மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய (அக்டோபர் 1) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் களமிறங்கினர். கில் 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவி பிஸ்மானி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த திரிபாதி தொடக்க வீரர் வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

திரிபாதி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால், அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அரை சதம் கடந்தார். அவர் 49 பந்துகளில் 67 ரன்கள் குவித்த நிலையில் ரவி பிஸ்மானி பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த நிதிஷ் ராணா 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மயங்க் அகர்வால் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 40 ரன்கள் குவித்து சக்ரவர்த்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த நிகோலஸ் புரன் 12 ரன்னிலும், மார்க்ரம் 18 ரன்னிலும் வெளியேறினர். ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் அரை சதம் விளாசினார். 55 பந்துகளில் 67 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் கடைசி ஓவரில் வெங்கடேஷ் பந்துவீச்சில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணியின் ஷாரூக் கான் 9 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 22 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று (அக்டோபர் 2) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற பஞ்சாப் - கொல்கத்தா இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிகள் அடிப்படையில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 47ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன. 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 2 அக் 2021