மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 அக் 2021

ஐபிஎல் பைனல்: டெல்லியை வீழ்த்தி சென்னையுடன் மோதும் கொல்கத்தா!

ஐபிஎல் பைனல்: டெல்லியை வீழ்த்தி சென்னையுடன் மோதும் கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்டோபர் 13) இரவு நடந்த விறுவிறுப்பான இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டெல்லி அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி, நாளை (அக்டோபர் 15) நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதுகிறது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளேஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை வெளியேற்றியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் ஷார்ஜாவில் நேற்று (அக்டோபர் 13) மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடக்கிய டெல்லி அணி, கொல்கத்தா அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன்களைக் குவிக்க தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. அரை சதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களால் இவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.

அடுத்து ஷுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 123 ரன்னாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணிக்கு 4 ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது.

ஷுப்மான் கில் 46 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரை அன்ரிச் நோர்ஜோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் . இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

அஷ்வின் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபாதி ஒரு ரன் அடித்தார். இரண்டாவது பந்தில் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். நான்காவது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தை திரிபாதி சிக்சருக்கு விரட்டினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை (அக்டோபர் 15) நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதுகிறது.

-ராஜ்

.

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

வியாழன் 14 அக் 2021