மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

ஐபிஎல்: மும்பையின் பிளேஆஃப் சுற்று வாய்ப்பைக் குறைத்த டெல்லி கேப்பிடல்ஸ்!

ஐபிஎல்: மும்பையின் பிளேஆஃப் சுற்று வாய்ப்பைக் குறைத்த டெல்லி கேப்பிடல்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்டோபர் 2) நடைபெற்ற 46ஆவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதை அடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். டி காக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 26 பந்துகளில் 33 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த பொல்லார்டும் 6 ரன்களில் வெளியேற மும்பை அணி 14.1 ஓவரில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த பாண்டியா சகோதரர்கள் அணியைச் சரிவிலிருந்து மீட்க போராடினர். டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் ஆவேஷ் கான் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதை அடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (6), தவான் (6), ஸ்டீவ் ஸ்மித் (9) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் 22 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் நிலைத்து நின்று ஆடினார். அக்சர் படேல் 9 ரன்னிலும் வெளியேறினாலும் ஹெட்மையர் 8 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர்வுக்கு சற்று காரணமாக இருந்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் 13.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தபோது ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 41 பந்தில் 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி பிரிந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஆட்டத்தை தன்வசமாக்கிவிடும் நிலை இருந்தது. ஆனால், அஷ்வின் ஒருபக்கம் பந்துக்கு பந்து ரன்கள் அடிக்க, மறுபக்கம் ஷ்ரேயாஸ் அய்யர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி நோக்கி சென்றது.

கடைசி ஓவரில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை அஷ்வின் சிக்சருக்கு விளாசினார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் 19.1 ஓவரில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பையின் அணியின் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

-ராஜ்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

ஞாயிறு 3 அக் 2021