ஐபிஎல்: கிங்ஸை வீழ்த்திய கேப்பிடல்ஸ்!

entertainment

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய (அக்டோபர் 4) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (அக்டோபர் 4) இரவு நடந்த 50ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பாண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களிலே விக்கெட்டுகளைப் பறி கொடுத்தனர். இதை அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் நிலைத்து ஆடினர். இந்த ஜோடியில் அம்பத்தி ராயுடு மிக சிறப்பாக விளையாடி தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். இறுதி ஓவரில் டோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 136 ரன்கள் எடுத்தது. டெல்லி அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை அணியில் அம்பத்தி ராயுடு 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உத்தப்பா 19 ரன்களும், டோனி 18 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் அக்சர் படேல் இரண்டு விக்கெட்டுகளும், அவேஷ் கான், ஆண்டிரிச், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (18) மற்றும் ஷிகர் தவான் (39) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதேபோன்று, ஸ்ரேயாஸ் (2), ரிஷாப் பண்ட் (15), ரிபல் (18), ரவிச்சந்திரன் அஷ்வின் (2) மற்றும் ஷிம்ரன் (28) ரன்களில் வெளியேறினர். ரபடா (4), அக்சர் (5) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 19.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு டெல்லி அணி 139 ரன்கள் எடுத்தது.

இதனால் டெல்லி அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் டெல்லி அணிக்கு இது 100ஆவது வெற்றியாகும்.

இன்று (அக்டோபர் 5) நடைபெறும் முக்கியமான 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா என்பதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *