பிரகாஷ் ராஜ் ராஜினாமாவை ஏற்காத விஷ்ணு மஞ்சு

entertainment

நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்குத் திரைக்கலைஞர்கள் சங்கத்திலிருந்து விலகிய முடிவைத் தான் ஏற்கவில்லை என்று கூறியிருக்கும் புதிய தலைவரான விஷ்ணு மஞ்சு, பிரகாஷ் ராஜுடனான தனது குறுஞ்செய்தி உரையாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான அணியும், நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.

தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சுவும், பிரகாஷ் ராஜும் போட்டியிட்டனர். இதில் பிரகாஷ் ராஜ் தோல்வியைத் தழுவினார். பிரகாஷ் ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற மொழி, இன பிரச்சாரமே பிரகாஷ் ராஜின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே தன்னை ஒரு விருந்தினராகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி சங்கத்திலிருந்து விலகப் போவதாகக் கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இதைத் தொடர்ந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர் விஷ்ணு மஞ்சுவுக்குத் தனது ராஜினாமா குறித்த குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

அவரது செய்தியையும், அதற்குத் தான் அளித்த பதிலையும் விஷ்ணு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அன்பார்ந்த விஷ்ணு, உங்கள் அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துகள். சங்கத்தை வழிநடத்தத் தேவையான அத்தனை சக்தியும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

சங்கத்திலிருந்து ராஜினாமா செய்ய நான் முடிவெடுத்திருக்கிறேன். தயவுசெய்து எனது முடிவை ஏற்றுக்கொள்ளவும்.

உறுப்பினராக இல்லாமலும் உங்களுக்குத் தேவையென்றால் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பேன். நன்றி என்று பிரகாஷ்ராஜ் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதற்கு விஷ்ணு, நன்றி உங்கள் முடிவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் என்னைவிட மூத்தவர். வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அந்த இரண்டையும் நாம் ஒன்றாகவே பாவிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் குடும்பத்தில் ஒருவர் நீங்கள். எனக்கு உங்கள் யோசனைகள் தேவை. நாம் இணைந்து பணியாற்றுவோம். நீங்கள் உடனே இதற்கு பதில் சொல்ல வேண்டாம். கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். நாம் பேசுவோம். எனக்கு உங்களைப் பிடிக்கும் மாமா. தயவு செய்து அவசரப்பட வேண்டாம் என்று பதிலளித்துள்ளார்.

**இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *