மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 54ஆவது லீக் ஆட்டம் சார்ஜாவில் நேற்று (அக்டோபர் 7) இரவு நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். நல்ல தொடக்கத்தைத் தந்த இந்த ஜோடி, பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, கொல்கத்தா பேட்டிங்கில் படிப்படியாக அதிரடி வெளிப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா வந்த வேகத்தில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து 5 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, சுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் ரன் ரேட்டை உயர்த்தினர். சுப்மன் கில் 40ஆவது பந்தில் அரைசதத்தை எட்டியநிலையில், 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் திரிபாதியும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 14 ரன்களும், கேப்டன் மார்கன் 13 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ராகுல் திவாட்டியா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜெய்ஸ்வால் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் அடுத்து களமிறங்கிய அனுஜ் ராவத் (0) ரன் ஏதும் எடுக்காமலும், பிலிப்ஸ் 8 ரன்னிலும், ஷிவம் துபே 18 ரன்களும், கிரிஸ் மோரிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஜெயதேவ் உனத்கட் 6 ரன்களும், சேத்தன் சகாரியா 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவாட்டியா 44 (36) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 16.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷிவம் மாவி நான்கு விக்கெட்டுகளும், பர்குசன் மூன்று விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இன்று (அக்டோபர் 8) இரவு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒன்றில் மும்பை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. மற்றொன்றில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. இரண்டு ஆட்டங்களும் 7.30 மணிக்கு ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வெள்ளி 8 அக் 2021