மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

ருத்ர தாண்டவம் வசூல் ரிப்போர்ட்!

ருத்ர தாண்டவம் வசூல் ரிப்போர்ட்!

தமிழ் சினிமாவில் வெளியான புராண படங்களில் புகழ்பெற்றது சரஸ்வதி சபதம். முப்பெரும் தேவியர்களுக்குள் யார் சிறந்தவர் என்கிற போட்டியில் வாய்பேச முடியாதவன் மிகச்சிறந்த புலவனாகவும், பிச்சைக்காரி நாட்டின் அரசியாகவும், பிறவியிலேயே கோழையானவன் வீராதிவீரனாகவும், தெய்வசக்திமிக்க தேவியர்களால் மாற்றப்படுவார்கள்.

அது போன்றதுதான் திரெளபதி, ருத்ர தாண்டவம் வெற்றிகள். புராணத்தில் தேவியர்கள் தங்கள் தெய்வசக்தியால் செய்ததை சினிமாவில் இயக்குநர் மோகன்ஜியும், தயாரிப்பாளர் 7G சிவாவும் தங்களது புத்திசாலிதனத்தால் சாதித்து காட்டியிருக்கின்றனர்.

நடிகர் என்கிற பிம்பத்திற்கு எப்போதும் இவர் செட்டாக மாட்டார் என கோடம்பாக்க இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டவர் ரிச்சர்ட். பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் இணை நடிகராக நடித்தவர். திரெளபதி படத்தில் கதையின் நாயகன் ருத்ர தாண்டவத்தில் காவல் ஆய்வாளர் வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் .

இவருடன் படம் முழுக்க தம்பிராமைய்யா, குறிப்பிட்ட காட்சிகளில் மட்டும் இயக்குநர் கௌதம்மேனன், நடிகர் ராதாரவி நடித்திருக்கிறார்கள். இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு பிரம்மாண்ட படமோ, வியாபாரம் செய்ய கூடிய படமாகவோ தயாரிக்க முடியாது என்பதை அறிந்தவரான மோகன்ஜி, படம் பரபரப்பாக பேசப்பட்டால் படம் கல்லாகட்டும் என்பதை திரெளபதி பட வெற்றியின் மூலம் அனுபவ ரீதியாக அறிந்தவர். கதையை புறந்தள்ளி கதாநாயக பிம்பங்களுக்காக பிரம்மாண்ட செலவு செய்து படங்களை தயாரிப்பது தமிழ் சினிமா ஸ்டைல்.

சமகால அரசியலின் மீட்டருக்கு ஏற்ப திரைக்கதை இருக்க வேண்டும். பொதுவெளியில் அக்கதை விவாதத்துக்குரியதாக வேண்டும் அப்போது குறைந்தபட்ச வெற்றி உறுதியாகிவிடும்.

தயாரிப்பதை காட்டிலும் அதனை திரையரங்குகளில் திரையிடுவது இங்கு முக்கியம். அதை காட்டிலும் படம் பற்றிய பரபரப்பு சற்றும் குறையாமல் தொடர செய்ய வேண்டும். அதில் ஆலகால ஆழம் பார்த்த சேலம் திரைப்பட விநியோகஸ்தர் 7G சிவா தயாரிப்பில் மோகன்ஜிஇயக்கிய படம்தான் " ருத்ர தாண்டவம்".

சாதாரண படமாக பார்க்கப்பட்ட திரெளபதி தமிழகத்தில் 16 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்ய காரணமாக இருந்தது. மேற்கண்ட கூட்டணி அதே பார்முலாவை கையாண்டு "ருத்ர தாண்டவம்" தயாரானது.

இப்படம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் கூறிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா இந்துக்கள் அனைவரும் தியேட்டரில் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என பதில்கூற அரசியல்வாதிகளின் பார்வை ருத்ரதாண்டவம் படத்தின் மீது கவனத்தை திருப்ப காரணமானது. பாஜக, பாமக, மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ருத்ர தாண்டவம் படத்துக்கு ஆதரவான நிலையில் பேச தொடங்கினார்கள்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறானமுறையில் பயன்படுத்தப்படுவதாகவும், இந்து மதம் இழிவு செய்யப்படுவதாகவும், மதமாற்றம் குறித்தும் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. இதற்கு பாராட்டும், எதிர்ப்பும் சரிசமமாக கிடைத்தன.

இந்நிலையில் ருத்ர தாண்டவம் ட்ரெய்லரை டிவிட்டரில் வெளியிட்டு, ‘தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வந்துள்ள #ருத்ர தாண்டவம் வெற்றி பெற்றிட எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டார் பா.ஜ.க.வின் எச்.ராஜா. அதற்கு ஒருவர், ‘இப்படம் நிச்சயமாக தமிழ்நாட்டில் இது திரைக்கு வராது’ என்று பின்னூட்டம் இட்டார்.அதற்கு ராஜா, ‘வரும் வரவைப்போம் என பதிலளித்திருந்தார்

இதன் காரணமாக படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் குவியத்தொடங்கியது. இது போன்ற நட்சத்திர அந்தஸ்து இல்லாத படங்கள் பற்றிய செய்திகளை புறந்தள்ளும் ஊடகங்கள் படம் பற்றிய பரபரப்பு செய்திகளை தங்கள் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி லாபமடைந்தனர்.

அதேநேரம் "ருத்ர தாண்டவம்" சாதிப்படமா, மதமாற்றம் பற்றி பேசப்போகிறதா?, அரசியல் படமா என்கிற எதிர்பார்ப்பை பொதுவெளியில் ஏற்படுத்தியது. கொரோனா காலம், 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு, இதுவரை வந்த படங்களில் கோடியில் ஒருவன் தவிர்த்து அனைத்துமே தோல்வியை தழுவியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை கொடுத்த ஹிப் ஆப் தமிழா நடித்துள்ள சிவகுமாரின் சபதம் படத்துடன் களத்தில் இறங்கும் ருத்ர தாண்டவம் படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினார்கள்

அனைத்தையும் எதிர்கொண்டு தமிழகம் முழுவதும் 450 திரையரங்குகளுக்கு மேல் படத்தை தயாரிப்பாளரே நேரடியாக வெளியிட்டார். கதாநாயக அந்தஸ்து இல்லாத"ருத்ர தாண்டவம்" திரையரங்குகளை பார்வையாளர்கள் மூலம் அசுரத்தனமாக உலுக்கி எடுத்தது என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்

தமிழ்நாட்டில் படம் திரையிட்ட தியேட்டர்களில் பார்க்கிங், கேண்டின் வியாபாரமே 3 நாட்களில் கோடிகளை கடந்திருக்கிறது என்றால் மூன்று நாட்களில் படத்தின் மொத்த வசூல் என்னவாக இருந்திருக்கும் என்கிற கேள்விக்கு கிடைத்த பதில் பாக்ஸ்ஆபீஸ் வட்டாரத்தை மட்டுமல்ல தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்களையும் அதிர வைத்திருக்கிறது

ஆம் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் டிக்கட் விற்பனை மூலம் 7 கோடியே 38 லட்ச ரூபாய் வசூல் செய்திருக்கிறது"ருத்ர தாண்டவம்" கோடியில் ஒருவன் திரைப்படம் முதல் 7 நாட்களில் செய்த வசூலை காட்டிலும் கூடுதல் இது என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.

ருத்ரதாண்டவம் படத்திற்கு ஆதரவாக தொழில்முறை விமர்சகர் கூட ஆதரவாக எழுதவில்லை, அனைத்து ஊடகங்களும் படத்திற்கு எதிராகவே விமர்சனங்களை பதிவு செய்திருக்கின்றனர். ஒரு திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தரப்பில் செய்யக்கூடிய தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை.

ஆனால் படத்தை பற்றி ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. எதிர்மறையான விமர்சனங்கள் சிலநேரங்களில் விஸ்வரூப வெற்றியை பெற காரணமாகிவிடும் அது "ருத்ரதாண்டவம்" படத்திற்கு சாத்தியமாக்கியிருக்கிறது.

-அம்பலவாணன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

திங்கள் 4 அக் 2021