.

சென்ஸார் கெடுபிடிகளுக்குப் பின்னும் தளராமல் பொறுமையோடு போராடி, கோர்ட்டு படிகளேறி வந்துவிட்ட இயக்குநருக்கு உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் ஆதம் பாவா அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நோக்கத்தால் சிறந்து நிற்கும் ப்ளூ சட்டை மாறன், தனது அடுத்தடுத்த படைப்புகளில் காட்சி தரத்தையும் கொண்டு விடுவாரென்றால் - தமிழ் சினிமாவில் மரியாதைக்குரிய இடம் ஒன்றைக் கொண்டு விடுவார் என்பது நிச்சயம். நிறைந்த வாழ்த்துகள்!

மொத்தத்தில், திரைப்படத்தின் தலைப்பு ஆன்டி இண்டியன் என்றாலும் அதன் உள்ளடக்கம் அனைத்தும் ‘ப்ரோ இண்டியன்’ தான்.

நம்பிப் பார்க்கலாம்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வியாழன் 2 டிச 2021