மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

‘மனம் வருந்துகிறேன்’ : ருத்ர தாண்டவம் பார்த்த பிறகு தங்கர் பச்சான்

‘மனம்  வருந்துகிறேன்’ : ருத்ர தாண்டவம் பார்த்த பிறகு தங்கர் பச்சான்

அக்டோபர் 1 அன்று வெளியாக உள்ள ருத்ரதாண்டவம் படம் திரைப்பட பிரபலங்களுக்குக் கடந்த இரண்டு நாட்களாகத் திரையிடப்பட்டு வருகிறது. படத்தைப் பார்த்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் படம் பற்றிய, தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில்,

மோகன் அவர்களுக்கு வணக்கம்...

என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை. தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையைச் செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன்.

உங்களின் முந்தைய திரைப்படம் “திரௌபதி” பெரும் வணிக வெற்றியை அடைந்திருந்தாலும் எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்து பாராட்டுபவர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுகளையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துத்தான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடித்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது மனம் வருந்துகிறேன்.

மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாகக் கருத்துகளாக முன் வைக்கின்றீர்கள் என்பதால் இப்படத்தைப் பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

எப்படியாவது, இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதைக் காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும்.

மக்களின் பலவீனத்தைப் பணமாக்குவதற்காக பொழுதுபோக்கு எனும் போதைப்பொருளைத் திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தைப் பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ரதாண்டவத்தை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி முதலீடு செய்த தொகையைப் பல மடங்காகத் திருப்பி எடுப்பது மட்டுமல்ல. சமூகத்தை நல்வழிப் படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை விதைப்பதும் ஆகும்.

இத்திரைப்படம் குறித்த குறைகள் எனக்குத் தேவையில்லை. இவ்வணிகச் சூழலில் கிடைத்த நடிகர்களைக் கொண்டு கிடைத்த வசதி வாய்ப்புகளைக் கொண்டு எவரும் பேசத் துணியாதவற்றைத் திரை ஊடகத்தின் மூலமாகப் பல கோடி மக்களின் இதயங்களுக்குக் கடத்தியிருக்கும் உங்களுக்கும் திரைப்படக் குழுவினருக்கும் இம்மக்களில் ஒருவனாக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-அம்பலவாணன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 29 செப் 2021