மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 27 அக் 2021

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது ஐபிஎல். போட்டியில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் பத்து அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.

புதிய அணிகளை சேர்ப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்த நிலையில் இதற்கான ஏலம் துபாயில் நடைபெற்றது. அதன்படி, அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாகக் கொண்ட இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்காவின் நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு வாங்க, அகமதாபாத் அணியை 5,166 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம்.

RPSG Group

லக்னோ அணியை வாங்கியுள்ள சஞ்சீவ் கோயங்காவின் நிறுவனம் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. ஆர்.பி - சஞ்சீவ் கோயங்கா குரூப். RPSG Group என்றும் இது அழைக்கப்படுகிறது. சுமார் 45,000 பேர் பணிபுரியும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 47,000 கோடி ரூபாய். நிலக்கரி சுரங்கங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் பலவற்றை இந்த நிறுவனம் நடத்திவருகிறது. கொல்கத்தா நகரின் மின் சப்ளையை இந்த நிறுவனம்தான் கவனித்து வருகிறது.

இதுதவிர சில ஐடி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. கேரளாவில் ஆறு டீ எஸ்டேட்கள், ஐந்து ரப்பர் எஸ்டேட்கள் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ளன. பல நகரங்களில் செயல்படும் ஸ்பென்ஸர் சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமானவைதான்.

இந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்காவுக்கு விளையாட்டுத் துறையில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் உண்டு. இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான கொல்கத்தாவின் மோகன் பகான் கிளப்பின் பெரும்பாலான பங்குகளை கடந்த ஆண்டு சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். இந்தியாவின் முக்கியமான டேபிள் டென்னிஸ் போட்டியான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீகில் போட்டியிடும் ‘ஆர்பிஎஸ்ஜி மேவரிக்ஸ் கொல்கத்தா அணி’ இவருடையதுதான்.

CVC Capital Partners

அகமதாபாத் அணியை வாங்கியிருக்கும் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் குறித்து ஏற்கெனவே பல சர்ச்சைகள் உண்டு. இது முழுக்க முழுக்க ஒரு முதலீட்டு நிறுவனம். முதலீட்டாளர்களின் பணத்தை வாங்கி, லாபகரமான தொழில்களில் முதலீடு செய்து அவர்களுக்கு லாபம் பெற்றுத் தருவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். ஐபிஎல் அணியை சிறந்த லாபம் தரும் ஒரு நிறுவனமாகப் பார்த்தே சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் ஏலத்தில் எடுத்திருக்கிறது.

ஐரோப்பாவில் இருக்கும் லக்ஸம்பர்க் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்துக்கு 40 ஆண்டுக் கால வரலாறு உண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற சிட்டி பேங்க் நிறுவனம், தனது ஐரோப்பிய கிளையாக இதை ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் இது சிட்டி பேங்க் நிறுவனத்திடமிருந்து பிரிந்து தனியாக இயங்க ஆரம்பித்தது. சீக்கிரமே, ‘ஐரோப்பாவின் நம்பர் ஒன் முதலீட்டு நிறுவனம்' என்று பெயர் வாங்கியது.

உலகம் முழுக்க 25 இடங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் அலுவலகம் மும்பையில் இருக்கிறது. அதனால்தான் மும்பைக்கு அருகே இருக்கும் அகமதாபாத் அணியை வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஐந்து லட்சத்து 63,000 கோடி ரூபாய்.

ஐடி செக்யூரிட்டி நிறுவனம், விலையுயர்ந்த சுவிஸ் வாட்ச்களைத் தயாரிக்கும் நிறுவனம், ஜவுளி நிறுவனங்கள், மருந்து நிறுவனம் என்று பலவற்றில் முதலீடு செய்திருந்தாலும், லாட்டரி, சூதாட்டம், விளையாட்டு அமைப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். மலேசியாவின் மேக்னம் கார்ப்பரேஷன் லாட்டரி நிறுவனம் இவர்களுடையதுதான்.

சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் இதற்கு முன் விளையாட்டில் செய்த மிகப்பெரிய முதலீடு, புகழ்பெற்ற கார் ரேஸ்களை நடத்தும் ஃபார்முலா ஒன் நிறுவனத்தை வாங்கியது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஃபார்முலா ஒன் நிறுவனம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. விளையாட்டில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் எடுக்க முயற்சி செய்வதாக இவர்கள்மீது அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 15, 400 கோடி ரூபாய் முதலீடு செய்த சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ், அதை வைத்து ஃபார்முலா ஒன் நிறுவனத்திலிருந்து 36, 200 கோடி ரூபாய் வருமானம் பார்த்தனர்.

ரேஸ்களை ஒழுங்காக நடத்துவது, அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது போன்றவற்றைச் செய்யாமல், பணத்தில் மட்டுமே குறியாக இருந்ததாக ரேஸில் பங்கேற்கும் அணிகள் புகார் செய்தன. 2017ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் நிறுவனத்தை சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் விற்றுவிட்டது. இப்போது ஐபிஎல் அணியை வாங்கி தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.

-ராஜ்

.

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

புதன் 27 அக் 2021