மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

எஸ்பிபியின் கடைசி பாடல்: ரஜினி உருக்கம்!

எஸ்பிபியின் கடைசி பாடல்: ரஜினி உருக்கம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும் ஒரு மாதம் தாமதமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு வாரமாக தகவல் பரவி வந்தது.

ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வரும் என்பதை பட நிறுவனம் இருமுறை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், ரிலீஸுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக் குழுவினர் தொடங்கவில்லை என்றும் கூறப்பட்டது

சில மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கொரோனாவால் தியேட்டர்களை திறக்காத நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானால் வசூலில் பாதிப்பை உண்டாக்கும் என்றும் அண்ணாத்த ரிலீஸை பொங்கல் பண்டிகைக்குத் தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர் என்றும் தகவல்கள் பரவின.

பொங்கலுக்கு கொரோனா குறைந்து தமிழக தியேட்டர்களில் 100 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் சிங்கிளான அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலை நேற்று மாலை வெளியிட்டனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை டைரக்டர் சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மேலும், படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

முன்னதாக படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

டி.இமான் இசையில் கவிஞர் விவேகா எழுதியுள்ள பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாத்த அண்ணாத்த எனும் இந்தப் பாடல் தொடக்கத்தில் எஸ்பிபியைப் பெருமைப்படுத்தும் விதமாக 'இசை மேதை எஸ்.பி.பி ஐயா அவர்களுக்கு எங்கள் இசை வணக்கங்கள்' என தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

ஒரு காலகட்டத்தில் நடிகர் ரஜினியின் மாஸ் ஹிட்டான எல்லா பாடல்களையும் எஸ்பிபியே பாடியுள்ளார். 'அதாண்டா இதாண்டா', 'நான் ஆட்டோக்காரன் ஆட்டோகாரன்', 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற பாடல்களெல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் பல ஆண்டுகள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவை.

இந்த டிரெண்ட் 'பேட்டை' படத்திலும், 'தர்பார்' படத்திலும்கூட தொடர்ந்தது. ஆனால், இது கபாலி படத்தில் மாறியது. மீண்டும் இயக்குநர் சிவா அந்த டிரெண்டை கொண்டுவந்தார். ஆனால் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பாடகர் எஸ்பிபி காலமானார்.

நேற்று வெளியான அண்ணாத்த பாடல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி, தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

-அம்பலவாணன்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

செவ்வாய் 5 அக் 2021