மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி!

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 52ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 6) இரவு நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதை அடுத்து ஹைதராபாத் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் ஷர்மா 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் ஜேசன் ராய் ஜோடி சேர்ந்தார். சற்று நிதானமாக நிலைத்து நின்று ஆடிய இருவரும், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர்.

ஆனால், 12ஆவது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் 31 ரன்களில் (4 பவுண்டரிகள்) போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த பிரியம் கர்க் 15 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜேசன் ராய் 44 ரன்களில் 15ஆவது ஓவரில் டேனியல் கிறிஸ்டியன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் ஹர்ஷத் படேல் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர, டேனியல் கிறிஸ்டியன் இரண்டு விக்கெட்டுகளும், சாஹல் மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் கிரிஸ்டனும் ஒரு ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தேவ்தத் பட்டிக்கலுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்துவந்த நிலையில், மேக்ஸ்வெல் 40 (25) ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பட்டிக்கல் 41 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷாபாஸ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடிவில் கார்டன் 2 ரன்களும், டி வில்லியர்ஸ் 19 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக பெங்களூரு அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் மற்றும் மாலில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் திருவிழாவில் இன்று (அக்டோபர் 7) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துபாயில் நடக்கும் 53ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸுடன் மோதுகிறது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்றை அடைந்துவிட்ட சென்னை அணிக்கு (9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி) இதுவே கடைசி லீக் போட்டியாகும். புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் ஓரளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே போதும். அடுத்த சுற்றை எட்டி விடலாம். ஏனெனில் இதே வாய்ப்பில் நீடிக்கும் மும்பை இந்தியன்ஸை விட கொல்கத்தாவின் ரன் ரேட் திடகாத்திரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 7 அக் 2021