மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

யார் பொறுப்பு?: ரூ.2000 திரைவிமர்சனம்!

யார் பொறுப்பு?: ரூ.2000 திரைவிமர்சனம்!

சுதந்திர இந்தியாவில் மறக்க முடியாத நாள் 2016 நவம்பர் 8 ஆம் நாள். இந்திய மக்கள் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரம் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ‘அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அறிவித்தார்

அதைத் தொடர்ந்து பலமாதங்கள் இந்திய குடிமகன்கள் அனுபவித்த சிரமங்கள், துயரங்கள், இழப்புக்கள் ஏராளம். இந்த அறிவிப்பு ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது, வழக்கம் போல் பெருமுதலாளிகளும் பெரும் பணக்கார்களும் தப்பித்துக் கொண்டார்கள்.

அக்கொடிய காலகட்டத்தை மீண்டும் நம் கண்முன் திரையில் விரிகிறது ‘ரூ.2000’ படம். புதிய ரூபாய்த்தாள்களை அறிமுகம் செய்ததுமே அவற்றில் பேனா, பென்சில் ஆகியவற்றால் எழுதினால் அவை செல்லாது எனவும் அறிவித்தார்கள். அதை மட்டுமே மூலக்கருவாக எடுத்துக்கொண்டு அதிகார வர்க்கத்துக்கெதிராகப் நடத்தப்பட்ட போராட்டத்தை திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தில் பாதிக்கப்பட்ட விவசாயியாக நடித்திருக்கும் அய்யநாதனுக்காக வழக்காடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் ஆவணப்பட இயக்குனரும் எழுத்தாளருமான

பாரதி கிருஷ்ணகுமார்.

அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் கேள்விகள் ஒவ்வோன்றும் சம்மட்டி அடி. இந்திய ஒன்றியத்தில் எவ்வளவு ஏடிஎம் மையங்கள் உள்ளன?. அவற்றைக் கையாள்வது யார்?. அவற்றில் பணம் நிரப்பப்படுவது எப்படி? ஏடிஎம் மையங்களில் வரும் அழுக்கு மற்றும் கிழிந்த தாள்களுக்கு யார் பொறுப்பு? என்பனவற்றோடு ரூபாய்தாள் என்றால் என்ன? என்பது பற்றியும் மிகத் தெளிவாக, விளக்கமாக வகுப்பறையில் பாடம் நடத்தும் நல்லாசிரியர் போல் நடித்து

‘தோழர்பாலன்’ என்கிற வேடத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

நீதிமன்றத்தின் சாட்சிக்கூண்டில் அவர்முன் அதிகாரவர்க்கத்தினர் தலைகுனிந்து நிற்பதும் அவர் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து பேசுவதுமான காட்சிகள் சிறப்பு. அவருடைய உதவியாளர் மற்றும் ஆணவக்கொலையால் மனைவியை இழந்து தவிக்கும் வேடத்தில் நடித்திருக்கும்

ருத்ரன் பராசு பொருத்தமாக நடித்திருக்கிறார்.

தமிழகத்தை உலுக்கிய உடுமலை கவுசல்யா – சங்கரை நினைவு படுத்தும் கதையை வைத்துக்கொண்டு சாதி வெறியர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள். இன்னொரு உதவியாளராக நடித்திருக்கும் ஷர்னிகா, அரசு வழக்கறிஞராகவரும் கராத்தே ’வெங்கடேஷ், நீதிபதிகளாக வரும் ஓவியா, தியாகு ஆகியோர் இயல்பாக இருக்கிறார்கள்.

இனியவன் பின்னணி இசை மூலம் காட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் லட்சுமணனுக்கு சவாலான வேலை. ஏதாவது ஒரு காட்சியைக் கத்தரித்தால் ஒரு நல்ல கருத்து விடுபட்டுப் போய்விடுமே என்கிற பொறுப்புணர்வு காரணமாக கத்தரி போடாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டார். ஒளிப்பதிவாளர் பிரிமூஸ் தாஸுக்கு படம் வசனங்களால் நிரம்பியிருப்பதால் அதிக வேலை இல்லை. எழுதி இயக்கியிருக்கும் துணிவு அபாரம். மசாலாக்களும், கதாநாயக பிம்பங்களையும் முன்னிறுத்தி படங்களை தயாரிக்கும் தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குக் கலையை கேள்வி எழுப்பும் அவையாக்கியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் ஒரு வழக்குக்கு இரண்டு வழக்குகளை நடத்தி பொருளாதாரம் மற்றும் சமுதாயப் பாடத்தை அரசியல் புரிதலுடன் எடுத்திருக்கிறார் இயக்குனர். நிஜத்தில் மரணதண்டனைக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் தியாகுவை மரணதண்டனை கொடுக்கும் நீதிபதியாக நடிக்க வைத்திருப்பது நகை முரண்.

தமிழ்சினிமாவில் தணிக்கை துறையால் 115 வெட்டுக்கள் கொடுக்கப்பட்டபடம் ரூபாய் 2000. இருந்தபோதிலும் அந்த வெட்டுக்கள் கதையோட்டத்தைப் பாதிக்கவில்லை. காட்சி ஊடகத்திற்கு உரிய சுவாரசியம் இன்றி வசனங்களில் மட்டுமே படம் நகர்வது குறை இருந்தபோதும் உரையாடல்களில் பிறமொழிக் கலப்பைப் பெருமளவில் தவிர்த்து தமிழ் படத்தில் தமிழ் உரையாடல்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார்கள்.

படத்தின திரைக்கதை மற்றும் வசனங்களுக்கான உழைப்பு பிரமிக்கவைக்கிறது. வணிக ரீதியாக படம் வெற்றிபெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திரைப்படமாக ‘ரூபாய் 2000’ வரலாற்றில் இடம்பெறும். இன்றைய சமூகத்திற்கு பாடமாகவும் எதிர்கால சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஆவணப்படமாகவும் இருக்கும்.

நடிகர்கள்: பாரதி கிருஷ்ணகுமார் ருத்ரன், அய்யா நாதன், ஷர்னிகா, கராத்தே வெங்கடேஷ், ஓவியா, தியாகு

ஒளிப்பதிவு : பிரிமூஸ்தாஸ்

இசை: இனியவன்

இயக்கம் : ருத்ரன்

தயாரிப்பு: பீனிக்ஸ் திரைப்படைப்பகம் சார்பில் பச்சியப்பன்

-இராமானுஜம்

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

வெள்ளி 26 நவ 2021