மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

செப்டம்பர் மாத படங்கள்: ஓர் முழுப் பார்வை!

செப்டம்பர் மாத படங்கள்: ஓர் முழுப் பார்வை!

கொரோனா தாக்கம் தமிழ் சினிமாவை கடந்த 18 மாதங்களாக முடக்கிவிட்டது. கடந்த வருடத்தில் முதல் அலை தாக்கத்திற்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. அதன்பிறகு வெளிவந்த படங்களில் விஜய் நடித்த மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் பார்க்க மட்டுமே மக்கள் வந்தனர். மாஸ்டர் மட்டும் பெரும் வசூலைக் குவித்தது.

அதற்கடுத்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் தாக்கிய இரண்டாவது அலைக்கு முன்பாக தனுஷ் நடித்த 'கர்ணன்', கார்த்தி நடித்த 'சுல்தான்' ஆகிய படங்கள் ஓரளவிற்கு வசூலை தந்தது.

பின்னர், ஏப்ரல் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இருந்தாலும் செப்டம்பர் 3ம் தேதியிலிருந்துதான் புதிய தமிழ்ப் படங்களை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்களால் முடிந்தது.

செப்டம்பர் மாதத்தில் தியேட்டர்களில் 12 படங்களும், ஓடிடி தளங்களில் 6 படங்களும் வெளியாகின.

செப்டம்பர் 3ம் தேதியன்று 'தேவதாஸ் பிரதர்ஸ்' படம் வெளிவந்தது. இப்படி ஒரு படம் வெளிவந்ததா என்று கூட தெரியாத அளவிற்கு இந்தப் படம் வந்தவேகத்தில் தியேட்டரைவிட்டு வெளியேறியது

செப்டம்பர் 9ஆம் தேதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த 'லாபம்' படம் வெளிவந்தது. இயக்குநரின் பார்வையில் ஒழுங்குபடுத்தப்படாமல் முழுமை பெறாத குறைபிரசவ குழந்தை போல பல குறைகளுடன் இந்தப் படம் வெளிவந்ததால் எந்த ஒரு தாக்கத்தையும் லாபம் ஏற்படுத்தவில்லை.

செப்டம்பர் 10ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்று சொல்லப்பட்ட 'தலைவி' படம் வெளிவந்தது. கற்பனையான பல காட்சிகள் படத்தில் இருந்ததாக விமர்சனம் எழுந்தது. பயோபிக் படம் என்றால் இப்படியா இருக்க வேண்டும் என்று ரசிகர்களே கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட இந்தப் படத்தை விரும்பி பார்க்க முடியாத மொக்கை படமாக இருந்தது என்றனர் விமர்சகர்கள்.

செப்டம்பர் 17ம் தேதி விஜய் ஆண்டனி நடித்த 'கோடியில் ஒருவன்', ஹர்பஜன் சிங், அர்ஜுன் நடித்த 'பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த சில படங்கள் வெற்றிபெறவில்லை.

‘கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றி விஜய் ஆண்டனிக்குத் தற்போது தேவையான ஒன்றாக இருந்தது. மோசமான படமாக இல்லாத காரணத்தால் வேறு படங்கள் எதுவும் போட்டிக்கு இல்லாததாலும் இந்தப் படத்திற்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாகவே இருந்தது. தமிழ்நாட்டில் 6 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில்.

நடிக்கத் தெரியாக ஹர்பஜன்சிங் நடித்த படம் பிரண்ட்ஷிப். அவர் நடித்தால் தமிழகத்தில் படம் வசூலை குவித்துவிடும் என நம்பியவர்கள் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டனர் ரசிகர்கள். பல இடங்களில் முதல்நாள் நான்கு காட்சிக்கும் பார்வையாளர்கள் வராததால், முதல் நாளே தியேட்டரில் இருந்து படம் தூக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

செப்டம்பர் 24ம் தேதி 'சின்னஞ்சிறு கிளியே, சூ மந்திரக்காளி, சிண்ட்ரெல்லா, பேய் மாமா, பிறர் தர வாரா, வீராபுரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு இத்தனை படங்கள் ஒரே வாரத்தில் வந்தது ஆச்சரியம்தான். ஆனாலும், இந்தப் படங்களில் சில ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தைப் பெற்றாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை.

செப்டம்பர் 30ம் தேதி ஹிப்ஹாப் தமிழாவின் இயக்கம், இசை, நடிப்பில் உருவான 'சிவகுமாரின் சபதம்' படம் வெளியானது. காஞ்சிபுரம் நெசவாளர்களின் பிரச்சினையைப் பற்றி சொல்லி உள்ளோம் என்றார்கள்.

ஹிப் ஆப் தமிழா ஏற்கனவே நடித்த மூன்று படங்களும் வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களாகும். அதனால் நாம் என்ன எடுத்தாலும் நமது ரசிகன் பார்ப்பான், ரசிப்பான் என்கிற மமதையில் ஆதி இயக்கிய படம் சிவகுமாரின் சபதம் படத்தை வந்த வேகத்தில் தியேட்டரில் இருந்து திருப்பி அனுப்பினார்கள் ரசிகர்கள்.

50 சதவீத இருக்கைகளில்தான் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. அந்த 50 சதவீத இருக்கைகள் கூட ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் ஒரு சில படங்களுக்கு நிறைந்தன. மற்ற படங்களுக்கு கூட்டம் வராததால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தது.

தியேட்டர்கள் நிலைமை இப்படியிருக்க ஓடிடியில் வெளியான 6 படங்களின் நிலவரம் எப்படி இருந்தது ?

ஓடிடி வெளியீடுகள் “ஆல்பா அடிமை, டிக்கிலோனா, அனபெல் சேதுபதி, நடுவன், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்,” ஆகிய படங்கள் ஓடிடி தளங்களிலும், 'துக்ளக் தர்பார்' படம் நேரடியாக டிவியிலும் வெளியானது.

விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக டிவியில் வெளியானது. அதற்கடுத்த வாரத்தில் அவர் நடித்த மற்றொரு படமான 'அனபெல் சேதுபதி' ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே கடுமையாக விமர்சனத்திற்குள்ளானது

சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' படத்தில் இடம் பெற்ற ரீமிக்ஸ் பாடலான 'பேரு வச்சாலும்...' பாடல் இந்தப் படத்தைப் பற்றிக் கொஞ்சம் பேச வைத்தது. படத்தில் இடம் பெற்ற சில நகைச்சுவைக் காட்சிகள் பிறகு மீம்ஸ்களாக வலம் வந்ததால் படம் ஓடிடியில் வெளியானது ரசிகர்களுக்குத் தெரிந்தது.

பரத் நடித்த 'நடுவன்' படம் தொலைக்காட்சி தொடர்களை காட்டிலும் மோசமாக இருந்தது. சூர்யா தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் தொழில்முறை விமர்சகர்களால் வானளாவ புகழப்பட்டாலும் ஓடிடி தளத்தில் வெற்றிகரமான படமாக தன்னை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஆல்பா அடிமை' படம் எதில் வந்தது என்று தேடிப் பார்க்க வேண்டியதாக இருந்தது

செப்டம்பர் 2021 வெளியான படங்கள்

செப்டம்பர் 3 : தேவதாஸ் பிரதர்ஸ்

செப்டம்பர் 9 : லாபம்

செப்டம்பர் 10 : தலைவி

செப்டம்பர் 17 : 1.கோடியில் ஒருவன், 2.பிரண்ட்ஷிப்

செப்டம்பர் 24 : சின்னஞ்சிறு கிளியே, சூ மந்திரக்காளி, சிண்ட்ரெல்லா, பேய் மாமா, பிறர் தர வாரா, வீராபுரம்

செப்டம்பர் 30 : சிவகுமாரின் சபதம்

ஓடிடி வெளியீடுகள்

செப்டம்பர் 3 : ஆல்பா அடிமை

செப்டம்பர் 10 :துக்ளக் தர்பார் (டிவி)

செப்டம்பர் 17 : அனபெல் சேதுபதி

செப்டம்பர் 24 : இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

தமிழகத்தில் லாபம், தலைவி, சிவகுமாரின் சபதம், ஆகிய படங்கள் வணிகரீதியாக, வசூல் அடிப்படையில் தோல்வியை தழுவிய படங்கள். இந்த படங்களின் மொத்த பட்ஜெட் தொகை தொலைக்காட்சி உரிமை, ஓடிடி வெளியீட்டு உரிமை விற்பனை மூலம் கிடைத்திருக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

புதன் 6 அக் 2021