மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 அக் 2021

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் பாடல் காட்சிகள், திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அந்தப் படத்தை வியாபாரம் செய்வதற்கும் மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கும் அடிப்படையாக விளங்கியது. பாடல்கள் இசைத்தட்டு, கேசட், சிடி என அந்தந்த காலங்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடல்கள் வெளியீட்டு வடிவம் மாற்றம் கண்டது. அவற்றின் விற்பனை எண்ணிக்கைக்கு ஏற்ப படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்கும். பட வியாபாரம் சூடுபிடிக்கும்..

வலைதளங்களின் அசுர வளர்ச்சிக்கு பின்பு யூடியூப் பாடலுக்குக் கிடைக்கும் பார்வைகளைப் பொறுத்தே அப்பாடலின் வரவேற்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கூடுதலாக, எஃப்எம் ரேடியோக்களில் அந்தப் பாடல் எத்தனை முறை ஒலி பரப்பப்படுகிறது என்பதும் கவனிக்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றுக்கு முதன்முறையாக இமான் இசையமைத்துள்ள 'அண்ணாத்த' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தாமல் வாரத்துக்கு ஒரு பாடல் என வெளியிடப்பட்டு வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடலாக எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரஜினிகாந்துக்காகக் கடைசியாகப் பாடிய 'அண்ணாத்த...அண்ணாத்த...' என்ற பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள்ளாக இந்தப் பாடலை 91 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அதற்கடுத்து பத்து நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள டூயட் பாடலான 'சாரல்..சாரல் காற்றே...' என்ற பாடல் வெளியானது. மெலடி பாடலான இப்பாடலை 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு 'மருதாணி...' என்ற பாடல் வெளியானது. ரஜினிகாந்த் தங்கையான கீர்த்தி சுரேஷுக்கு விசேஷம் நடக்கும்போது இடம்பெறும் பாடல் குஷ்பு, மீனாவும் இப்பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ளனர். மூன்று நாட்களில் இப்பாடலை 33 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

விஜய், அஜித்குமார் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் என்றால் இந்நேரம் 1 கோடி பார்வையாளர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் படத்தின் பாடல் காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் விரும்பபடவில்லையா அல்லது தலைமுறை இடைவெளி காரணமாக அவரது நிரந்தர ரசிகர்கள் மட்டும் அவரது பாடல் காட்சிகளை பார்க்கின்றனரா எனக் கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் வசூல் கணக்குக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கும் தொடர்புகள் நியாயமாக பொருந்திப் போவது இல்லை. ரஜினிகாந்த் படங்களின் வசூல் முதல் நான்கு நாட்கள் அதிகமாக இருக்கும், பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணம் டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படும்.

அதுவே தனுஷ், சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வசூல் குறைவாக இருக்கும். ஏனென்றால் டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யாததே காரணம். குறைவான எண்ணிக்கை பார்வையாளர்கள் மூலம் அதிகமான வருவாய் திரட்டும் நடிகராக ரஜினிகாந்த் தொடர்கிறார் என்கின்றனர் சினிமா வியாபாரிகள்.

இராமானுஜம்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

வெள்ளி 22 அக் 2021