மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

சுரேஷ் காமாட்சி வி. ஹவுஸ் புராடக்க்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் டைம் லூப் கதையில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாத நிலையில் தீபாவளிக்கு படம் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். தனக்குரிய சம்பள பாக்கி கொடுத்தால் டப்பிங் பேச வருகிறேன் என சிலம்பரசன் அடம்பிடித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் அநேக தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என்பதை மின்னம்பலத்தில் அப்போதுபதிவு செய்திருந்தோம்.

மாநாடு படத்திற்கான அதிகாலை காட்சி, முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு முக்கிய நகரங்களில் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்தது. தமிழகம் முழுவதும் சிலம்பரசன் ரசிகர் மன்றம் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அலங்கார வளைவுகள் அமைத்து பேனர்கள் கட்டியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை(24.11.2021) ‛‛நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்

சிலம்பரசன் நடிப்பில் வெளியான முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது என மாநாடு படத்தின் முன்பதிவிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்ல படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சுமார் 500 திரையரங்கு உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி, மற்றும் சிலர் முயற்சியை மேற்கொண்டனர்.

அண்ணாத்த படத்திற்கு போட்டியாக மாநாடு வர வேண்டும் என்பதில் சிலம்பரசன் உறுதி காட்டியதால், அப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் மாநாடு படம் வெளியாக முட்டுக்கட்டை போடுவதாக நேற்று காலை முதல் செய்திகள் பரப்பப்பட்டது. ஆனால் உண்மை நிலவரம் வேறு ஆக இருந்தது.

படத் தயாரிப்புக்கு கடன் கொடுத்திருந்த பைனான்சியர் உக்கம் சந்துக்கு 18 கோடி ரூபாயை முழுமையாக திருப்பி செலுத்தாததன் காரணமாகவே மாநாடு வெளியாவது சிக்கலுக்குள்ளானது.

நிதி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர சினிமா பிரபலங்கள் முயற்சியை மேற்கொண்டனர்.

நேற்று இரவு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று காலை 7 மணிக்கு சுமுகமான முடிவுக்கு வந்தது.

இப்படத்தின் தயாரிப்புக்காக வாங்கிய கடன் பணத்தை சுரேஷ் காமாட்சி திருப்பித் தர முடியாத சூழல் ஏற்பட்டதற்கு காரணம், தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்ற சுப்பையா பேசிய படி 12.40 கோடி ரூபாய் முழுத் தொகையில் இரண்டு கோடி ரூபாய் குறைவாக கொடுத்திருக்கிறார். படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய வெளியீட்டு உரிமை ஆகியன எதிர்பார்த்த வணிக மதிப்பிற்கு வியாபாரம் முடிவடையவில்லை. சுரேஷ் காமாட்சி படம் வெளியாகாது என்று அறிவித்தவுடன், அதுவரை ஒதுங்கியிருந்த திரையுலக முக்கியஸ்தர்கள் உள்ளே வந்து பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதன் விளைவாக, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள விலை நிர்ணயம் செய்து உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இணைய வெளியீட்டு உரிமையைப் பெறுவதாக ஒப்புக்கொண்ட சோனிலிவ் நிறுவனத்தோடு முறையாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் அந்நிறுவனம் ஒப்புக்கொண்ட தொகையை கொடுக்க மதுரை அன்புசெழியன் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்.

அதன்பின்னும் சில கோடிகள் தேவைப்பட்டதாம். அதற்கு டி.ராஜேந்தரும் ஐசரி கணேசும் பொறுப்பேற்றுக் கொண்டதால் எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு காணப்பட்டுள்ளது.இதனால் பைனான்சியர் படத்துக்கான தடையை விலக்கிக் கொண்டார். படம் இன்று காலை வெளியானது

மாநாடு படக்குழு பைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரங்களில் பட வெளியீட்டு பிரச்சினை சம்பந்தமாக விசாரித்தபோது,

”இந்தப் படத்தில் நடிக்க சிலம்பரசனுக்கு எட்டு கோடி ரூபாய், இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு ஐந்து கோடி சம்பளம் மொத்த பட்ஜெட் 30 கோடி என திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட படம். கொரோனா பொது முடக்கம் இந்த திட்டத்தை குறிப்பிட்ட நாட்களில் முடிக்க முடியாமல் முட்டுக்கட்டை போட்டது. இதன் காரணமாக சிலம்பரசன் 1.50 கோடி ரூபாயும் வெங்கட்பிரபு 2 கோடி ரூபாயை தங்களது சம்பளத்திலிருந்து ஏற்கனவே குறைத்துக்கொண்டனர்.

படத்தின் தயாரிப்புக்காக பதினெட்டு கோடி ரூபாய் கடன்கொடுத்தவர் உக்கம்சந்த். அத்தொகை வட்டியோடு முப்பது கோடி ரூபாய் ஆகிவிட்டது. நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் அம்மா கிரியேஷன் சிவா உக்கம் சந்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 கோடி ரூபாய் வட்டி நான்கு கோடியாக குறைக்கப்பட்டது கடன் கொடுத்த பைனான்சியருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய கடனுக்கு தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் தரப்பு நிர்ணயித்து அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டு நெகட்டிவ் கிளியரன்ஸ் கேட்டனர் பைனான்சியர் தரப்பில் பணமாக மட்டுமே வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் தமிழக உரிமையை கோவை சுப்பையா பெயரில் வாங்கிய தயாரிப்பாளர் தமிழ்நாடு முழுவதும் விநியோக அடிப்படையில் படத்தை வியாபாரம் செய்தபோது அவர் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை மாநாடுபட வியாபாரத்தில் கழிக்கப்பட்டதன் காரணமாக தமிழக உரிமை ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட அடிப்படையில் தொகையை கொடுக்க முடியவில்லை. அவரது பழைய கடனை அடைக்க மாநாடு படத்தை பயன்படுத்திக் கொண்டார் இதனை அறிந்த T.ராஜேந்தர், ஜே.எஸ்.கே இருவரும் கடவுள் பெயரை வைத்துக்கொண்டு ஏண்டா இப்படி களவாணித்தனம் செய்கிறாய் என திட்டி நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அடிக்க பாய்ந்திருக்கிறார்கள்.

மாநாடு படம் வெளியாவது சிலம்பரசன் கௌரவப் பிரச்சினை என்பதால் அவரது அப்பா, அம்மா இருவரும் அதிகபட்ச ரிஸ்க் எடுத்திருக்கின்றனர் என்றனர்.

எதிர்வரும் காலங்களில் படம் தயாரிக்க கடன் கொடுக்க பைனான்சியர்கள் தயக்கம் காட்டும் சூழலை மாநாடு பட பஞ்சாயத்து ஏற்படுத்தியிருக்கிறது.தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் செய்கிற தவறு, தயாரிப்பில் ஏற்படும் கூடுதல் செலவு இவற்றின் காரணமாக ஏற்படும் பற்றாக்குறைக்காக கடன் கொடுத்த பைனான்சியர்கள் வட்டியை தள்ளுபடி செய்யவும், சில நேரங்களில் அசலில் தள்ளுபடி கேட்பது தொடர்ந்து நடந்துவருகிறது.இது வியாபார தர்மம் இல்லை அதற்கு கடன் கொடுக்காமல் இருந்து விட்டு போகிறோம் என்கின்றனர் பைனான்சியர்கள் வட்டாரத்தில்.

பாத்திரமறிந்து பிச்சை போடு என்பது பழமொழி அது போன்று படத்தின் தமிழக உரிமையை ஒருவருக்கு வியாபாரம் செய்கிறபோது அவரது கடந்தகால வியாபார நாணயத்தை விசாரித்து முடிவு செய்யவேண்டும். அதில் தயாரிப்பாளர்களிடம் தடுமாற்றம் இருக்கிறது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில். எது எப்படியோ மாநாடு படம் ஊர் கூடி தேர் இழுத்த கதையாக சினிமா நாட்டாமைகள் முயற்சியில் இன்று காலை வெளியானதன் மூலம் 450 திரையரங்குகளின் வணிகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

-இராமானுஜம்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

வியாழன் 25 நவ 2021