மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

ஐபிஎல்: பஞ்சாப் அணியைத் தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல்: பஞ்சாப் அணியைத் தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப்பைச் சாய்த்து மும்பை அணி ஐந்தாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு (செப்டம்பர் 28) அபுதாபியில் அரங்கேறிய 42ஆவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டது. பஞ்சாப் அணியில் கழுத்து பிடிப்பால் அவதிப்படும் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக மன்தீப் சிங் இடம் பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. மன்தீப் சிங் 15 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் (1 ரன்), லோகேஷ் ராகுல் (21 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் பொல்லார்ட் ஒரே ஓவரில் வெளியேற்றினார். இதில் ராகுலின் விக்கெட், டி20 கிரிக்கெட்டில் பொல்லார்ட்டின் 300ஆவது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்து 300 விக்கெட்டும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்தார்.

அடுத்து களம் இறங்கிய நிகோலஸ் பூரனும் (2 ரன்) தாக்குப் பிடிக்கவில்லை. 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் பஞ்சாப் தள்ளாடியது.

இதன் பின்னர் மார்க்ராமும் (42 ரன்), தீபக் ஹூடாவும் (28 ரன்) அணியை கவுரவமான நிலைக்கு நகர்த்தினர். 20 ஓவர்களில் அந்த அணி ஆறு விக்கெட்டுகளுக்கு 135 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட் தலா இரண்டு விக்கெட்டுகளும், ராகுல் சாஹர், குருணல் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா (8 ரன்), சூர்யகுமார் யாதவ் (0) ஒரே ஓவரில் அவுட் ஆகி அதிர்ச்சிக்குள்ளானார்கள். தொடர்ந்து குயின்டான் டி காக் 27 ரன்னிலும், சவுரப் திவாரி 45 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் மும்பை சற்று சிக்கலில் இருப்பதுபோல் தெரிந்தாலும் ஹர்திக் பாண்ட்யாவும் (40 ரன், 30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), பொல்லார்ட்டும் (15 ரன், 7 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கைகோத்து தடைகளைத் தகர்த்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு 7 ரன்னில் கேட்ச்சைத் தவற விட்டது பஞ்சாப்புக்குப் பின்னடைவாக மாறியது.

இரண்டாவதுகட்ட ஐபிஎல்லில் மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விக்குப் பிறகு பெற்ற முதல் வெற்றியாகும். மொத்தத்தில் ஐந்தாவது வெற்றியாகும். ஏழாவது தோல்வியைத் தழுவிய பஞ்சாப்புக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.

இன்றைய (செப்டம்பர் 29) 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

-ராஜ்

.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 29 செப் 2021